வரலாற்றை பொறுமையாக புரட்டிப்பார்த்தால் மன்னர்களுடைய வாழ்க்கை சற்றே சிரமமானது என்றேதான் நினைக்கத் தோன்றுகிறது. நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்காக சிந்திக்க வேண்டும். புதிய திட்டங்கள், கோப்புகள், வழக்குகள், தீர்ப்புகள் போதாக்குறைக்கு எதிரி நாட்டு மன்னர்களின் படையெடுப்பு… யப்பா!! இப்படித்தான் பல அரசர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் எல்லா விதிக்கும் விதிவிலக்கு இருக்குமல்லவா? அப்படியான விதிவிலக்குகளில் ஒன்றுதான் மன்னர் எட்டாம் ஹென்றி. ஆறு மனைவிகள், எண்ணிலடங்கா துணைவிகள், பிரம்மாண்ட விருந்துகள், இசைக் கச்சேரிகள், நடனம் என மனுஷன் வாழ்ந்திருக்கிறார்…
அதிர்ஷ்டக் காற்று
வாழ்நாள் முழுவதும் குதூகலமாக நாட்களைக் கழித்த எட்டாம் ஹென்றி பதவிக்கு வந்தது விபத்து என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அரசர் ஏழாம் ஹென்றியின் இரண்டாம் மகன் தான் எட்டாம் ஹென்றி. அப்போதைய அரசியல் நிலைகளின்படி மூத்த மகனான ஆர்த்தர் தான் அரசராகியிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆத்தர் பதினைந்து வயதில் இறந்துபோகவே இளவரசர் பட்டம் எட்டாம் ஹென்றியைத் தேடிவந்தது. கூடவே ஆர்த்தருக்கு மனம் முடித்திருந்த ஏரகானும். ஆமாம். ஸ்பெயின் அரசரின் மகளான ஏரகானை ஆர்த்தருக்கு மணமுடித்து நட்பை புதுப்பித்துக்கொள்ள விரும்பினார் ஸ்பெயின் அரசர். அவர் நினைத்தது நடந்தது என்றே சொல்லவேண்டும். என்ன, மாப்பிள்ளை தான் வேறு!!
காலையில் தினமும் கண்விழித்தால் ..
ஆர்த்தரை திறமையான மன்னராக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை ஏழாம் ஹென்றிக்கு இருந்ததால் தினமும் அதிகாலை பயிற்சிகள், கல்வி வகுப்புகள் என எப்போதுமே பிசியாக இருந்தார் ஆர்த்தர். அதேநேரத்தில் எட்டாம் ஹென்றிக்கு அதிகாலை என்பதே எட்டு மணிதான். இதில் சுவாரசியம் என்னவென்றால் மன்னரான பிறகும் அவரால் அதிகாலையில் எழ முடியவில்லை. எட்டாம் ஹென்றியின் தினசரி ஷெடியூலை பார்த்தாலே அவரைப்பற்றி ஓரளவு புரிந்துவிடும்.
அப்படி இப்படியென்று எட்டு மணிக்குமேல் எழுந்தவுடன் அன்னார் செய்யும் முதற்காரியம் வேட்டைக்கு கிளம்புவதுதான். வேட்டைநாய் மற்றும் பழக்கப்பட்ட பருந்து ஆகியவற்றுடன் தனக்கு பிடித்தமான குதிரையுடன் காட்டிற்குள் செல்லும் ஹென்றி அரண்மனைக்குத் திரும்ப வெகுநேரம் ஆகும். தாவரங்கள் தவிர அனைத்தையும் கொன்றுவிட வேண்டும் என்ற கதியில் வேட்டையாடும் மன்னருக்கு போதும் என்று தோன்றும் போதுதான் வேட்டையை முடிப்பார். மன்னர் அரண்மனைக்குத் திரும்புவதற்குள் மிகப்பெரிய விருந்தை தயாரித்து வைத்திருப்பார்கள் அரண்மனை சமையல்காரர்கள்.
விருந்து
எட்டாம் ஹென்றிக்கு பன்றிக்கறி என்றால் கொள்ளைப்பிரியம். தினமும் விருந்தில் பன்றிக்கறி தான் பிரதான டிஷ். இவைபோக புறா, காடை, கோழி போன்ற சொற்ப உயிரினங்களும் விருந்தில் பரிமாறப்படும். இவையெல்லாம் முதல் ரவுண்ட் தான். அடுத்து காய்கறிகள், பழங்கள், கூடவே ஒயினும் அடுத்து. இப்படி சாப்பாட்டு அறையில் சண்டை போட்ட பின்னர் ஒரு குட்டித்தூக்கம். அதன்பின்னர் எழுந்து குளித்து, மன்னர் அரசவைக்கு வர மாலை ஆகிவிடும். அப்புறம் தான் தர்பார் நடக்கும்.
இப்படி இருக்கும் மன்னர் எப்படி ஆட்சி செய்வார் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் எட்டாம் ஹென்றி பயங்கர ஷார்ப்பான ஆள். ஒரு நாள் முழுவதும் செய்யவேண்டிய அரச காரியங்களை சில மணிநேரங்களில் முடித்துவிடுவார். திட்டங்கள் வகுப்பதிலும் ஆள் கில்லாடி என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அரசவையில் வேலை முடிந்தவுடன் மன்னர் செல்லும் இடம் இசை மண்டபம்.
எட்டாம் ஹென்றிக்கு இசையில் அலாதி பிரியம் உண்டு. தானே இசை வாத்தியங்களை கையாளவும் கற்றிருந்தபடியால் கலைஞர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டிவிடுவார். இதனால் அரசர்முன் பாடும் கலைஞர்கள் எந்நேரமும் சுதாரிப்புடனேயே இருக்க வேண்டியிருந்தது.

விபரீத விளையாட்டு
அப்போதைய இங்கிலாந்தில் ஒரு வினோத பழக்கம் இருந்திருக்கிறது. கால்கள் அழகாக இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்பி இருக்கிறார்கள். இதனால் கால்கள் அழகாக தெரியும்படி உடை உடுத்துவதில் ஆண்கள் மிகந்த சிரமப்பட்டிருக்கிறார்கள். இதில் முதல் ஆள் நம் மன்னர் தான். ஹென்றியின் கால்கள் வழவழப்பாகவும், முருக்கேறியும் இருக்குமாம். இதனாலேயே பல பெண்களின் காதல் மன்னனாக எட்டாம் ஹென்றி வலம் வந்திருக்கிறார். இதுவெல்லாம் அந்த விபத்து நடக்கும் வரையில்தான்.
குதிரையில் பயணித்தபடியே இலக்கை பந்தால் அடிக்கும் ஒரு விளையாட்டு அன்றைய இங்கிலாந்தில் இருந்தது. பெயர் தெரியாத அந்த விளையாட்டில் மன்னர் ஒருமுறை ஈடுபடும்போது குதிரையிலிருந்து எசகுபிசகாக விழுந்தார். இதனால் கால் எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நரம்பு மண்டலமும் பாதிப்பிற்கு உள்ளானது. அண்டை தேசங்களிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். சில மாதங்களில் எட்டாம் ஹென்றியால் நடக்க முடிந்தது. ஆனால் உடல் பருமன் அதிகரிக்கத் தொடங்கியது. மன்னர் எடுத்துக்கொண்ட மருந்துதான் அதீத உடல்பருமனுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எந்தளவிற்கு பருமன் அதிகரித்தது என்றால் 32 அங்குலம் இருந்த ஹென்றியின் இடுப்பு சுற்றளவு 52 அங்குலமானது!!
பிரம்மாண்டமாக வாழ்ந்தவர் உடம்பே பிரம்மாண்டமாக மாறியதற்கு பிறகும் தனது அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொன்றிற்கும் சிரமப்பட வேண்டியிருந்தது. மன்னருக்கு பிடித்தமான குதிரை பயணம் மிகுந்த சவாலான காரியமானது. குதிரை மேல் மன்னரைத் தூக்கி உட்கார வைத்தனர் வீரர்கள். கால்கள் தெரியும்படி ஆடைகள் உடுத்துவதையும் மன்னர் தவிர்த்தது இதற்குப்பின்னர்தான்.
வாரிசுக் கொலைகள்

பொதுவாழ்வில் அம்பியாக இருந்த ஹென்றி குடும்ப வாழ்க்கையில் அந்நியனாகவும் ரெமோவாகவும் இருந்திருக்கிறார். முதல் மனைவியான ஏரகானுக்கு ஆண் குழந்தை பிறக்காததால் இருவரிடையே உண்டான மோதல் நாளுக்குநாள் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப்போய் ஏரகானை சிரைச்சேதம் செய்ய உத்தரவிட்டார் ஹென்றி. அடுத்து அன்னே போலின் என்பவரை மணந்துகொண்டார். அவருடனும் அதே பிரச்சினை. அதே தீர்வு. ஆனாலும் மனம் தளராத மன்னர் அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் செய்துகொண்டார். ஆனாலும் அவர் எதிர்பார்த்த ஆண்வாரிசு கனவாகவே போனது.
போப்புடன் போட்ட சண்டை
எட்டாம் ஹென்றி தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவர். இங்கிலாந்து முழுமையும் மக்களை ஒருங்கிணைக்கும் மன்னரின் முயற்சிக்கு போப்பாண்டவர் முட்டுக்கட்டை போடவே இருவருக்குள்ளும் முட்டிக்கொண்டது. இந்த எதிர்ப்பு வளர்ந்து இங்கிலாந்திற்கென தனியாக ஒரு திருச்சபையை உருவாக்கும் அளவிற்கு எட்டாம் ஹென்றி சென்றார். இந்த பிரச்சினையில் போப்பாண்டவரின் விசுவாசிகள் சிலர் கொல்லப்பட்டனர். தான் உருவாக்கிய இங்கிலாந்து திருச்சபையின் தலைவராகவும் தன்னை அறிவித்துக்கொண்டார் ஹென்றி.
ஒருபுறம் தான் நினைத்ததை முடிக்க எதை வேண்டுமானாலும் செய்யும் மன்னராக ஹென்றி இருந்திருக்கிறார். குடும்ப விஷயங்கள் மற்றும் மத ரீதியிலான பிரச்சனைகளில் மூர்க்கம் காட்டிய ஹென்றி அசாத்தியமாக காதல் கடிதம் எழுதியது வரலாற்று முரண் தான்.
கடைசிக்காலம்
ஆண்வாரிசு இல்லையென்ற கவலை ஒருகட்டத்தில் மன்னருக்கு அதிகமாக மன்னரின் உடல்நிலையும் மோசமானது. கட்டுக்கடங்காத பருமன் பல வியாதிகளை அழைத்துவந்தது. அதிகநேரம் தூங்கும் மன்னர் தூக்கமில்லாமல் தவித்தார். சன்னமாக அவர் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. இறுதியாக 1547 ஆம் ஆண்டு மருத்துவர்களின் முயற்சி பலனிக்காமல் அவர் உயிர் பிரிந்தது. வாழ்நாள் முழுவதும் ஜாலியாகவே இருந்த எட்டாம் ஹென்றியின் அந்திம காலங்கள் தனிமையும், வலியும் நிறைந்ததாக இருந்தது என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.