உலகம் முழுவதும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் சாண்ட்விச் முதல் 5 இடங்களுக்குள் உள்ளது. இரண்டு பிரெட் துண்டுகளுக்கிடையே இறைச்சியை வைத்து உண்ணும் உணவான சாண்ட்விச் முதன்முதலில் உருவாக்கப்பட்டது இங்கிலாந்தில் சாண்ட்விச்சில் தான். சாண்ட்விச் நகரத்தில் உருவாக்கப்பட்டதால் அந்தப்பெயரே உணவிற்கும் வைக்கப்பட்டது. சாண்ட்விச் உருவாகக் காரணமாக இருந்தவர் அந்நகரத்தின் பிரபுவான ஜான் மாண்டேகு (John Montagu). ஆள் சூதாட்டத்தில் மன்னர். படுபயங்கர சோம்பேறி என்கிறார்கள் மாண்டேகுவின் வரலாற்றைத் தொகுத்தவர்கள்.

சோம்பேறி பிரபு
மாண்டேகு சூதாட ஆரம்பித்தால் இடிவிழுந்தாலும் அவர்தலை அசையாது. காரியத்தில் கண்ணானவர். ஊரை ஒரு ரவுண்ட் சுற்றிவிட்டு வீட்டிற்கு வருவார். வந்ததும் ஒரு ரவுண்ட். அடுத்து சூதாடக் கிளம்பிவிடுவார். இந்த ரவுண்டுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இப்படி ஒருநாள் வீட்டில் பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாண்டேகுவை அவருடைய சமையல்காரர் மத்திய உணவிற்காக அழைக்கப்போக கிளம்பியது கோபம். தீட்டிவிட்டார் தீட்டி. “முக்கிய வேலையில்” ஈடுபடும்போது தொந்தரவு செய்தால் யாருக்குத்தான் கோபம் வராது? அவரிருக்கும் இடத்திற்கே உணவைக் கொண்டுவர உத்தரவிட்டார்.

அந்தப் பெயர் தெரியாத சமையற்காரர் பிரட்டுகளுக்கு இடையே மாட்டுக்கறியை வைத்து கொண்டுபோய் கொடுக்க மாண்டேகுவின் மண்டை சுவையினால் கிறுகிறுத்தது. அதற்கு அரைமணிநேரம் கழித்து ஜான் மாண்டேகு தான் முதலில் சாண்ட்விச்சை உண்டவர் என்று குறித்துக்கொண்டது வரலாறு. மதிப்பான பட்டம். பாக்கெட் முழுவதும் பணம். வரலாற்றுப் புத்தகத்தைப் புரட்டினால் ஆட்சியாளர்கள் பாதிப்பேர் இப்படித்தான். நமக்கு எதற்கு வம்பு? நாம் சாண்ட்விச்சைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வாங்க.
வியாபாரப் புரட்சி
மாண்டேகுவின் காலமான 1772 ற்குப் பின்னர் சாண்ட்விச் நகரத்தைச் சுற்றி சாண்ட்விச் விற்பனைக்கு வந்தது. எளிதில் எடுத்துச்செல்ல முடியும். அதைவிட எளிமையாக சாப்பிட்டுவிட முடியும். விலையும் கொசுறு தான். கொஞ்ச நாட்களில் ஒட்டுமொத்த பிரிட்டனும் சாண்ட்விச்சை அசைபோடத் துவங்கிவிட்டது. அமெரிக்க ஆசாமிகள் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா? அப்படி இருந்தால் அவர்கள் அமெரிக்கர்களா? சாண்ட்விச் அமெரிக்காவிற்குப் பயணமானது. இன்றைக்கும் அமெரிக்காவின் உணவுப்பொருட்களில் சாண்ட்விச் தனித்துவமான இடத்தினைப் பெற்றிருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் அமெரிக்கர்கள் ஒருநாளைக்கு 300 மில்லியன் சாண்ட்விச்சுகளை உண்கிறார்கள்.

சாண்ட்விச் தினம் !!
அமெரிக்கர்களுக்கும் சாண்ட்விச்சிற்கும் ஏகப்பட்ட பாசம் உண்டு. ஏனெனில் அதற்கென ஒரு நாளையே ஒதுக்கி கொண்டாடுகிறார்கள் அமெரிக்கர்கள். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 3 – ஆம் தேதி சாண்ட்விச் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
உலகத்தின் மிகப்பெரிய சாண்ட்விச் தயாரித்ததும் அவர்கள் தான். மிச்சிகன் மாநிலத்தில் 2005 – ஆம் ஆண்டு 2467.5 கிலோ அளவுள்ள சாண்ட்விச் தயாரிக்கப்பட்டது. 12 அடி அகலம். 12 அடி நீளம் !!!

நீங்கள் தான் தயாரிப்பீர்களா? நாங்கள் செய்ய மாட்டோமா? எனப்பொங்கி விட்டார்கள் லெபனான் நாட்டுக்காரர்கள். உடனே உலகத்தின் நீளமான சாண்ட்விச்சை தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். தயாரானது 2411 அடி சாண்ட்விச். இன்றுவரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.