சமகால உலக அரசியல் வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட ஒரு அரசியல் தலைவர் என்றால் அது சிரியாவி்ன் அதிபரான பஷார் அல் அசாத் தான். காரணம் சிரியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்நாட்டுப்போர். இந்தப் போரினால் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். நாட்டின் 48 சதவீத நகரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாபெரும் உள்நாட்டுப் போரினால் சிரியாவிற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு சுமார் 15 இலட்சம் கோடிகள் என ஐ.நா அறிவித்திருக்கிறது. பாரம்பரிய அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த அசாத் தான் இந்த உள்நாட்டுப்போருக்கு பிள்ளையார்சுழி போட்டவர். சொந்த நாட்டு மக்களின் மீது அப்படியென்ன வெறுப்பு அசாதிற்கு? இங்கிலாந்தில் மருத்துவம் படித்த அசாத் எப்போது சர்வாதிகாரியாக மாறினார்? லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த இப்போராட்டத்தின் விதை வந்து விழுந்தது பொருளாதார நடவடிக்கை என்னும் பெயரினால்.
ஆரம்ப காலம்
பஷார் அல் அசாத்தின் தந்தை ஹபீஸ் அல் அசாத் தான் சிரியாவின் முன்னாள் அதிபர். மாரடைப்பு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு அவர் இறந்துபோகவே, அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் பஷார். தேர்தலெல்லாம் இல்லை. பஷார் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஹபீஸ் அல் அசாத்திற்கு இதயநோய் இருந்தது. நாட்டின் அரசியல் மூத்த தலைகள் அப்போதே முடிவெடுத்து வைத்திருந்தார்கள். ஹபீசுக்கு பின்னர் பஷார் தான் என.
பஷாரின் அண்ணனான பஸ்ஸல் தான் அடுத்த அதிபராவார் என நாடுமுழுவதும் பேசப்பட்டது ஒருகாலத்தில். நிதானம், தொலைநோக்குப் பார்வைகொண்ட அரசியல் பேச்சுகள் என சிரியாவின் ஹீரோவாகவே இருந்த பஸ்ஸல் 1994 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்துபோனார். மூத்த மகனைத்தான் தனது அரசியல் வாரிசாக நினைத்தார் ஹபீஸ். ஆனால் காலம் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. அப்படித்தான் அதிபர் நாற்காலி பஷாரிடம் வந்தது.
எதிர்க்குரல்
சிரிய மக்களிடத்தில் பஸ்ஸலுக்கு இருந்த செல்வாக்கு பஷாருக்கு இல்லை என்பது விரைவிலேயே தெரிந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது, சிரியாவின் கள அரசியல் குறித்த அறிவோ, அனுபவமோ அவரிடம் இருக்காது என்ற எண்ணம் எல்லோரிடமும் இருந்தன. அமைச்சரவையில் இருந்த மூத்த அதிகாரிகளே தங்களுக்குள் முனகினர். அடுத்தது இனப்பிரச்சினை. காலங்காலமாக உலகத்தைப் படாதபாடு படுத்திவரும் இந்தப் பிரச்சினை பஷாருக்கும் வந்தது.
சிரியா அடிப்படையில் கணிசமான சன்னி முஸ்லீம்களைக்கொண்ட நாடு. கணிசம் என்றால் 70 – 80 சதவிகிதத்தினர் சன்னி முஸ்லிம்கள் தான். ஷியா முஸ்லீம்களின் சதவிகிதம் வெறும் 10 மட்டுமே. ஆனால் சிரியாவின் ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்கள் அனைவரும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். எப்படி? எனக் குழப்பமாக இருக்கிறதா? 1970 ஆம் ஆண்டு ராணுவ புரட்சியின் மூலமாக சிரியாவைக் கைப்பற்றிய ஹபீஸ் அல் அசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். தன்னுடைய ஆட்சியில் அரசாங்கத்தில் மேல்மட்ட, கீழ்மட்ட, நடுமட்ட அதிகாரிகள் அனைவரும் ஷியா பிரிவினைச் சேர்ந்த அலாவிட் முஸ்லீம்களை மட்டுமே நியமித்தார் ஹபீஸ். ஹபீஸ் அல் அசாத்தும் தீவிர அலாவிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். (அலாவிட் என்பது ஷியா வின் உட்பிரிவு) இப்படி பெரும்பான்மை சன்னி மக்கள் சிறுபான்மை அலாவிட் மக்களால் வழிநடத்தப்பட்டனர்.
இப்படி தந்தை பார்த்து பார்த்து அலாவிட் பெருமையை பறைச்சாற்றிக் கொண்டிருக்க பஷாரின் மனைவி அஸ்மா அல் அசாத் சன்னி இனத்தைச் சேர்ந்தவர் என்னும் தகவல் வெளியாகி பெரும் பிரச்சினைகளைக் கொண்டுவந்தது. மூத்த அலாவிட் உறுப்பினர்களுக்கு பஷாரைப் பிடிக்காமல் போனதற்கும் இதுதான் காரணம்.
பொருளாதார நடவடிக்கை
தந்தை ஹபீஸ் இறந்ததைத் தொடர்ந்து அதிபராக பதவியேற்றுக்கொண்ட பஷார் 40 நாட்களுக்கு அரசு துக்கம் அனுஷ்டிக்கும் என அறிவித்தார். புதிய சிரியாவை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. இன பேதங்களைக் கடந்து சிரியாவின் குடிமகன்களாக ஒன்றிணைவோம் என நரம்புகள் புடைக்க அறிக்கைவிட்டார் பஷார். எதற்கெடுத்தாலும் போர் என்று கிளம்பும் ஹபீசிற்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை என மக்கள் நினைத்தனர்.
உண்மையில் பஷாரின் சில திட்டங்கள் சிறப்பாகவே இருந்தன. ஆனால் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அவர் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் மக்களைக் கடுமையாக பாதித்தன. நடுத்தர மக்கள் ஏழையானார்கள். ஏழைகள் அகதிகளானார்கள். வழக்கம்போல பணக்காரர்கள் தப்பித்துக்கொண்டனர். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் போராடத் துவங்கினர். அப்படித்தான் ஆரம்பித்தது பிரச்சினை.
தலைவலியான தலைநகர்
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் அரசின் இந்தப்புதிய பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்ட பஷாருக்கு அதன் வீரியம் புரிய சிலநாட்கள் தேவைப்பட்டது. போராட்டம் ஒருபுறம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுகொண்டிருக்க பஷாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. யோசித்தார். சமாதனம் செய்வதற்கு வழியே இல்லை. அப்பாவின் பாதைதான் சரி. ராணுவத்திடம் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
தந்தையின் வழி
பஷார் அல் அசாத்தின் முரட்டுத்தனமான பிடிவாதத்திற்கு மிக முக்கிய காரணம் அவருடைய தந்தை ஹபீஸ் அல் அசாத். 1970 ஆம் ஆண்டு முதல் சிரியாவின் முடிசூடா மன்னராக இருந்தவர் ஹபீஸ். அவருடைய ஆட்சியின் போது நடத்தப்பட்ட இஸ்ரேலுடனான போர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கை என எல்லாமே பகீர் ரகம் தான்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் போர்புரிந்து கிடைத்த நிலப்பரப்பை பாலஸ்தீன மக்களுக்கு வழங்காமல் சிரியாவுடன் இணைத்துக்கொண்டார். அரபு சகோதரத்துவம் என்றெல்லாம் உணர்ச்சிபொங்க பேசும் ஹபீஸ் அதனை பேச்சோடு நிறுத்திக்கொண்டார். பரஸ்பர உடன்பாடு, தார்மீக நடவடிக்கைகள் எல்லாம் சுயநலத்திற்கு முன் மண்டியிட வேண்டியதுதான். அதுதான் ஹபீஸ் பின்பற்றிய விதி. சரி, அதாவது அண்டைநாடு. சொந்தநாட்டிலே ஹபீஸ் தாக்குதல் மேற்கொண்டார். அரபு நாடுகள் அதிர்ந்தன.
அரசை எதிர்த்து கிளர்ச்சிப்படைகள் கிளம்பியுள்ளது எனத் தெரிந்த உடனே அதிபருக்கு உதித்த சிந்தனை, ராணுவத்தை அனுப்புவதுதான். ஹாமா நகரத்தில் தான் புரட்சிப்படைகள் இருப்பதாக உளவுத்துறை சொல்லித் தொலைக்க ராணுவம் நகரை முற்றுகையிட்டது. சுமார் 27 நாட்கள் ராணுவம் சல்லடை சல்லடையாக துளைத்தெடுத்தது ராணுவம். இதில் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்தாலும், இந்நடவடிக்கையால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களைப்பற்றி ஏதும் வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டது அரசு. அதிபரை தான் அரசாங்கம். அவர் எடுப்பதே முடிவு. அதற்கு ஒத்துழைப்பதே மக்களின் கடமை. ஹபீஸ் செய்ய விரும்பியது இதைத்தான். பஷார் செய்துகொண்டிருப்பதும் இவற்றைத்தான்.
தீப்பொறி
டமாஸ்கஸில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டம் குறித்து நாடு முழுவதும் பேசப்பட்டது. தொழில்கள் நசிவடையத் தொடங்கின. இதனால் பிரச்சினை தீர்க்கமுடியாத எல்லைக்குள் சென்றது. போதாக்குறைக்கு அக்காலகட்டத்தில் தான் சக மத்திய கிழக்கின் ஜாதகத்தை மாற்றி எழுதிக்கொண்டிருந்தது அரபு வசந்தம். ஆட்சி மாற்றம். ஜனநாயகம், தேர்தல் என அவர்கள் அதுவரை கேட்டிராத வார்த்தைகள் பக்கத்து நாடுகளில் கேட்கத் தொடங்கியதை நினைத்து பெருமூச்சு விட்டார்கள் சிரிய மக்கள்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் குறித்து பேசாத வாய்களே இல்லை. குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருடைய விருப்பமாகவும் அது இருந்தது. இப்படி புரட்சியின் தகிப்பில் நாடே காய்ந்திருந்த வேளையில் சரியாக வந்து விழுந்தது ஒரு தீப்பொறி. விழுந்த இடம் சிரியாவின் மாநிலமான தராவில்.
2011 ஆம் ஆண்டு ஏப்ரலில் பள்ளியின் சுவர் ஒன்றில் “அடுத்து நீங்கள்தான் டாக்டர்” என எழுதப்பட்டிருந்தது. எழுதியவர்கள் மாணவர்கள். அடுத்தநாளே சந்தேகத்தின் பெயரில் 15 மாணவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது காவல்துறை. மக்கள் கொதித்துப்போனார்கள். அரசுக்கு எதிராக நகரம் முழுவதும் உள்ள சுவர்களில் எழுதினார்கள். ஒரு சுவர் மிஞ்சவில்லை. வேறுவழியில்லாமல் பெயின்ட் விற்பனையை நிறுத்தியது அரசு. ஆனால் போராட்டம் நின்றபாடில்லை. தராவின் வீதிகளில் மக்கள்கூட்டம் அலைமோதியது. உள்ளூர் காவல்துறையால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டமாஸ்கஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மக்களுக்கு இத்தனை தைரியம் கூடாது. என்றைக்கும் இது பிரச்சினை. பஷார் மீண்டும் ராணுவத்திடம் “பொறுப்பைக்” கொடுத்தார். விளைவு துப்பக்கிச்சூடுகள், மரணங்கள். நாடே அதகளம் கண்டது. நிச்சயமாக இந்த அரசு மக்களுக்கானதில்லை என்ற முடிவிற்கு வந்தார்கள் மக்கள். அரசுக்கு எதிரான தீவிரவாத மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் தீவிரவாத குழுக்களில் இணைந்தார்கள்.
ஆரம்பத்தில் அமைதி காத்துக்கொண்டிருந்த அமெரிக்கா கடுமையாக எதிர்வினையாற்றத் தொடங்கியது. பிரான்சும், பிரிட்டனும் ஆமாம் நீங்கள் செய்வது குற்றம் என ஜால்ரா அடித்துவிட்டார்கள். இம்மூன்று நாட்டையும் பகைத்துக்கொள்வது தற்கொலைக்குச் சமம். ஏற்கனவே லெபனான் அதிபர் ரபீக் ஹரிரி கார் விபத்தில் இறந்துபோனதற்கு மிகமுக்கிய காரணம் பஷார் தான் எனப் பேசப்பட்டு வந்தது. இதன்காரணமாக பிரான்ஸ் சிரியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. இதெல்லாம் நடந்தது 2005 வாக்கில். இப்போது மீண்டும் சிக்கல். இருந்தது ஒரே வழி. ரஷியாவுடன் இணைவது. ஓடிப்போய் புதின் கைகளை குலுக்கிக்கொண்டார் பஷார்.

அமெரிக்காவின் தூக்கத்தைக் கெடுக்க மற்றொரு வாய்ப்பு. சும்மா இருக்குமா ரஷியா. களத்தில் இறங்கியது. ஹிஸ்புல்லா, ஈரான், ரஷியா, சிரிய ராணுவம் ஆகியவை ஒருபக்கமும், அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, துருக்கி, பிரான்ஸ், குர்து ராணுவம் ஆகியவை மற்றொரு பக்கமும் நிற்கின்றன. இவை போதாதென்று வல்லரசு நாடுகளின் துணையுடன், ஐஎஸ்ஐஎஸ், ஜபாட் அல் நூஸ்ரா போன்ற தீவிரவாத இயக்கங்களும் இந்தச் சண்டையில் இறங்கியுள்ளன.
பிரச்சினை கைமீரும்போதே பதவி விலகும்படி அரசின் மூத்த உறுப்பினர்கள் பஷாரை வலியுறுத்தினர். ஆனால் ஆட்சியையோ, அதிகார பலத்தையோ இழக்க விரும்பாத பஷாரின் முரட்டு பிடிவாதத்தால் ஒட்டுமொத்த சிரியாவின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. தன்னுடைய சுயநலத்திற்காக லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த பஷார் அல் அசாத் சந்தேகமே இல்லாமல் சர்வாதிகாரிதான்.