காணாமல் போன 6000 பெண்களும், மரணத்தை தடுக்கும் மருந்தும் – சீன பேரரசர் சின் சி ஹுவாங் வரலாறு!

Date:

நமது நியோதமிழில் வெளிவரும் இம்சை அரசர்கள் தொடரில்…ஒன்பதாவதாக இம்சை அரசன் சின் சீ ஹுவாங்!

கிமு 209 ஆம் ஆண்டு சீனா. சின் வம்சத்தைச் சேர்ந்த சின் சி ஹுவாங்கின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. இரவு மெதுவாக இறங்கும் வேளையில் வானத்தில் அந்த ஆச்சர்யத்தைப் பார்த்தார்கள் மக்கள். தீப்பிழம்பாக விண்கல் பூமியை நெருங்குவதை பார்ப்பதற்கு சற்றே பயமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அரண்மனைக்கு சில கிலோமீட்டர்கள் தூரத்தில் அந்தக்கல் பூமியை முத்தமிட்டது. இந்த அரிதான வானியல் நிகழ்வினை வேடிக்கை பார்த்துவிட்டு தூங்க போய்விட்டார்கள் மக்கள் அடுத்த நாள் நடக்கவிருக்கும் விபரீதம் புரியாமல்.

விண்கல் விழுந்த விஷயம் அரசரின் காதில் விழுந்தது அடுத்தநாள் தான்.  உடனடியாக மதகுருமார்கள், ஜோசியர்கள் என மாநாடு நடத்தப்பட்டது. கொண்டையை சொறிந்துகொண்டே வந்தவர்கள் வந்திருந்த முடிவு மன்னருக்கு ஆபத்து. இது திட்டமிட்ட சதி என வானவியல் தெரியாமல் உளறிக்கொட்ட மன்னரின் முகம் சிவந்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் விண்கல் விழுந்த இடத்தைச் சுற்றியிருந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் மன்னரின் முன்னால் நிறுத்தப்பட்டனர். யார் இந்த சதியைச் செய்தது என ஒப்புக்கொள்ளுங்கள். இல்லையேல் தண்டனை கடுமையாக இருக்கும் என எச்சரித்தார் மன்னர். விண்கல் விழுந்ததற்கு பொதுமக்கள் என்ன செய்ய முடியும்? முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு நிற்பதைத் தவிர. அரசாங்க நிலத்திற்கு சேதம் விளைவித்ததாகக் கூறி அனைவரையும் சிரைச்சேதம் செய்யுங்கள் என உத்தர விட்டு நகர்ந்தார் மன்னர். இப்படிப்பட்ட இம்சை அரசனான சின் சி ஹுவாங்கைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

சின் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை தற்போதிருக்கும் சீனாவானது வேய், ஹான், யான், சின், சூ, சாவோ, கி எனும் ஏழு நாடுகளாக இருந்தது. அதாவது ஏழு அரச மரபுகளின் ஆட்சி நடந்தது. கிமு.246 ஆம் ஆண்டு அரசர் ஷியோஷியாங் இறந்துபோகவே பதிமூன்றே வயதில் பதவி ஹூவாங்கிடம் வந்தது. பொம்மை வைத்து விளையாடும் வயதில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு. தான் என்ன சொன்னாலும் செய்வதற்கு பணியாட்கள் தயாராக இருப்பதைக்கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்தான் குட்டி ஹூவாங். ஆனால் ஷியோஷியாங்கின் நண்பரும் ஆலோசகருமான லூபே ஆட்சிப்பொறுப்பை கவனித்துக்கொண்டார்.

சின் சி ஹுவாங் வரலாறு
Credit: wikipedia

அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு லூபே வைத்ததுதான் சட்டம். ஆனாலும் அண்டை பிரதேசங்கள் சின்னை கைப்பற்ற துடித்துக்கொண்டிருந்தன. இதனால் ராணுவத்திற்காக வருமானத்தின் பெரும்பகுதி செலவழிக்கப்பட்டது. எந்நேரமும் தாக்குதல் இருக்கலாம் என்பதால் எல்லையோர பாதுகாப்பிலே லூபே கவனத்தைக் குவிக்க வேண்டியிருந்தது. இதனால் கஜானா கடுமையான வேகத்தில் காலியானது. வருமானம் போதவில்லை என்றால் எல்லா அரசுகளும் என்ன செய்யுமோ அதைத்தான் லூபேயும் செய்தார். வரியை உயர்த்தினார். இதற்கு உள்ளூரிலேயே போர்க்கொடி பறக்கும் என லூபே நினைக்கவில்லை. இப்படியான சூழ்நிலையில் தன்னை மன்னராக அறிவித்துக்கொண்டார் ஹுவாங். வயது 21 ஆகிவிட்டது. காரணமாகச் சொல்ல இது போதுமல்லவா?

ரத்த ஆறு

எதிரி நாடுகளான ஹான், மிங் ஆகியவை சின்னைப் பிடிப்பதற்கு இதுதான் சமயம் என உள்ளுக்குள் திட்டம் தீட்டின. காரணம் ஹுவாங்கிற்கு அரசை நடத்துவதற்கான அனுபவம் போதாது. திறமையும், அரசியலில் பழுத்த அறிவும் கொண்டிருந்த லூபேயை ஊழல் குற்றம் சாட்டி ஹுவாங் நாடுகடத்தியது எதிரிகளை எளிதாக காய் நகர்த்த வைத்தது. சரியான நேரத்திற்காக காத்திருந்தார்கள். ஒரு போர். மொத்த சின் தேசமும் காலடியில் என மற்ற தேசங்கள் அனைத்துமே நினைத்தன. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பளிக்காமல் ஹுவாங்கே நேரடியாக களத்தில் குதித்தார். தளபதிகளிடம் ஹுவாங் சொன்னது ஒன்றைத்தான். “முதல் அடி நம்முடையதாக இருக்க வேண்டும்”.

சின்னப்பையன் நம்மை எதிர்த்து போர் புரிய வருகிறானா? என எதிகளும் அலட்சியமாக இருந்திருக்க கூடாது. அதற்கான விலையாக நாட்டை ஒப்படைக்க வேண்டியிருந்தது. ஆமாம். போரில் ஹுவாங் அபார வெற்றியடைந்தார். காரணம் ஒன்றுதான் அது அவருடைய விடாப்பிடியான பிடிவாதம். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் “நம் படை பின்வாங்கக்கூடாது. எதிர்த்து நில்லுங்கள். கொன்று குவியுங்கள்” என வீரர்களிடையே முழங்கினார். ரத்தச்சேறில் வழுக்கியது குதிரைக் குளம்புகள். சுற்றிச் சுழன்ற வாளில் ரத்தம் தெறித்தது. அடுத்த சில ஆண்டுகளுக்கு எல்லா நாடுகளையும் வீழ்த்திக்காட்டினார் ஹுவாங்.

இதன்மூலம் ஏழு நாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேசமாக அறிவித்தார். அரசர் ஹுவான்கின் இந்த மகத்தான ஒருங்கிணைப்புத் திட்டம் அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு நீடித்தது. நாட்டை ஒன்றாக்கினாலும் ஆள்வதற்கு மாகாணங்களாக நாடு பிடிக்கப்பட வேண்டும் என எண்ணினார். ஆகவே 36 மாகாணங்களாக நாடு பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். வரிவசூல், அரசாங்க முடிவுகளை மன்னரின் சொல்ல செயல்படுத்துவதே இவர்களின் வேலை.

சீனா என அந்நாட்டிற்கு பெயர்வர காரணமும் இவர்தான். ஆங்கிலத்தில் qin என்பதை நாம் சின் என்கிறோம் அல்லவா? இதுவே மருவி சீனா என்றாகிப்போனது.

ஒரே நாடு ஒரே சட்டம்

நாட்டிற்கான பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதில் மன்னர் தீவிரமாக இருந்தார். அதாவது நாடு முழுவதும் ஒரே சட்டம். வரிவசூல், குற்றவியல் தடுப்பு என அனைத்திற்கும் தனியாக சட்டங்கள் எழுதப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. அந்தவகையில் நிலையான சட்டத்தின் ஆட்சியை கொண்டுவந்த முதல் சீன அரசர் என்ற பெருமை ஹுவாங்கையே சாரும். ஆனால் சிறிய குற்றங்களுக்குக்கூட கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. கடுமையான தண்டனை என்றால் மரண தண்டனை தான். தண்டனை எப்படி நிறைவேற்றப்படும் என்பது மன்னரின் “மூடை” பொறுத்தது. தனது ஆலோசனைக்காக மூன்று தலைமை அமைச்சர்களை மன்னர் நியமித்தார். ராணுவம், நீதி அமைப்பு மற்றும் உள்நாட்டு அரசியல் கண்காணிக்க என மூன்று அமைச்சர்கள் தர்பாரில் இருந்தனர்.

great wall of china damage

பார்பேரியர்களால் அடிக்கடி ஏற்பட்ட மோதல் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடாக மன்னர் முன்வைத்ததுதான் சீனப்பெருஞ்சுவர் திட்டம். மிகுந்த கட்டுப்பாடு கொண்ட ஆசாமியான ஹுவாங் தவறு செய்த தனது மகனை பெருஞ்சுவர் கட்ட கூலி வேலைக்கு அனுப்பியிருக்கிறார் என்றால் மற்றதை எல்லாம் உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

மரண பயம்

இத்தனை நல்ல விஷயங்களைச் செய்த ஹுவாங்கிடம் இருந்தது ஒரே வீக்னஸ் தான். அது அவருடைய மரண பயம். எப்போதும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து எனும் எண்ணம் அவர் இறக்கும்வரை போகவில்லை. மரணத்தை தடுக்க ஹுவாங் எடுத்த முயற்சிகள் சற்றே திகில் டைப் தான். ஊரில் இருக்கும் மருத்துவர்கள் அனைவரையும் கூட்டி மரணமில்லாத வாழ்க்கையை நான் வாழவேண்டும். மரணத்தை மரணிக்கும் மருந்தை கண்டுபிடிப்பது உங்களுடைய பொறுப்பு என்றார். அடுத்த நாள் முதல் மரணத்தைத் தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதில் அனைத்து மருத்துவர்களும் ஈடுபட்டனர்.

இந்த ஆராய்ச்சியில் இறங்க மறுத்த மருத்துவர்களை உயிருடன் புதைக்க உத்தரவிட்டார் மன்னர். இப்படித்தான் ஆரம்பித்தது மன்னருடைய இந்த வினோத திட்டம். மன்னருக்கு எதிரான தத்துவவாதிகள் அனைவரையும் கொல்லும்படி அரசர் அறிவித்தார். ஏனெனில் தத்துவவாதிகளின் பின்னால் மக்கள் திரள்வர். இது அரசாங்கத்திற்கு ஆபத்து என்பதற்காக கருணையே இல்லாமல் பல தலைவர்களின் தலையை பதம் பார்த்தார்கள் மன்னருடைய வீரர்கள். இப்படி மன்னரால் ஒடுக்கப்பட்ட தத்துவங்களுள் புகழ்பெற்ற கன்பூசியசமும் ஒன்று. அதேபோல தாவோ எனும் தத்துவாதியால் முன்மொழியப்பட்ட தாவோயிசமும் தடை செய்யப்பட்டது.

எரியும் புத்தகங்கள்

மரணமில்லா மருந்தைத் தயாரிக்க உத்தரவிட்ட அடுத்தநாளே தன்னை கடவுளின் குழந்தை என அறிவித்துக்கொண்டார் ஹுவாங். எப்படியும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும், அதன்பின்னர் சீனாவின் நிரந்தர கடவுள் ஹுவாங் தானே ? இதற்காகத்தான் தன்னை கடவுளாக்கும் திட்டத்தை அறிவிக்க மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என யோசித்த மன்னர் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தார். மக்களிடம் இருக்கும் கல்வியறிவு, சிந்தனைத்திறன் தான் அரசருக்கு எதிர்முனையில் அவர்களை நிற்க வைக்கிறது. இதற்கு மூல காரணமாக இருக்கும் புத்தகங்களை எல்லாம் எரிக்கும்படி உத்தரவிட்டது இந்தப் பிரச்சினையின் போது தான்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் நூலகங்களில் உள்ள வரலாற்று, தத்துவ புத்தகங்கள் அனைத்தும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டன. இதற்கென தனியாக ராணுவத்தின் படையையே அனுப்பிருந்தார் மன்னர். இதில் தப்பித்தது மருத்துவ புத்தகங்களே. ஏற்கனவே தத்துவாதிகளின் வாய் அடைக்கப்பட்டுவிட்ட்டது. இப்போது புத்தகங்களும் இல்லை. எனவே பிரச்சினையும் இல்லை. எப்படிப்பட்ட மன்னர்!!

காணாமல் போன கன்னிப்பெண்கள்

அரிய மருந்தக் கண்டுபிடிக்க மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட காலம் மன்னருக்கு எரிச்சலடைய வைத்திருக்க வேண்டும். அதனால் தான் மாந்திரீகம், பில்லி சூனியம் பக்கம் இறங்கித் தொலைத்திருக்கிறார். மன்னர் எதிர்பார்க்கும் மருந்தை தயாரிக்கும் வல்லமை சூபூ என்னும் துறவியிடம் இருப்பதாக யாரோ கொளுத்திப்போட அவரைப்பார்க்க மன்னரே கிளம்பினார். தென்சீனக்கடலில் இருக்கும் திஃபூ தீவில் இருந்த சூபூவை சந்தித்தார் ஹுவாங்.

தன்னுடைய சங்கடத்தை மன்னர் சொல்ல இதற்கு என்னிடம் ஒரு வழி இருக்கிறது என்று திருவாய் மொழிந்தார் துறவி. மன்னருக்கு ஒரே குஷி. துறவி தொடர்ந்தார். டாங்லாங் மலையில் மரணத்தைத் தடுக்கும் அதிசய தாவரம் இருப்பதாகவும் அதை ஆண்கள் எடுக்கக்கூடாது எனவும் சொன்னார். அந்த அற்புத மருந்தை எடுக்கவேண்டுமானால் தனக்கு 6000 கன்னிப்பெண்கள் வேண்டும் என துறவி கேட்க, அதற்கென தாராளமாய் ஏற்பாடு செய்யலாம் என்று வாக்குகொடுத்துவிட்டு அரசவைக்கு திரும்பினார் மன்னர்.

நாடெங்கிலும் இருந்து கன்னிப் பெண்களை தேடிக் கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார் மன்னர். இரண்டு வாரங்களில் 6000 பெண்களும் மன்னரின் முன்னால் அணிவகுத்திருந்தனர். உடனடியாக துறவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆறாயிரம் பெண்களையும் பிரம்மாண்ட கப்பலில் தீஃபு தீவிற்கு அனுப்பிவைத்தார் அரசர். ஆனால் அதற்குப்பின்னர் தான் தெரிந்தது. டாங்லாங் மலை என்பதே கட்டுக்கதை என்று. எட்டு ஆண்டுகளாக தேடியும் சூபூ அகப்படவேயில்லை. அந்த ஆறாயிரம் பெண்களும் தான்.

அனைத்து பெண்களையும் அடிமைகளாக விற்றுவிட்டு ஜப்பான் பக்கமாக சூபூ செட்டிலானதாகத் தெரிகிறது. மிகப்பெரிய போர்வீரனும், ராஜ தந்திரியுமான ஹுவாங் செய்த இந்த மாபெரும் தவறுக்கு காரணம் அவருடைய மரண பயம்தான்.

விஷப்பரிட்சை

மருந்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்த மருத்துவர்களும் சும்மா இருக்கவில்லை. கிடைத்த இலை, தழை எல்லாம் போட்டு கசாயம் தயாரித்தாகிவிட்டது ஒன்றும் பிடிபடவில்லை. இறுதியாக உலோகங்களின் கூட்டுச்சேர்க்கையும் கலந்து மருந்து தயாரித்து பார்த்தார்கள். இப்படியான விபரீத ஆராய்ச்சியின் ஒருநாளில் கந்தகத்தை அம்மியில் போட்டு அரைக்க பெரிய சப்தத்தோடு அது வெடித்துச்சிதறியது. அந்த நாள் தான் உலகத்தில் வெடி எனும் வஸ்து பிறந்தது. ஆனால் தேடியது வெடியை அல்லவே. ஆராய்ச்சி தொடர்ந்தது.

கிபி 210 ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி. அதிகாலையிலேயே மருத்துவர்கள் அரண்மனைக்கு கையில் குடுவையோடு வந்திருந்தார்கள். நீங்கள் எதிர்பார்த்த அற்புத மருந்து தயார் என மன்னரிடம் நீட்ட ஆர்வக்கோளாரில் வாங்கிக்குடித்த மன்னர் அடுத்த ஒரு மணி நேரத்தில் பரலோகம் போய் சேர்ந்துவிட்டார். எதற்காக தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தாரோ அது நிறைவேறவேயில்லை. மருத்துவர்கள் மன்னரின் தொல்லை தாங்காமல் மருந்தில் பாதரசத்தை ஆளை காலி செய்துவிட்டதாக பேச்சு!!

மரண விஷயத்தில் டெரராக இருந்தாலும் மற்ற விஷயத்தில் ஹுவான்கின் சாதனைகள் மகத்தானவை. இவருடைய காலத்தில்தான் எடை மற்றும் அளவீடுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நாணய முறை அறிமுகமானது. வெடிமருந்து, திசைகாட்டி என உலகத்தைப் புரட்டிபோட்ட சீனர்களின் கண்டுபிடிப்புகள் யாவும் இவரது காலத்தவையே. வெளியே நடமாடினால் தூரத்திலிருந்து தன்னை யாராவது அம்பெய்தி தாக்கக்கூடும் என்று பயந்த மன்னர் சுமார் மூன்று மைல் நீளத்திற்கு ரகசிய பதுங்குகுழியை பயன்படுத்தியிருக்கிறார். இப்படியான ஆள் தனது கல்லறையை எப்படியிருக்க வேண்டும் என முடிவெடுத்தது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

டெரகோட்டா ஆர்மி 

1976 ஆம் ஆண்டு சீனாவின் ஒரு வீட்டின் பின்புறத்தில் கிணறு தோண்டப்பட்டுக் கொண்டிருந்தது. வரவர மண் இறுக்கம் மிகுந்ததாக மாறவே தொழிலாளர்கள் வேகத்தை அதிகரித்தனர். பெரிய வெண்கல பாளம் ஒன்றின் மீது கோடரி பட்டு சப்தம் எழுந்ததும் அனைவரும் அப்படியே நின்றுவிட்டார்கள். உடனடியாக தகவல் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்றைக்கும் தொல்பொருள் வராலாற்றில் மகத்தான கண்டுபிடிப்பாக கருதப்படும் டெரகோட்டா ராணுவம் கண்டுபிடிக்கப்பட்டது அன்றைய நாளில் தான்.

teracotta army
credit: the world geography

மரணத்திற்குப் பிறகு தன்னுடைய எதிகளை எதிர்த்து போராட தனக்கு படைபலம் வேண்டும் என முடிவெடுத்த மன்னர் உருவாக்கியது தான் இந்த களிமண் ராணுவம். தன்னுடைய இறப்பிற்கு பிறகு இவையனைத்தும் உயிர்பெற்றுவிடும் என மன்னர் தீர்க்கமாக நம்பினார். சுமார் 8000 போர் வீரர்கள், குதிரைப்படை, மருத்துவர்கள், சிற்பிகள், அமைச்சர்கள் என அனைவருக்கும் சிலை வடிக்கப்பட்டது. அதுவும் பூமியின் ஆழத்தில். போர்வீரர்களின் சிலை பல்வேறு கலைஞர்களால் வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தலை ஓரிடம் என்றால் கால் வேறு இடத்தில்!! இப்படி தயாரிக்கப்பட்ட உறுப்புகள் பூமிக்கடியில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட குகையில் முழு சிலையாக உருவம் பெற்றன. இதற்கு அருகிலேயே மன்னரின் கல்லறையும் இருக்கிறதாக நம்பப்படுகிறது.

தன்னுடைய கல்லறையைச் சுற்றிலும் விலையுயர்ந்த கற்கள் பாதிக்கப்பட வேண்டும், பாதரசத்தால் ஆன ஆறு மற்றும் வெண்கலத்தால் ஆன மலைகளுக்கு நடுவே எனது கல்லறை இருக்கவேண்டும் என மன்னர் விரும்பியிருக்கிறார். அவருடைய ஆசையும் பின்னாளில் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

சீனாவின் வராலாற்றையே மாற்றியமைத்த அரசர் சின் சி ஹுவாங் மரணமடைந்த போது அவருக்கு வயது வெறும் 49 மட்டுமே. ஆனால் அவருடைய சாதனைகள் பற்றி இன்றும் உலகம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. கூடவே அந்த மரணமில்லா மருந்தைப் பற்றியும் தான்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!