ரஷியாவின் வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் மர்மங்கள் – அடிமைகளின் தேசத்தின் சர்வாதிகாரியான ஜோசப் ஸ்டாலின் வரலாறு!!

Date:

நமது நியோதமிழில் வெளிவரும் இம்சை அரசர்கள் தொடரில்…பதினோராவது இம்சை அரசன் ஜோசப் ஸ்டாலின்!

கூரைக்கு மேலே பனித்துகள்கள் விழுவதை அந்தச் சிறுவனால் வீட்டிற்குள் இருக்கும்போதும் உணர முடிந்தது. குளிர் நீக்கமற எங்கும் நிறைந்திருந்தது. சலவைத்தொழில் செய்யும் அம்மா சமையலறையில் உணவுத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தாள். கதவு தட்டப்பட்டது. சிறுவன் ஓடிப்போய் அம்மாவை அணைத்துக்கொண்டான். அழுகை பீறிட்டது அவனுக்கு. நடுங்கும் விரல்களால் கதவைத் திறந்தாள். அவளுடைய கணவன் தான். வோட்காவின் எரிச்சல் அவனுடைய உதடுகளில் இன்னும் மிச்சமிருந்தது. மனைவியையும், மகனையும் அடித்து துவைத்த பின்னர் தூங்கிப்போனார்.

மேற்கண்ட சம்பவத்தில் குடித்தவர் பெசோ. சலவைத்தொழில் செய்யும் தாயின் பெயர் கேகே. அந்த சிறுவன் ஜோசப் விசாரியோனவிச் டிலுகாஷ்விலி. ஆளைத் தெரியவில்லையா? அவருடைய இன்னொரு பெயரைச் சொன்னால் தெரிந்துவிடும். ஜோசப் ஸ்டாலின். ஆமாம். நவீன ரஷியாவின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்டாலினுக்கு கோரமான முகம் ஒன்றும் இருக்கிறது. ஹிட்லர் அளவுக்கு மக்களைக் கொடுமைப்படுத்திய ஸ்டாலின் ஏன் மக்களால் கொண்டாடப்படுகிறார்? அதற்கு நூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.

முதல் கனல் 

முதல் பாராவில் சொன்னதைப்போலவே ஸ்டாலினின் தந்தை மோசமான குடிகார ஆசாமி. வாழ்க்கையின் ஒரே ஆறுதலாக ஸ்டாலினை பார்த்துக்கொண்டாள் தாய் கேகே. வறுமை என்னும் அரக்கனின் கைகளில் இவர்களின் குடும்பம் சிக்கிக்கொண்டது. மகனை தொழிற்சாலையில் வேலைக்கு அனுப்ப தந்தை முடிவெடுத்தார். அதற்கு குறுக்கே நின்றார் ஸ்டாலினின் தாய். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் குடும்ப சண்டையாக மாறியது. இறுதியில் இருவரும் பிரிந்தனர். ஸ்டாலின் தாயோடு வாழத் தொடங்கினார். வறுமையின் கரம் மேலும் இறுகியது.

சலவைத் தொழிலில் வருமானம் சொற்பம் தான் கிடைத்தது. ஆனால் கேகேவிற்கோ தன் மகன் ஸ்டாலினை பாதிரியாராக்க வேண்டும் என்ற ஆசை. தங்களுடைய நாட்டின் (ஜார்ஜியா) தலைநகரான டிப்ளிசில் திருச்சபை பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் ஸ்டாலின். மகனுடைய வருங்காலம் குறித்து மிகுந்த பக்தியோடு கடவுளிடம் வேண்டிக்கொண்டாள். கிறிஸ்துவின் முட்கிரீடத்திலிருந்து மேலும் சில ரத்தத்துளிகள் வீழ்ந்தன.

ஜோசப் ஸ்டாலின் வரலாறு
Credit: fine art america

பள்ளியின் ஆரம்ப நாட்களில் படிப்பில் இருந்த அக்கறை மெல்ல போராளிகளின் மீது திரும்பியது. இதற்கு மிகமுக்கிய காரணமாக இருந்தவர் கம்யூனிஸ்டுகளின் கடவுளாக இருந்த கார்ல் மார்க்ஸ். அவருடைய புரட்சி கோட்பாடுகள் ஸ்டாலினை பெருமளவு ஈர்த்தன. ஜார் மன்னரின் கொடுமைகளையும், தொழிலாளி வர்க்கத்தின் பாடுகளையும் நேரில் கண்டார். தன்னை கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார். இந்தச் செய்தி பாதிரியார்களின் காதுகளை எட்டியவுடனே பள்ளியிலிருந்து ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். தன்னுடைய வாழ்நாள் இலட்சியம் நாசமாய் போனதாக கேகே அழுதாள். ஒருநாட்டை தன் மகன் தலைமை தாங்க இருக்கிறான் என்ற செய்தியை கிறிஸ்து கூட அவளுக்கு சொல்லியிருக்கவில்லை அப்போது.

குளிரும் சிறையும்

புரட்சிதான் வாழ்க்கை என்றாகிவிட்ட ஸ்டாலினுக்கு நேரடி அரசியலின் மீதான ஆர்வம் இதயத்திற்குள் அலையடித்தது. தன்னுடைய முதல் அரசியல் பேச்சை 1900 ஆம் ஆண்டு துவங்கினார் ஜாருக்கு எதிராக. அந்தக்குரலில் புரட்சி இருந்தது. அடிமைத்தனத்தைப் பற்றி பேசினார். சுதந்திரத்தைப் பேசினார். கூட்டம் மெய்மறந்து கேட்டது. ஸ்டாலின் முதல் வெற்றி அதுதான். அடுத்தடுத்து கூட்டங்கள். ஆர்ப்பரித்தனர் மக்கள். ஸ்டாலின் பேச்சைக் கேட்க. கம்யூனிஸ இயக்கத்தில் பெருந்தலைகளிடம் ஸ்டாலின் எனும் பெயர் பரீட்சயமானது.

இப்படி ஸ்டாலின் அரசியலின் ஆரம்ப அடிகளை எடுத்துவைத்த போது ஜார் மன்னர் இரண்டாம் நிக்கோலஸ் விழித்துக்கொண்டார். ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். சைபீரியாவில் இருக்கும் சிறைச்சாலையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டார் ஸ்டாலின். பின்னாளில் அந்த சிறைச்சாலைகளை ஸ்டாலின் பயன்படுத்திய விதம் கண்டு உலகமே பயத்தில் உறைந்துபோனது.

விடுதலை கிடைத்த பிறகும் மேடைகளின் மீதான அவரது ஆசை அடங்கவில்லை. காவல்துறையும் விடவில்லை. கைது – சிறை – விடுதலை – பேச்சு இதைத்தவிர வேறு வேலையில்லை ஸ்டாலினுக்கு. இத்தனை ரணகள சூழ்நிலையிலும் 1904 ஆம் ஆண்டு எகேத்திரானாவைத் திருமணம் செய்துகொண்டார் ஸ்டாலின். நண்பனின் தங்கையை மணந்த ஸ்டாலினின் திருமண வாழ்க்கை வெகுகாலம் நீடிக்கவில்லை. முதல் குழந்தை யாக்கோப் பிறந்த சில நாட்களில் மரித்துப்போனாள் எகேந்திரா. கைக்குழந்தையாக இருந்த யாக்கோபை கைகளில் தாங்கிக்கொண்டார். நெஞ்சில் இன்னும் புரட்சித்தீ எரிந்துகொண்டிருந்தது.

லெனினின் அறிமுகம் 

போல்ஷ்விக் கட்சியின் தலைவரும் மார்க்சை ஆதர்சமாக கொண்டவருமான விளாடிமர் லெனின் – ஸ்டாலின் சந்திப்பு 1910 களின் துவக்கத்தில் நடந்தது. ஸ்டாலினின் துருதுரு நடை, அதிரடி பேச்சு என அத்தனையும் லெனினுக்கு பிடித்துப்போனது. அன்றிலிருந்து கட்சியின் முக்கிய முடிவுகளில் ஸ்டாலினின் தலையீடும் இருந்தது. போல்ஷ்விக் கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு ஸ்டாலின் பெருமளவு பாடுபட்டார். (இதற்காக காக்கேசியாவில் இருந்த வங்கியொன்றை கொள்ளையடித்ததாக ஒரு குற்றச்சாட்டும் ஸ்டாலின் மீது உண்டு.) கூடிய விரைவிலேயே லெனினின் வலக்கரமாக மாறினார் ஸ்டாலின்.

1917 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு ஆட்சி போல்ஷ்விக் கட்சியிடம் வந்தது. லெனின் சோவியத் யூனியனின் அதிபராக பதவியேற்றார். கட்சியில் ஸ்டாலின் அளவிற்கு புகழ்பெற்றவர் லியோன் ட்ராட்ஸ்கி. ஸ்டாலினுக்கு கடும்போட்டியாக அவர் இருந்தார். லெனினுக்கு பிறகு ஆட்சி செய்யப்போவது யார் என்ற கேள்வி பிரதானமாக எழுந்தது 1920 ன் துவக்கத்தில். ஒரே கட்சியாக இருந்தாலும் ட்ராட்ஸ்கிக்கும் ஸ்டாலினுக்கும் கொள்கை அளவில் பெருமளவு வித்தியாசங்கள் இருந்தன. இவ்விசயத்தில் ஸ்டாலினுக்கும் லெனினுக்குமே முரண்பாடுகள் இருக்கத்தான் செய்தன.

கொள்கையின் மரணம்

உட்கட்சி அரசியலில் கவனமாக காய் நகர்த்திய ஸ்டாலினை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்தார் லெனின். அதிலிருந்து ஸ்டாலின் இறக்கும்வரை அதே பதவியில் தான் இருந்தார். இதற்கிடையில் லெனினின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமானது. மரணத்துடன் அவர் செய்த போரில் கடைசியில் வென்றது மரணம் தான். ஆண்டு 1924. லெனினின் மரணம் உலகத்தை உலுக்கிய நிகழ்வுகளில் ஒன்று. ஒன்றுபட்ட சோவியத் ரஷியாவின் எதிர்காலத்தை கணிக்கும் சக்தியாக இருந்தவர் லெனின். கம்யூனிச சிந்தனை உலகமெங்கிலும் நம்பிக்கையுடன் துளிர்த்த நேரம் அது. தத்துவார்த்த அடிப்படையிலேயே இருந்த கம்யூனிசத்தை கள அரசியலுக்கு எடுத்துவந்தவர் லெனின். அவருக்குப்பின்னால் யார் இதனைச் செய்ய முடியும்? என்ற கேள்வி பிராதனமாக எழுந்தது. தனக்குப்போட்டியாக இருந்த ட்ராட்ஸ்கியை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியதிகாரத்தில் உட்கார்ந்தார் ஸ்டாலின்.

வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட தேசமாக ரஷியாவை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார் ட்ராட்ஸ்கி. ஆனால் தொழில்துறை முன்னேற்றத்தை ஆதரித்தார் ஸ்டாலின். இதன் விளைவுகள் தெரியாமல் களத்தில் ஸ்டாலின் இறங்கினார். வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் பெருமளவு வாங்கிக்குவிக்கப்பட்டன. விவசாயத்திற்கு ஒதுக்கிய நிதியிலிருந்து தொழிலக முன்னேற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விதை நெல்லே இல்லாதவர்கள் எத்தனைநாள் பட்டினியோடு காலந்தள்ள முடியும்?

உணவு உற்பத்தி ஒருபக்கம் நின்றுபோனது. ஆனால் தொழிற்சாலைகளுக்கான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் இறக்குமதி ஜரூராக நடந்தது. இந்த அறிவாளித்தனான காரியத்தின் பின்விளைவுகள் தெரிந்தவுடன் விவசாய உற்பத்திக்கு இந்த அரசு உறுதுணை செய்யும் என அறிக்கை வந்தது. இந்த சிக்கலை முன்கூட்டியே கணித்திருந்த ட்ராட்ஸ்கியின் கட்டுரைகளில் அனலடிக்க ஆரம்பித்தது.

குலாக்

சைபீரியாவில் இருந்த சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டவர்களே குலாக்குகள் என்றழைக்கப்பட்டனர். ஸ்டாலினின் ரகசிய காவல்துறையான NKVD கைது செய்யும் அனைவரும் இந்த சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ரஷியாவின் பிரம்மாண்ட படைப்புகள் யாவையும் இந்த அடிமைகளால் கட்டப்பட்டவை தான். தினமும் இரண்டு வேளை உணவு. ஒரு வருடத்திற்கு இரண்டு உடைகள். ஒரேயொரு படுக்கை. இவைதான் குலாக்குகளுக்கு வழங்கப்பட்டவை.

குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பு என்பதெல்லாம் பூஜ்யம் தான். சைபீரிய குளிர்காலத்திலும் மக்களுக்கு போர்வைகூட அளிக்கப்படவில்லை. ஒருநாளைக்கு 14 மணிநேரம் வேலை. வருடம் முழுவதும். ராட்சத வேகத்தில் மக்களின் உயிரைக் குடித்தன இந்த சிறைச்சாலைகள். குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதால் கைதிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போனது. இதனால் புதிய சிறைச்சாலைகள் நாடெங்கிலும் கட்டப்பட்டன. அதனைக் கட்டியவர்களும் அதே அடிமைகள் தான்.

1932 – 33 பசியில் துடித்த உக்ரைன்

ரஷியா – உக்ரைன் பிரச்சினையின் வேர் பல்லாண்டுகளுக்கு முன்பே அந்நிலத்தில் ஊன்றப்பட்டது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரேனை விடுவிக்க பல கிளர்ச்சி குழுக்கள் முளைத்திருந்த நேரம். உக்ரேனிய தேசிவாதத்தை ஆதரித்த அத்தனை பேருடைய பட்டியலும் தயாரிக்கப்பட்டு ஸ்டாலினுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் “துரோகிகள்” என நாமகரணம் சூட்டினார் அதிபர். உக்ரேனை இனிமேலும் விட்டுவைப்பது உசிதமல்ல. அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதன்மூலம் உக்ரேனுக்கு வெளியிலிருந்து செல்லும் அனைத்து உணவுப்பொருட்களும் ரஷியாவிற்கு திருப்பப்பட்டன. இதனைச் செய்தது ஸ்டாலினின் ராணுவம். செயற்கையாக தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டிற்காக ஸ்டாலின் எடுத்த இந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் இறந்து போனார்கள். ஸ்டாலினின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளின் ஊற்றுக்கண் இதுதான். எதிரிகளை விட துரோகிகளே அதிகம் தண்டனை பெறவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர் ஸ்டாலின்.

துரோகிகளை களையெடுக்க வேண்டும் என்ற பெயரில் ரஷிய ராணுவம் கொன்றுகுவித்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தின் மடங்குகளில் இருந்தன. குறிப்பாக 1934 ஆம் ஆண்டு நடைபெற்ற 7 ஆம் காங்கிரஸ் மாநாட்டில் ஸ்டாலினின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளை கம்யூனிச தலைவர்களே எதிர்த்தனர். அரசாங்க அதிகாரிகளிடமும் ஸ்டாலின் மீதான அதிருப்தி இருந்தது. தனக்கு எதிராக இருந்த தலைவர்களை ஸ்டாலின் தனது பாணியில் கவனிக்கத் தொடங்கினார். மாநாட்டிற்கு வந்த அனைவரின் பெயரும் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கூடவே அவர்களுடைய அரசியல் நிலைப்பாடுகளும். தன்னுடைய எண்ணங்களுடன் ஒத்துப்போகாதவர்கள் அனைவரையும் கைது செய்யும்படி உத்தரவிட்டார் அதிபர். 1939 ஆம் ஆண்டிற்குள் அத்தனை பேரும் இறந்திருந்தனர்.

சமரசமும் சண்டையும்

ஹிட்லர் போலந்தின் மீது படையெடுத்து இரண்டாம் உலகமகா யுத்தத்தை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் ஹிட்லரை எதிர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் ஸ்டாலின் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஹிட்லருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். அதன்படி இருநாட்டு படைகளும் போர்புரிய கூடாது, போலந்தை ஆளுக்குப்பாதியாக பிரித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. போலந்திற்கு ஹிட்லர் செய்தது கொடுமை என்றால் ஸ்டாலின் செய்தது பச்சைத் துரோகம்.

adolf-hitler-photo

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் ஸ்டாலின் ஹிட்லர் மீது எச்சரிக்கையாகவே இருந்தார். ஹிட்லரை யார்தான் கணிக்க முடியும்? இன்றுபோல் என்றும் இருக்காது. எப்போதும் உடன்படிக்கையை ஜெர்மனி மீறும் என்பதை தெளிவாகவே உணர்ந்திருந்தார் ஸ்டாலின். இதனால் ரஷிய ராணுவத்தை பலம் கொள்ளச்செய்யும் நடவடிக்கையில் இறங்கினர் ரஷிய அதிகாரிகள். வீதி வீதியாக, கிராமம் கிராமமாக ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடந்தது. ராணுவ டாங்கிகள், பாதுகாப்பு கருவிகள் மற்றும் துப்பாக்கி உற்பத்தி முடுக்கிவிடப்பட்டன. இத்தனை பெரிய நடவடிக்கைகளை மறைக்க முடியுமா? ஸ்டாலினின் இத்திட்டத்தை மோப்பம் பிடித்தது ஜெர்மானிய ஒற்றர்கள் குழு.

வரலாற்றில் யாராலும் அத்தனை எளிதாக மறக்க முடியாத நிகழ்வான ரஷியா – ஜெர்மனி யுத்தம் துவங்கியது. இதனை முன்கூட்டியே கணித்திருந்தார் ஸ்டாலின். இதனால் ராஜதந்திர நடவடிக்கையாக எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டது. ஹிட்லரின் படை எல்லையை நெருங்கும் முன்பே ரஷிய ராணுவம் பின்வாங்கியது. ரஷிய ராணுவம் பின்வாங்கும் போது வழியில் இருந்த அத்தனை விளைநிலங்களையும் தீயிட்டனர். குடிநீர் தொட்டிகளில் விஷத்தைக் கலந்தனர். ஜெர்மானியர்களுக்கு உணவோ, நீரோ கிடைக்கக்கூடாது என்பதே திட்டம். அதற்காக ஸ்டாலின் அழிக்க உத்தரவிட்டவை ரஷிய கிராமங்கள். பாதிக்கப்பட்டவர்கள் ரஷியர்கள். அதுவும் அடுத்த வேளை உணவில்லாதவர்கள். இதுதான் ஸ்டாலினின் ராஜதந்திரம்.

யூகித்தபடியே ரஷியாவின் மீதான ஹிட்லரின் படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதற்கு அதிக விலை கொடுத்தது ரஷியா தான். அதுவும் அப்பாவி மக்களின் உயிர்களை பலியிட்டு யுத்தத்தை வென்றார்கள் ரஷியர்கள். இருப்பினும் நாஜிப்படை ஜெர்மானிய வீரர்களை சிறைபிடித்துச் சென்றது. அப்படி ஜெர்மனிக்கு சென்ற ரஷிய வீரர்களில் ஸ்டாலினின் மகன் யாக்கோபும் ஒருவன். மீண்டும் படையெடுத்துச் செல்ல அதிபரிடமிருந்து உத்தரவு வரும் என எதிர்பார்த்தனர் ராணுவ அதிகாரிகள். ஆனால் எந்த அறிவிப்பும் ஸ்டாலினிடமிருந்து வரவில்லை. யாக்கோப் ஜெர்மானிய சிறையிலேயே  செத்துப்போனார். யுத்தம் முடிந்த பின்பும் சொந்த நாடு திரும்பிய வீரர்களை சைபீரியாவிற்கு அனுப்ப உத்தரவிட்டார் ஸ்டாலின். அவர்களின் மீதும் துரோகிகள் எனப் பச்சை குத்தப்பட்டது.

களையெடுப்பு

ஸ்டாலினின் ரகசிய காவல்துறைக்கு பிரதான வேலையாக இருந்தது கண்காணிப்பு தான். அதிபர் ஒரு கூட்டத்தில் பேசுகிறார் என்றால் காவல் துறை முன்பே அரங்கம் முழுவதும் குவிக்கப்படும். அதிபர் பேசி முடித்தவுடன் கைதட்டல் ஆர்ப்பரிக்கும். யார் முதலில் கைதட்டலை நிறுத்துகிறாரோ அவருடைய பெயர்கள் குறித்து வைக்கப்படும். அடுத்தநாளே அவர்கள் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவர். விசாரணையின் முடிவில் கைதட்டிய ஆசாமி இதற்கு முந்தைய கூட்டத்தில் எப்படி கைதட்டினார் என்ற தரவுகள் சரிபார்க்கப்படும். எசகுபிசகாக அவரது நடவடிக்கை இருப்பதாக காவல்துறை நினைத்தாலே சைபீரிய சிறைதான். இப்படித்தான் இருந்தது ஸ்டாலினின் காவல் துறைப்பிரிவு. இப்பிரிவின் தலைவராக இருந்தவர் லாவேரேண்டி பெரியா.

குரூர தண்டனைகள் அளிப்பதும், குற்றவாளிகளுக்கு பாலியல் தண்டனை கொடுப்பதும் பெரியாவிற்கு பிடித்த பொழுதுபோக்கு. ஸ்டாலினின் பார்வைக்கு இக்குற்றச்சாட்டுகள் வந்தாலும் அவர் பெரியா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்டாலின் இறந்த பிறகு பெரியா, குருஷே ஆட்சிக்காலத்தில் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

நல்லவரா? கெட்டவரா? 

ரஷியாவின் சிறைச்சாலைகளில் வருடந்தோறும் இறந்தவர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 10 சதவிகிதமாக இருந்தது. 1953 ஆம் ஆண்டு ஸ்டாலின் இறக்கும் வரையிலும் இதே நிலைமைதான். ஸ்டாலினால் அவரது காவல்துறையால், ராணுவத்தால் கொல்லப்பட்ட ரஷியர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 10 லட்சம்!! ஆனால் இன்றும் ரஷிய மக்களில் 70 சதவிகிதத்தினர் ஸ்டாலினைப் பற்றி நேர்மறையான பிம்பங்களையே வெளிப்படுத்துகின்றனர். இரண்டாம் உலகப்போரில் ரஷியாவின் வெற்றி, தொழிற்சாலை மேம்பாடு, திருத்தியமைக்கப்பட்ட வேளாண் கொள்கைகள் என ரஷியாவை வல்லரசாக்குவதற்கு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஸ்டாலினின் இந்த மாபெரும் ராஜாங்கம் அப்பாவி ரஷிய மக்களின் சடலத்தின்மீது கட்டமைக்கப்பட்டது என்பதையும் வரலாற்றில் நாம் சேர்த்தே படிக்க வேண்டியிருக்கிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!