சோடியம் குளோரைடு. எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறதா? நாம் சமைக்கும் உப்பின் அறிவியல் பெயர் தான் அது. இயற்கையின் வினோதமான பல விடயங்களில் உப்பும் ஒன்று. சோடியம் தனியாக இருந்தால் தானாகவே தீப்பிடித்து எரியும் தன்மை கொண்டது. குளோரைடை வைத்து வெடிகுண்டே தயாரிக்கலாம். இப்படிப்பட்ட கோபக்கார இரண்டு தனிமங்கள் ஒன்று சேர்ந்தவுடன் புத்தர் அளவிற்கு அமைதியாய் இருக்கிறது. இன்றைக்கு உப்பானது உப்பளங்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்ததே. அனால் பழங்காலங்களில் உப்பு எப்படி எடுக்கப்பட்டிருக்கும்? அதற்கு நீங்கள் கீழே படிக்கவேண்டும்.

இறைச்சியிலிருந்து …
உப்பு என்கிற சுவை மக்களுக்குத் தெரிந்தவுடன் அதை எப்படி எடுக்கலாம் என ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆரம்ப காலகட்டத்தில் விலங்குகளின் உடம்பிலிருந்து உப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னால் வெவ்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டிருக்கிறன. சில ஆசாமிகள் கடல்நீரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அது சிறுநீரகத்தை மொத்தமாகக் காலி செய்து விடும். இப்படிப் பல பிரச்சனைகளை எகிப்தியர்களும் சந்தித்தார்கள்.
உப்பிற்கு அவர்களிடத்தில் பெரும் மதிப்பு இருந்தது. உடல்களைப் பதப்படுத்துவதற்கு உப்பை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் தான். இப்போது மம்மியைப் பற்றிய ஞாபகம் வருகிறதா? நீங்கள் புத்திசாலிதான். அதற்கும் உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறந்தவர்களை நைல் (Nile) நதி வழியாகக் கொண்டு செல்ல உப்பு வரியாகச் செலுத்தப்பட்டது.

உப்பிற்காக நடந்த போர் !!
பழங்காலத்தில் இருந்தே இந்தக் கெட்ட பழக்கம் இருந்திருக்கிறது. தம்மிடம் இல்லாத பொருள் அடுத்தவரிடம் உள்ள போது உடனடியாக போர் ஒன்றை நடத்தி அதனை அபகரித்துக் கொள்வது. இப்படித்தான் இந்த மனித வரலாறு தொடர்ந்திருக்கிறது. இப்படித்தான் அமெரிக்கா, ஈராக் மீது படையெடுத்துச் சென்று…. அட அதை விடுங்கள் நாம் இப்போது சீனாவிற்கு போக வேண்டியிருக்கிறது. சீனாவிலும் உப்பிற்குக் கடும் கிராக்கி இருந்திருக்கிறது. இயற்கை அவர்களுக்கு பேருதவி ஒன்றைச் செய்திருந்தது.

ஷாங்க்ஷி (Shangxi) மாகாணத்தில் உப்பு ஏரி ஒன்று இருந்தது. அதுவும் கிறிஸ்து பிறப்பதற்கு 6000 வருடங்களுக்கு முன்னால். கோடைக்காலத்தில் ஏரியின் கரைகளில் படிந்திருக்கும் உப்பினைச் சேகரித்தார்கள் மக்கள். அந்த ஏரியைக் கைப்பற்றப் பல அரசர்கள் மல்லுக்கட்டியிருக்கிறார்கள். ஏரி முழுவதும் குருதி தோய்ந்து சிவப்பு நிறமாய் மாறியது. மெலியார் மேல் வலியார் சென்றார்கள். நான் தான் சொன்னேனே மனுஷப் பய ரொம்ப மோசமான ஆள் என்று.
உப்பில்லாப் பண்டம் தட்டினிலே
உண்மையில் இது தான் மிகப் பழைய பழமொழி. அன்றைக்கு உப்பு வைத்திருக்கிறவர் பணக்காரர்களாக மதிக்கப்பட்டார்கள். காலச்சக்கரம் உருண்டு ஓடியத்தில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. உப்பு சுவைக்காக மட்டும் சேர்க்கப்படும் பொருள் அல்ல. உப்பு நம் உடலியக்கத்திற்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. இரத்தத்தை நீர்ம நிலையில் வைக்கவும், இரத்த செல்களை உருவாக்கவும் உப்பு துணை புரிகிறது. மேலும், சிறுகுடல் நம் உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளவும் உப்பு அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உப்பினை சரியான விகிதத்தில் பயன்படுத்துவதும் மிக முக்கியம். இல்லையேல் நோய்கள் நம்மை இறுகக் கட்டிக்கொள்ளும்.