2011 ஆம் ஆண்டு டிசம்பர் 28. வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங் முழுவதும் மனிதர்களால் நிரம்பியிருந்தது. அண்டை நகரங்களிலிருந்து, கிராமங்களில் இருந்து சாரை சாரையாக மக்கள் தலைநகர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். எங்கும் மனித தலைகள். கூச்சலும், அழுகையும், கண்ணீருமாக கூட்டம் காத்திருந்தது. அதிபர் மாளிகையின் முன்னாள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. அத்தனை மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அதிபர் கிம் ஜாங் இல் (Kim Jong Il) -ன் உடலை ஏந்திய வாகனம் மாளிகையிலிருந்து கிளம்பி நகரத் துவங்கியது.
1994 ஆம் ஆண்டு முதல் வடகொரியாவின் 2011 வரை அதிபராக இருந்தவர். உலகின் வல்லரசான அமெரிக்கர்களின் தூக்கத்தைக் கெடுத்தவருடைய இறுதி ஊர்வலம் மிக சாதாரணமாக நடைபெற்றது. கண்களை கசக்கிக்கொண்டே காரைப் பின்தொடர்ந்தார் அதிபருடைய இளைய மகன் கிம் ஜாங் உன் (Kim Jong Un), அப்போது அவருக்கு வயது 26. வட கொரியாவின் வரலாற்றில் இதுவரை யாருமே பார்த்திடாத குரூர மனம் கொண்ட உன்னை அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அப்பாடா முடிந்தது கதை என சியர்ஸ் சொல்லிக்கொண்டார்கள் அமெரிக்கர்கள்.
வடகொரிய மக்களுக்கு தேர்தல் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது. அதிபர் தான் கடவுள். அவருடைய அதிகாரிகள் உப தெய்வங்கள். அதிபருக்குப் பிறகு அவருடைய மகன் அதிபராவார். யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? வாழ்க கோஷம் போடுவதற்கென்றே பிறந்த கூட்டம் அது. அப்படித்தான் கிம் ஜாங் உன் பதவியேற்பு நடக்கும்போதும் “வாயார வாழ்த்தினார்கள்” மக்கள். அவர்களால் வேறென்ன செய்ய முடியும்? மேற்குலகம் ஆச்சர்யமாக கொரிய தீபகற்ப அரசியலை கவனித்துக்கொண்டிருந்தது. இன்னும் சில ஆண்டுகள் தான் வடகொரியா தாக்குப்பிடிக்கும் என ஆரூடம் சொன்னார்கள் பழுத்த அரசியல்வாதிகள். ஆனால் நடந்தது என்னவோ வேறு…
தலைமறைவு
கொரிய அதிபர் வம்சத்தில் ஒரு பழக்கம் இருந்தது. சிறுவயதிலேயே தங்களது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிடுவர். கிம் ஜாங் உன் இப்படித்தான் சுவிட்சர்லாந்திற்கு அனுப்பப்பட்டார். அந்நாட்டிற்கான வட கொரிய தூதுவருடைய குழந்தை என்ற போர்வையிலேயே உன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். புதிய பெயருடன் கல்வி கற்கத் தொடங்கினார் உன். கல்லூரி படிப்பு முடியும் வரை உன் பற்றிய வரலாறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர் வட கொரிய தூதரக அதிகாரிகள். நிழல் போல பாதுகாப்பு அதிகாரிகள் உன்னை பின்தொடர்ந்தார்கள். எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள்ளே வளர்க்கப்பட்டார் உன்.

இப்படி தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்த உன் வட கொரியாவிற்கு திரும்பியது தன் தந்தை இறப்பதற்கு ஓராண்டு முன்பாகத்தான். அரசியலில் அனுபவமே இல்லாத உன்னின் கைகளில் அதிபர் பதவி சிக்கியது. ஐரோப்பிய வாழ்க்கை முறை, மேற்கத்திய சிந்தனை கொண்டவராக உன்னை நினைத்தார்கள் உலக தலைவர்கள். அமெரிக்காவை எதிர்த்து அரசியல் செய்வதற்கெல்லாம் அபாரமான அரசியல் அறிவு, பலம் வேண்டும். இன்னொரு விதமாகச் சொல்லவேண்டும் என்றால் சுவிட்சர்லாந்தின் எங்கோ ஓர் மூலையில் வளர்ந்த 26 வயது இளைஞனுக்கு அமெரிக்காவை எதிர்க்கும் தில் இருக்காது என்றே நினைத்தனர் பலரும்.
பதவியேற்ற உடனேயே போக்குவரத்து, கட்டுமானம், கனரகத் தொழிலில் தாராளமய கொள்கைகள் பின்பற்றப்படும் அறிவித்தார் உன். கிம் வம்சத்தில் இப்படியொரு அதிபரா? என ஆச்சர்யப்பட்டனர் மக்கள். அதுமட்டுமல்ல புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ஏழைகள் என யாருமே வட கொரியாவில் இருக்க மாட்டார்கள், இலவச கல்வி அளிக்கப்படும் என அதிபர் அறிவிக்க, இதெல்லாம் நிஜம்தானா? என கிள்ளிப்பார்த்தனர் மக்கள். அதிபருக்கு அக்கறையைப் பாருங்கள் என சில்லறையை சிதற விட்டார்கள் சிலர். ரஷியாவுடனான நட்புறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடிவுகள் எடுத்தார். அமெரிக்க விசுவாசிகளுக்கு புரையேறியது.
மக்களாட்சியாக இருந்தாலும், சர்வாதிகார ஆட்சியாக இருந்தாலும் தலைவனை எடைபோட கொஞ்சகாலம் போதும். உன் அறிவித்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதற்கான முயற்சிகள் கூட எடுக்கப்படவில்லை. ஆனால் அதிபர் தினமும் மக்களுக்கான புதிய திட்டங்களை அறிவித்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் இனி நமக்காக எதுவும் அரசாங்கம் செய்யாது என்ற முடிவிற்கு மக்கள் வந்திருந்தனர். அப்போதும் அதிபர் தனது மக்கள் நல அறிவிப்புகளை வெளியிடத்தான் செய்தார்.
அப்படியென்றால் உன் எதுவுமே செய்யவில்லையா? செய்தார். நாட்டைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தினார். வட கொரியாவில் இருந்து எந்தத் தகவலும் வெளிநாட்டிற்கு அனுப்ப முடியாது. வெளிநாட்டுப் புத்தகங்களுக்கு தடை. வெளிநாட்டு படங்கள், ரேடியோ, இசை என அனைத்தும் தடை செய்யப்பட்டன. கடுமையான தணிக்கைக்குப்பிறகே வெளிநாட்டு நிகழ்ச்சிகள் வட கொரியாவில் வெளியிடப்பட்டன. வட கொரியர்கள் பயன்படுத்த பிரம்மாண்ட இன்டிரா நெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது வட கொரிய மக்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துவார்கள். அதில் இருப்பதெல்லாம் அரசாங்கம் அளிக்கும் தரவுகள் மட்டுமே. ஆட்சிக்கோ, அதிபருக்கோ எதிராக ஒருவார்த்தை கூட அந்த இணையத்தில் நீங்கள் பார்க்க முடியாது. போலவே அம்மக்களாலும் அரசிற்கு எதிராக எழுத முடியாது. இப்படி வெளியுலகத்திற்கும் வட கொரியாவிற்கும் இடையே பிரம்மாண்ட தொழில்நுட்ப சுவரைக் கட்டினார் உன்.

இன்றைக்கும் வட கொரியாவைப் பற்றியோ, அங்குள்ள மக்களின் நிலைபற்றியோ நம்மால் நேரடியாக ஏதும் அறிய முடிவதில்லை. அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அளிக்கும் தகவல்கள் மட்டுமே இன்றளவிற்கும் வடகொரியா பற்றி அரிய உதவிசெய்கிறது. தப்பி வந்தவர்கள் என்றதும் சந்தேகம் வருகிறதா? ஆமாம். வட கொரிய மக்கள் வெளிநாடு செல்ல அத்தனை எளிதில் அனுமதி வழங்கப்படுவதில்லை. உங்களுடைய முழு ஜாதகத்தையும் அலசிய பின்னரே அரசுத்தரப்பு “முடியாது” என்று சொல்லும். தப்பிச்செல்லலாம் என்று தோன்றுகிறதா? அது ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி சொல்லிவிடுகிறேன். அதன்பின் நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.
சொல்லப்போனால் வட கொரியாவில் இருந்து உங்களால் எங்குமே தப்பிச்செல்ல முடியாது. கடுமையான ராணுவ பரிசோதனைகள் இருக்கும். உலகின் 25வது பெரிய ராணுவம் வட கொரியாவுடையது. தடுப்பு வேலிகளில் 24 மணி நேரமும் காவல் இருக்கும். அதற்கு முன்னரே குறைந்தது மூன்று இடங்களில் நீங்கள் சோதனையிடப்படுவீர்கள். இத்தனையும் தாண்டி ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றால் அடுத்த வினாடியே மத்திய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துவிடும். எந்த நாடாக இருந்தாலும் மீண்டும் அவர்களை வடகொரியாவிற்கு கொண்டு வர அதிதீவிர முயற்சிகள் எடுக்கப்படும். அப்படி அழைத்து வருபவர்களை உடனடியாக சித்திரவதை முகாமிற்கு அனுப்பிவிடுவார்கள்.
கடுமையான சட்டங்கள் அங்கே பின்பற்றப்படுவதால் வட கொரிய சிறைச்சாலைகள் எப்போதும் ஹவுஸ்புல் தான். மேலும் அங்கே குற்றவாளிக்கு மட்டும் தண்டனை அளிக்கப்படுவதில்லை. குற்றவாளியின் தந்தை, மகன் என மூன்று தலைமுறையினர் கைது செய்யப்பட்டு இந்த முகாம்களில் அடைக்கப்படுவர்.
ஹிட்லர், ஸ்டாலின் போலவே கைதிகளை சித்ரவதை செய்வதற்கு பிரத்யேக சிறைச்சாலைகளை கட்டியவர்கள் வட கொரிய அதிபர்கள். கடுமையான சட்டங்கள் அங்கே பின்பற்றப்படுவதால் இந்த சிறைச்சாலைகள் எப்போதும் ஹவுஸ்புல் தான். மேலும் அங்கே குற்றவாளிக்கு மட்டும் தண்டனை அளிக்கப்படுவதில்லை. குற்றவாளியின் தந்தை, மகன் என மூன்று தலைமுறையினர் கைது செய்யப்பட்டு இந்த முகாம்களில் அடைக்கப்படுவர். போதிய உணவு, பெண்களுக்கான பாதுகாப்பு, ஓய்வு என எதுவும் அந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. தினமும் 12 மணிநேர வேலை. இரண்டு வேலை உணவு. தாங்க முடியாத சித்ரவதைகள் என அந்தச் சிறைகள் இன்னும் பலருக்கு ஒரு கொடும் கனவாகவே இருக்கிறது.
வட கொரியாவைப் பொறுத்தவரை திருட்டு மன்னிக்க முடியாத குற்றமாகும். 2016 ஆம் ஆண்டு ஓட்டோ வார்ம்பியர் என்னும் அமெரிக்க இளைஞன் வடகொரியாவிற்கு பயணித்தார். அவர் தங்கியிருந்த விடுதியில் ஒட்டப்பட்டிருந்த அரசாங்க அறிவிப்பு ஒன்றை அவர் எடுத்துவிட்டதாக 15 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். பிரச்சினை பூதாகரமாக வெடிக்கவே 17 மாதங்களில் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அடுத்த ஒரு மாதத்திற்குள் வார்ம்பியர் மனநோய் காரணமாக இறந்துபோனார். சிறைச்சாலையில் அவர் அனுபவித்த சித்ரவதைகள் அவரை மனநோயாளியாக மாற்றிவிட்டதாக அமெரிக்க மருத்துவர்கள் அறிவித்தார்கள்.
அண்ணன் – தம்பி
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவான நாடு கொரியா. அமெரிக்காவும், ரஷியாவும் ஆளுக்குப்பாதியாக நாட்டைப் பிரித்துக்கொள்ள, அமெரிக்க ஆதரவு தென்கொரியா ஜனநாயக பாதையையும், ரஷிய ஆதரவு வட கொரியா சர்வாதிகார பாதையையும் தேர்ந்தெடுத்தது.
அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கும் நேரத்தில், வடகொரியாவில் கொரோனாவே இல்லை என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்!
இந்த எழுபது ஆண்டுகால வரலாற்றில் தென்கொரியா எத்தனையோ விஷயங்களில் முன்னேறியிருக்கிறது. தொழில்நுட்பத்தில் மேற்கத்திய நாடுகளோடு போட்டிபோடும் நிலையில் தென்கொரியா இருக்கிறது. 2020 -ல் கொரோனாவை மிக விரைவாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடு தென் கொரியாதான். ஆனால் வட கொரியாவின் நிலை பரிதாபத்திற்கு உரியது. கொரோனா எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கும் நேரத்தில், வடகொரியாவில் கொரோனாவே இல்லை என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்!
வட கொரியாவின் 97% இடங்களில் இன்னும் சாலைகளே அமைக்கப்படவில்லை என்கின்றனர். ஆயிரத்தில் 11 பேர் மட்டுமே அங்கே கார் வைத்திருக்கின்றனர். மீதமுள்ள அனைவரும் பொதுப்போக்குவரத்தையே நம்பியிருக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத்திலும் அந்நாடு பின்தங்கியே இருக்கிறது. 25 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டில் 3.2 மில்லியன் செல்போன்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. அதாவது பத்தில் ஒருவர் செல்போன் உபயோகிக்கிறார். மேலும் அந்நாட்டில் ஒரே நெட்வொர்க் தான் இயங்கிவருகிறது. கொரியோலிங் நெட்வொர்க் சமீப காலங்களில் லாபகரமானதாக இயங்கி வந்தாலும் தென்கொரியாவுடன் ஒப்பிடுகையில் அதலபாதாளத்தில் இருக்கிறார்கள் வட கொரியர்கள்.
உட்கட்டமைப்பில் இத்தனை பின்னடைவுகள் இருந்தாலும் உன் ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை ஆகியவற்றில் மட்டுமே தனது கவனத்தைக் குவித்துவந்தார். பதவியேற்ற 2011 ஆம் ஆண்டுக்குப்பிறகு இதுவரை ஆறு முறை அணுகுண்டு சோதனை நடத்தியிருக்கிறது உன் அரசு. நிலக்கரி ஏற்றுமதியை மட்டுமே பெருமளவில் நம்பியிருக்கும் அந்நாட்டு பொருளாதாரத்தை மேலும் வலுவிழக்க செய்யும் விதமாக நிலக்கரி இறக்குமதியை தடை செய்வதாக சீன அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. வடகொரிய நிலக்கரி அதிகம் விற்கப்படுவது சீனாவில் தான். பொதுமக்களுக்கு ஏவுகணைகள் சோறு போடாது என உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்வதில்லை உன்.
மறுபக்கம்
கிம் ஜாங் உன் பயங்கர சபலவாதி. அவரது தந்தை தனக்காக அந்தப்புரம் ஒன்றைக் கட்டியிருந்தார். அதில் அதிபருக்கு சேவை செய்ய பணிக்கப்பட்டவர்கள் பள்ளி மாணவிகள். இதே கொடூர நடைமுறை ‘உன்’ காலத்திலும் பின்பற்றப்பட்டது. நாடு முழுவதும் உன்னிற்கு 17 அரண்மனைகள் இருக்கின்றன. இவையனைத்திலுமே அதிபரின் பணிப்பெண்கள் இருக்கிறார்கள். அதிபரின் மாளிகையிலேயே பெரியது ரியோன்சாங்கில் இருக்கும் மாளிகை தான். சுமார் 4.6 சதுரமைல் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனையில் பிரைவேட் ஜெட், குண்டு துளைக்காத கார், மிகப்பெரிய நீச்சல் குளம் என பல ஆடம்பர வசதிகள் இருக்கின்றன.
குடி..குடி.. மொடாக்குடி
உன் சிறந்த குடிமகன். வருடத்திற்கு 30 மில்லியன் டாலர் அளவிற்கு வெளிநாட்டிலிருந்து மது இறக்குமதி செய்யப்படுகிறது. இவையனைத்தும் உன் ஒருவருக்காக மட்டுமே. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தனித்தனியாக பிரத்யேக மதுவகைகள் வரவழைக்கப்படுகின்றன. இதற்கென தனியாக அதிகாரிகளே இருக்கிறார்கள். ஒரே சிட்டிங்கில் 2 போத்தல் ஷாம்பெயினை கபளீகரம் செய்வாராம் உன்.

மதுவகைகளைப் போலவே அசைவ உணவிலும் அதீத ஆர்வம் கொண்டவர் அதிபர். வெண்பன்றி, ஒட்டகம், மாடு, மான் என காட்டில் இருக்கும் அனைத்துமே அதிபரின் உணவுப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு இறைச்சியும் ஒவ்வொரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு வெண்பன்றி இறைச்சியை டென்மார்க்கில் மட்டுமே வாங்குகிறார்கள். ஒட்டகம் ஈரானிலிருந்து. இப்படி தேடித்தேடி தின்றதால் தற்போது அதிபரின் எடை 131 கிலோ. இதில் புகைப்பழக்கம் வேறு. ஈவ்ஸ் செயின்ட் லாரென்ட் (Yves saint laurent) எனும் சிகரெட் தான் அதிபருக்கு பிடித்த பிராண்ட். ஆறாவது விரலாகவே சிகரெட் இருந்திருக்கிறது உன்னிற்கு. (ஈவ்ஸ் சிகரெட் ஒரு பாக்கெட்டின் விலை 55 டாலர்கள், அதாவது இந்திய ரூபாயில் ரூ.4192/- !!)
அதிபருக்கு விமான பயணம் என்றால் பயம். இதனாலேயே ரயில் போக்குவரத்தை அவர் பயன்படுத்தி வருகிறார். சமீபத்தில் சீனாவிற்கு நட்புணர்வு ரீதியாக செல்லும்போதுகூட ரயிலைத்தான் தேர்ந்தெடுத்தார் உன்.
எந்த நாட்டிற்குமே பயணம் மேற்கொள்ளாத அதிபர் சீனாவிற்கு சென்றது உலக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. தன்னுடைய பிடிவாத குணங்களை தளர்த்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக உன்னிற்கு தோன்றியிருக்கலாம்.
பழிக்குப்பழி
தனது மாமா ஜாங் சாங் தாயிக்கிற்கு எதிராக தேசத்துரோக வழக்கைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனையும் விதித்தார் உன். இத்தனைக்கும் உன் அரசியலுக்கு வர பெரிதும் உதவிசெய்தவர் தாயிக். அவரால் தனது பதவிக்கு ஆபத்து வரும் என்ற ஒரே காரணம் அவரைக்கொல்ல போதுமாயிருந்தது உன்னிற்கு. 2018 ஆம் ஆண்டு தனது சகோதரன் கிம் ஜாங் நம் (கிம் ஜாங் இல்லிற்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர்.) மலேசிய விமான நிலையத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதற்கும் காரணம் உன் தான் எனப்பேசப்படுகிறது.
நாதஸ் திருந்திட்டான்…
நினைத்ததை நிறைவேற்றியே ஆகவேண்டும். அதற்கு எவரையும் எதிர்க்கலாம் என்னும் நிலையில் இருந்து நெளிவுசுழிவாக அரசியலை முன்னெடுக்கும் நிலைக்கு உன் வந்திருக்கிறார். தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தைகள், டொனால்ட் ட்ரம்ப் – உன் சந்திப்பு, தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் வட மற்றும் தென்கொரிய வீரர்கள் ஒரே அணியாக களமிறங்கியது என அவருடைய அடுத்தடுத்த நடவடிக்கைகள் “பாசிட்டிவ்” ஆகவே இருக்கின்றன. எதிர்ப்பு அரசியல் வெகுகாலத்திற்கு நீடிக்காது என்ற புகழ்பெற்ற வாசகம் மீண்டும் வரலாற்றால் படிக்கப்பட்டுகொண்டிருக்கிறது.

இனி என்ன?
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட உன்னின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பல தகவல்கள் தினமும் வந்தவண்ணம் இருக்கின்றன. சீன வெளியுறத்துறை அதிகாரி ஒருவர் உன் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். வட கொரியாவைப் பற்றிய பல கதைகளைப்போலவே உன்னின் உடல் நிலை பற்றிய செய்திகளும் மர்மமாகவே உள்ளது. ஜப்பானிய ஊடகம் ஒன்று கிம் ஜாங் உன் நினைவை இழந்துவிட்டார் என்று கூறியிருக்கிறது. ஆனால் அந்நாட்டு அரசு இதுவரை எதுவும் சொல்லவில்லை. 2014 -ம் ஆண்டில் ஒரு மாதம் வரை கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. அப்போதும் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹையான் கொல்லப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. அதிபர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது ஹையான் உறங்கியது தான் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றம்.
வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹையான் கொல்லப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. அதிபர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது ஹையான் உறங்கியது தான் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றம். வழக்கம் போலவே வட கொரிய அரசாங்கம் அச்செய்தியை மறுத்தது. ஆனாலும் மேற்குலகம் விடுவதாக இல்லை. இறுதியில் ஹையான் தொலைக்காட்சியில் தோன்றி விளக்கமளித்தார். இப்படி வட கொரிய அரசாங்கத்தில் எதையுமே உறுதியாக நம்பிவிட முடியாத புனைவாகவே மாற்றியிருந்தார் உன். இப்போது உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தியையும் இதனடிப்படையிலேயே பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒருபக்கம் கொரோனாவால் உலக பொருளாதாரம் வீழ்ந்து கொண்டிருக்கையில், வட கொரியா இப்படி இன்னொரு சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. வளர்ச்சியில் அந்நாடு அடையவேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இத்தனை பெரிய பயணத்தில் ஈடுபடும் அம்மக்களை வழிநடத்த உன்னை இயற்கை அனுமதிக்குமா? அப்படியில்லை எனில் இனி வடகொரியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போவது யார்? கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் இணைந்ததைப்போல் வட கொரியாவும் தென்கொரியாவும் இணையுமா? இப்படி ஏராளமான கேள்விகள் தொக்கி நிற்கின்றன. காத்திருப்பதைத் தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை தற்போது.
வடகொரியா பற்றி நமது தளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற மேலும் பல கட்டுரைகள் இங்கே…