ஒரு நாளைக்கு எத்தனைக் கோப்பை காப்பி குடிக்கிறீர்கள் ? ஒன்று, இரண்டு என்பதெல்லாம் உங்கள் பதிலாய் இருந்தால் நீங்கள் சாது. பத்து நிமிடத்திற்கு ஒருமுறை காப்பித் தம்ளரை முத்தமிடும் ஆட்களெல்லாம் இருக்கிறார்கள். காப்பியின் மீதான காதல் என்பது பலராலும் தவிர்க்க முடியாதது. அவர்களுக்கு எல்லாம் இன்றைய நாள் திருநாள். ஏனெனில் இன்று உலக காப்பி தினம். காப்பியைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க !!
முதல் காப்பி
முதல் காப்பி எத்தியோப்பியாவில் தயார் செய்யப்பட்டிருக்கிறது. காப்பிகளுக்கு மூலமே காப்பிக் கொட்டைகள் தான். எத்தியோப்பியாவில் அதிகளவில் விளைந்த காப்பிக் கொட்டைகளை சுடுநீரில் கொதிக்கவைத்து குடித்திருக்கிறார் ஒரு துறவி. காப்பியைப் பற்றிய ஞானம் உலகத்திற்கு வந்தது அப்போதுதான். காலம் கி.பி 800.
பெரும் வியாபாரம்
உலகளவில் எண்ணெய் வியாபாரத்திற்கு அடுத்து அதிக வருமானத்தை ஈட்டுவது காப்பித் தொழில் தான். உலகம் முழுவதும் 50 நாடுகளில் காப்பிக் கொட்டைகள் விளைகின்றன. சுமார் 2 கோடியே 50 லட்சம் விவசாயிகள் காப்பி பயிரிடுகிறார்கள்.
காப்பியின் வகைகள்
காப்பிக் கொட்டைகள் இரண்டு வகைப்படும். அவை அராபிக்கா மற்றும் ரோபஸ்டா ஆகும். உலகத்தினில் கிடைக்கும் 75% காப்பிக் கொட்டைகள் அராபிக்கா வகையைச் சேர்ந்தவை. ரோபஸ்டா கசப்புத்தன்மை கொண்டிருப்பதால் அதிக மக்களைச் சென்றடையவில்லை.

அதிக உற்பத்தி
காப்பி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு பிரேசில். உலகக் காப்பி உற்பத்தியில் 40% பிரேசிலில் நடக்கிறது. இரண்டாவது இடத்தில் கொலம்பியாவும், வியட்நாம் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.
விலை உயர்ந்த காப்பிக் கொட்டை
உலகத்தின் விலை உயர்ந்த காப்பிக் கொட்டை கிழக்காசிய நாடுகளில் கிடைக்கிறது. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? 88 ஆயிரம் ருபாய்!! அது கிடைக்கும் முறையினைப் பற்றித் தெரிந்தால் நீங்கள் வாங்குவீர்களா? என்பது சந்தேகம் தான்.
சுமத்ரா, ஜாவா, இந்தோனேஷியா போன்ற இடங்களில் லுவாக் என்னும் காட்டுப்பூனை இனம் இருக்கிறது. காப்பிக் கொட்டைகளை விரும்பி உண்ணும் இந்தப் பூனையின் கழிவிலிருந்து காப்பி விதைகளை எடுத்து சுத்தம் செய்து விற்பனைக்குத் தயார் செய்வார்கள். கடினமான காப்பிக் கொட்டையின் மேலோட்டினை பூனையின் இரைப்பை செரித்து விதைகளை வெளியேற்றிவிடும். உலகளவில் விலையுயர்ந்த காப்பிக் கொட்டைகள் இப்படித்தான் கிடைக்கின்றன.

தடை செய்யப்பட்ட பொருள் !!
காப்பிக்கு மனிதர்கள் அடிமையாகிவிடுவார்கள் என்றும், சிந்தனையை தடுக்கிறது என்றும் காரணம் காட்டி வரலாற்றில் 5 நாடுகளில் காப்பி தடை செய்யப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில் காப்பி பருகுவதைத் தடை செய்த நாடுகள் மெக்கா, இத்தாலி, ஓட்டமான் சாம்ராஜ்யம், பிரஷியா, சுவீடன்.
அதிகம் குடிப்பவர்கள்
காப்பி குடிப்பதிலும் அமெரிக்கர்கள் சாதனையைத் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் 80% மக்கள் காப்பி குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். ஆண்டுக்கு சுமார் 14600 கோடி கோப்பை காப்பிகளை அமெரிக்கர்கள் குடிக்கிறார்கள்.!!

காப்பியும் நானே வைனும் நானே
காப்பி விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியதும் அதற்குப் பெயர் வைக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்கள் ஏமன் நாட்டவர்கள். வைத்த பெயர் Qahwah. அப்படியென்றால் Wine என்று அர்த்தம். தமிழில் சொன்னால் பழச் சாராயம். பின்னால் வந்த துருக்கிக்காரர்கள் kahveh என்றார்கள்.
அதெல்லாம் எங்கள் வாய்க்குள் நுழையாது என்று அடம்பிடித்த டச்சுக்காரர்கள் koffie என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
உங்க ஊருல தான் இருக்குப் பேரு koffie, எங்க ஊருல இதுக்குப் பேரு coffee என்று ஆரம்பித்தவர்கள் இங்கிலாந்துக்காரர்கள் தான். பெயரில் என்ன இருக்கிறது? சுவையில் தானே இருக்கிறது. எங்கே போகிறீர்கள்? ஓ காபி குடிக்கவா?