இரண்டாம் உலகப்போரின் கடைசி அத்தியாயங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்த நேரம். சாலமன் தீவுகளில் துப்பாக்கியால் வித்தை காட்டிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் யூஎஸ்எஸ் ஓ – பனான்(USSO ’Bannon) கப்பல். வரும் வழியில் ஜப்பானின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தன் புலன்களையெல்லாம் அடக்கிக் கடலுக்குள் காத்திருந்தது. எதிர்பாராத விதமாக அமெரிக்கர்களால் தாக்குதலைத் தொடங்க இயலாமல் போகவே சமைப்பதற்கு எடுத்துச்சென்ற உருளைக் கிழங்குகளை ஜப்பானியக் கப்பலின் மீது வீசத்துவங்கினர். கையெறி குண்டுகள் எனப் பயந்து பின்வாங்கிய கப்பலைப் பின்னர் துரத்திச் சென்று தாக்கியது அமெரிக்கப்படை.

தூங்கிக்கொண்டிருந்த ஜப்பான் வீரர்கள்!!
தெற்குப் பசிபிக்கில் அமெரிக்க கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாகவே எச்சரிக்கை சமிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. தூரத்தில் புள்ளியாய்த் தெரிந்த கப்பல் ஜப்பானியக் கப்பலான ஆர்ஓ – 34 (RO-34) தான் என்று அவர்கள் உணர்ந்த போது இரண்டு கப்பல்களும் சில அடி தூரத்தில் நின்றிருந்தன. தாக்குதலுக்குத் தயாராகும் படி அமெரிக்க கப்பல் கேப்டன் உத்தரவிட்டார்.
அமெரிக்க வரலாற்றில் புகழ் பெற்ற கப்பலான பனான் உண்மையிலேயே ஒரு ராட்சசன். 17 விமானத்தை வீழ்த்தக்கூடிய ஏவுகணைகள், வெடி மருந்து பேரல்கள், 5 அங்குல 38 காலிபர் துப்பாக்கிகள் எனப் போர்க் கப்பலுக்கான எல்லா லட்சணங்களையும் கொண்டது. ஜப்பானியக் கப்பல் சில அடி தூரத்தில் நின்று கொண்டிருந்தது. ஆனால், தாக்குதல் நடத்துவதற்கான எந்த முயற்சியையும் ஜப்பானியர்கள் மேற்கொள்ளவில்லை. அமெரிக்கர்களுக்கு ஆச்சர்யாமாயிருந்தது. முன் பக்கத்திலிருந்த ஒரு அமெரிக்க வீரன் கத்தினான். “எல்லோரும் தூங்குகிறார்கள்” என்று. வெடிமருந்து நிரப்பிய வெடிக்கண்ணியை ஜப்பானியக் கப்பலின் மீது பிரயோகிக்கலாம் என்று துணைக் கேப்டன் அறிவுரை வழங்கினார். இரு கப்பல்களும் அருகருகே இருப்பதனால் தாக்குதல் நம்மையும் பாதிப்படையச் செய்யும் என்று மறுத்துவிட்டார் கேப்டன்.
உருளைக்கிழங்குக் குண்டுகள்!!

பின்வாங்கிய பிறகே தாக்குதல் நடத்த முடியும் என்பது தெளிவாய்த் தெரிந்தது கேப்டனுக்கு. அமெரிக்கக் கப்பல் பின்வாங்கிக்கொண்டிருக்கும் போது ஜப்பானியர்கள் விழித்துக் கொண்டார்கள். அமெரிக்க வீரர்கள் தாக்குதல் நடத்த கேப்டனின் அனுமதிக்காகக் காத்திருந்தார்கள். “போதுமான தூரம் இன்னும் நாம் விலகவில்லை. எனவே இப்போது தாக்குதல் நடத்துவது தற்கொலைக்குச் சமம்” என்றார் கேப்டன். ஜப்பானியர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். யோசித்துக் கொண்டிருந்த அமெரிக்கக் கேப்டன் சமயலறையில் உருளைக்கிழங்கு இருக்கிறதா என வீரர்களிடம் கேட்டார். புரியாமல் தலையைச் சொரிந்த வீரர்களிடம் திட்டத்தை விளக்கினார் கேப்டன். சற்று நேரத்திற்கெல்லாம் ஜப்பானியக் கப்பலின் மீது உருளைக்கிழங்கு மழை பொழியத் துவங்கியது.
இறுதிப்பயணம்

உருளைக்கிழங்குகளை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல், தங்களை நோக்கி வீசப்படுபவை கையெறி குண்டுகள் என நினைத்தார்கள் ஜப்பானியர்கள். அவர்களை யோசிக்கவிடாமல் தொடர்ந்து எறிந்துகொண்டே இருந்தார்கள் இவர்கள். ச்சே , இதற்கா பயந்தோம் என்று ஜப்பானியர்கள் உச் கொட்டிய போது அமெரிக்கக் கப்பல் போதுமான தூரம் பின்வாங்கியிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அமெரிக்கப் பீரங்கியின் மூக்கு ஜப்பானியக் கப்பலைக் குறி வைத்தது. பலத்த ஓசையுடன் ஜப்பானியக் கப்பல் வெடித்துச் சிதறியது. அந்தக் கப்பலில் பயணித்த 66 பெரும் இறந்து போனார்கள்.
பயணத்தை முடித்து அமெரிக்க வீரர்கள் ஊர் திரும்புகையில் இந்நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. வீரர்களுக்கு விவசாயிகளின் சார்பில் உருளைக்கிழங்கு மூட்டைகள் அளிக்கப்பட்டனவாம். 1970-ஆம் ஆண்டு ராட்சதக் கப்பல் பனான் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது. ஆனாலும், அமெரிக்கக் கப்பற்படை வீரர்களின் உதடுகள் இன்னும் அக்கப்பலைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.