28.5 C
Chennai
Saturday, February 24, 2024

உலகில் அதிக மக்களைக் கொன்று குவித்த அரசன்: செங்கிஸ்கான் வரலாறு – ஒரு ரத்த சரித்திரம்!!

Date:

நமது நியோதமிழில் வெளிவரும் இம்சை அரசர்கள் தொடரில்…பத்தாவது இம்சை அரசன் செங்கிஸ்கான்!

பொழுது விடிவதற்கு இன்னும் நேரமிருந்தது. படைவீரர்கள் தங்களது கூடாரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். உச்சியில் நிலா காய்ந்த அந்த இரவில் ஒரேயொரு கூடாரத்தில் மட்டும் விளக்கு கண்விழித்திருந்தது. அதைப் பார்த்தபடி இருந்தார் செங்கிஸ்கான். இத்தனை பெரிய கோபி குளிர் பாலைவனத்தை தன்னுடைய சைன்யத்துடன் கடக்கும் தன்னுடைய முடிவு சரிதானா? என தன்னையே கேட்டுக்கொண்டார். தம்முடைய படையை விட இரண்டு மடங்கு பலமுள்ள ஜர்செட்டை (அப்போதைய சீனாவில் இருந்த அரச மரபுகளுள் ஒன்று) எதிர்த்து மங்கோலியாவில் இருந்து கிளம்பி பல மாதங்கள் ஆகிவிட்டன. வர இருக்கும் காலங்கள் நிச்சயம் சாதாரணமானதாக இருக்கப்போவதில்லை என்பதில் எந்த குழப்பமும் அவருக்கு இருக்கவில்லை. கிழக்கு மெல்ல வெளுக்கத் தொடங்கியது.

அது 1211 ஆண்டு. சீனாவின் எல்லையை நெருங்கியது செங்கிஸ்கானின் படை. சுமார் 65,000 வீரர்கள் மத்தியில் நின்று பேசினார் கான். “வெற்றி மட்டுமே இலக்கு. மங்கோலியாவிற்காக, நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக” என வாளை உயர்த்தினார். நாடி நரம்பெல்லாம் யுத்தவெறி பிடித்த வீரர்களின் கூச்சலில் நடுங்கியது நிலம். கூடாரங்கள் மட்டுமே வாழ்க்கை நடத்த வசதி என்னும் எண்ணம் படைத்தவர்களான மங்கோலியர்களுக்கு சீனர்களின் கருங்கல் கட்டிடங்கள் ஆச்சர்யத்தை அளித்தது. அவசரப்பட்டு களத்தில் குதிக்க வேண்டாம் என பொறுமை காத்தார் கான். ஜர்செட்டை வீழ்த்துவதற்கு முன் அதன் அண்டை தேசமான டேன்கட்டின் மீது தனது கவனத்தை திருப்பினார் அரசர். பிராக்டிஸ் மேட்ச் போல. சுலபத்தில் சுருண்டது டேன்கட். அங்கிருந்த வீரர்களை தன் படையில் இணைத்துக்கொண்டார் மன்னர். உயிரைக்காக்க அவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.

ஜர்செட்டை போரினால் வீழ்த்துவது அத்தனை எளிதான காரியம் இல்லை. அதனால் புதிய யுக்திகளை கையிலெடுத்தார். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நகரத்திற்குச் செல்லும் உணவுகளை கொள்ளையடிக்கத் தொடங்கினர் மங்கோலியர்கள். போலவே நகரின் பிரதான குடிநீர் மூலமாக இருந்த கிளையாற்றின் பாதையை அடைத்தனர். நகரத்தை சுற்றி இருந்த அத்தனை கிராமங்களையும் வென்று மக்களை அடிமையாக்கினர். ஏற்கனவே 65,000 குதிரைப்படை வீரர்கள், டேன்கட்டின் வீரர்கள் போதாக்குறைக்கு பொதுமக்கள் வேறு. முதல்வாரம் அமைதியாக கழிந்தது. அடுத்த வாரம் முதல் நகர மக்கள் பசியால் துடித்தனர். நீர் கூட இல்லாமல் தவித்தனர். பசியின் கோரம் எந்தளவிற்கு இருந்ததென்றால் சக மனிதர்களையே கொன்று தின்னும் நிலைக்கு மக்கள் வந்திருந்தனர். அப்போது “தாக்குங்கள்” என உத்தரவிட்டார் செங்கிஸ்கான். நகரம் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டது. குண்டூசி முனை செல்வம் கூட நழுவாமல் மூட்டை கட்டினார்கள். இனி கொள்ளையடிக்க ஏதுமில்லை எனத் தெரிந்த பின்னர் மொத்த நகரத்திற்கும் தீ வைக்கப்பட்டது. தீ தன்னுடைய பிரம்மாண்ட நாவால் லட்சக்கணக்கான மக்களின் உயிரை ருசி பார்த்தது.

செங்கிஸ்கான் வரலாறு
credit: mir corporation

பசிபிக் கடல் முதல் காஸ்பியன் கடல் வரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாமன்னர் செங்கிஸ்கானின் வரலாறு முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சாம்ராஜ்யம் சுமார் 10 மில்லியன் சதுர மைல்களுக்கு பரவியிருந்தது. செங்கிஸ்கானின் இந்த மகத்தான சாம்ராஜ்யம் அலெக்சாண்டரின் சம்ராஜியத்தைவிட நான்கு மடங்கு பெரியது. ரோம் சாம்ராஜ்யத்தை விட இரண்டு மடங்கு பெரியது. வாழ்வில் செங்கிஸ்கான் அளவிற்கு நாட்டின் பகுதிகளை அதிகரித்த மன்னர்கள் யாருமில்லை. ஆனால் இதே செங்கிஸ்கான் தனது சிறுவயதில் தங்குவதற்கு குடிசையில்லாமல் தவிக்கவிடப்பட்டவர். ஆமாம். அவருடைய வரலாறு இப்படி மிகச் சாதாரணமாகத் துவங்குகிறது.

ரத்தக்கட்டி

மங்கோலியர்கள் என்னும் பெயர் நிலைபெற்றது செங்கிஸ்கானிற்கு பிறகுதான். மத்திய ஆசியாவில் நாடோடி இனக்குழுக்களாக இருந்த டாட்டார், மெர்கிட், நய்மன், போர்ஜிகின், டாய்சூட், ஜடாரன், கெரியிட் மற்றும் ஜெர்கின் ஆகிய இனக்குழுக்கள் ஒன்றிணைந்தே தற்போது மங்கோலியர்கள் என அழைக்கப்படுகின்றனர். இதில் போர்ஜிகின் இனக்குழுவின் தலைவராக இருந்தவர் எசுகெய். இவருக்கும் ஹோலுனுக்கும் பிறந்தவர் தான் டெமுஜின் (செங்கிஸ்கானின் ஆரம்பகாலப்பெயர்). பிறக்கும்போதே டெமுஜினின் கையில் ரத்தக்கட்டி இருந்ததால் இவன் பின்னாளில் உலகத்தை ஆள்வான் என்றார் உள்ளூர் பூசாரி ஒருவர். எசுகெய்க்கு தாங்கமுடியாத சந்தோஷம். மூத்த மனைவிக்கு ஓர் மகன் இருந்தாலும் எசுகெய்க்கு டெமுஜின் என்றால் கூடுதல் பிரியம் இருக்கத்தான் செய்தது.

போன பாராவில் சந்தித்த அத்தனை இனக்குழுவும் ஒரே மாதிரியான ஆட்கள் தான். எந்தக்குழுவிற்கும் யாரையும் பிடிக்காது. சொல்லப்போனால் மிகுந்த கோபமும் வெறியும் கொண்டவர்கள். அடுத்த இனக்குழு மீது போர்தொடுப்பதுதான் தங்களுடைய வாழ்க்கை லட்சியம் எனத் திரிந்தவர்கள். அதேபோல் ஓர் இனக்குழுவின் தலைவனுடைய மனைவியை கடத்திச்சென்று திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் எல்லா குழுத் தலைவர்களிடமும் பாரபட்சமில்லாமல் இருந்தது. டெமுஜிங்கின் தாயான ஹோலுனை எசுகெய் மணந்ததே இப்படித்தான். ஆமாம். உண்மையில் ஹோலுன் மெர்கிட் இனத்தின் தலைவனான சிலுடுவின் மனைவி. முதலிரவன்றே ஹோலுனை கடத்தி வந்துவிட்டார் எசுகெய்!!

அடிமை வாழ்வு

இப்படி, நாள் ஒரு போர், பொழுதொரு சாவு என இருந்தவர்கள் இவர்கள். டெமுஜினுக்கு போர்க்கலைகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. வில், வாள், ஈட்டி, மல்யுத்தம் என அனைத்தையும் விரைவிலேயே கற்றுத்தேர்ந்தான் டெமுஜிங். அவனுக்கு ஒன்பது வயதான போதே பெண்பார்க்கும் படலத்தை துவங்கிவிட்டார் அவரது தந்தை. தனது நண்பரின் மகளான போர்ட்டேவை டெமுஜினுக்கு பிடித்திருப்பது தெரிந்ததும் ஒகே சொல்லிவிட்டார் எசுகெய். ஆனால் காலம் வேறுமாதிரியாக பகடை உருட்டியது. டெமுஜின் – போர்டே திருமணம் முடியும் முன்பே எசுகெய் கொல்லப்பட்டார். கொன்றவர்கள் டாட்டார் இனத்தைச் சேர்ந்தவர்கள். அத்தோடு சிறுவன் டெமுஜினையும் சிறைபிடித்து அடிமையாக்கினார்கள். பட்டத்திற்குரிய வாரிசாக நினைக்கப்பட்ட டெமுஜின் துன்புருத்தப்பட்டான். ஒருநாளைக்கு ஒருவேளை உணவு மட்டுமே அவனுக்கு வழங்கப்பட்டது. வாழ்க்கை முழுவதும் இப்படி அடிமையாகவே இருந்து செத்தொழிய வேண்டுமா? என அவன் கண்ணீர் விடாத நாட்களே இல்லை. மாதங்கள் கடந்தோடின.

பத்து வயது பாலகனான டெமுஜிங் படும் கஷ்டங்களைக் கண்டு மனம் கலங்கினார் ஷார்கன் என்னும் முதியவர். அவரும் டாட்டார் இனக்குழுவை சேர்ந்தவர்தான். அவ்வப்போது உணவுப்பொட்டலங்களை அவனுக்கு மறைமுகமாக கொடுத்துவந்த ஷார்கன் ஒருநாள் இரவில் அவனுடைய சங்கிலிகளை அவிழ்த்து தப்பிக்கவிட்டார். வரலாற்று நாயகனை அத்தனை எளிதில் கூண்டிற்குள் அடைத்துவிட முடியுமா என்ன? மீண்டும் குடும்பத்தை அடைந்தபோது அவனை வரவேற்றது பசி.

பசித்த வயிறுகள்

நாடோடிகள் என்பதால் வேட்டையாடுதல் மட்டுமே உணவின் மூலமாக இருந்தது. தனது தம்பிகளுடன் தினமும் வேட்டைக்குச் செல்லும் டெமுஜின் மாலையில் தான் வீடு திரும்புவார். அதுவரை குடும்பம் பட்டினி தான். எசுகெய் மறைவிற்கு பிறகு இனக்குழுவில் இருந்த அனைவரும் தனித்தனியாக சென்றுவிட்டனர். ஒரு எலி கிடைத்தாலும் அனைவருக்கும் பந்தி வைத்த பிறகே தான் உண்டான். ஒருநாள் வேட்டையாடும் போது தனது அண்ணன் (எசுகெயின் முதல் மனைவியின் மகன்) கறியை திருடியதாக அவனைக் கொன்றான் டெமுஜிங். வாழ்வதென்றால் அனைவரும் வாழ்வோம். செத்தால் சேர்ந்து சாவோம் என்றான் எஞ்சிய தனது தம்பிகளிடம்.

உணவிற்கு தட்டுப்பாடு இல்லாமல் இருந்த காலத்தில் மீண்டும் திருமணப்பேச்சை ஆரம்பித்தாள் ஹோலுன். போர்ட்டேவை தேடிச்சென்றான் டெமுஜிங். தான் இழந்ததை எல்லாம் சொன்னான். தன்னால் இந்த உலகத்தை வெல்ல முடியும் என்றான். போர்ட்டேவைத் திருமணம் செய்து தாருங்கள் என்றான் அவள் தந்தையிடம். அடுத்தநாள் எளிமையாக திருமணம் முடிந்தது. ஆனால் காலம் கழுத்தை இருக்கிப்பிடித்தது. போர்ட்டேவை அழைத்துவந்த முதல் நாளே மெர்கிட் இனக்குழுத் தலைவன் சிலுடு அவளைக் கடத்திச் சென்றான். சிலுடு டெமுஜினின் தாயான ஹோலுனின் முதல் கணவர்!!

பதவிப்போர்

போர்ட்டேவை மீட்க ஆங் கான் மற்றும் சிறுவயது நண்பனான ஜமுக்கா ஆகியோரது உதவிகளை நாடினான் டெமுஜிங். இதில் ஆங் கான் என்பவர் கெரியிட் இனக்குழுவின் தலைவர். அதேபோல ஜடாரன் இனக்குழுவின் தலைவனாக இருந்தவர் ஜமுக்கா. மெர்கிட்கள் தோற்று ஓடினார்கள் போரில். போர்ட்டேவை டெமுஜின் மீண்டும் சந்தித்தபோது அவள் கர்ப்பமாக இருந்தாள். ஆனாலும் அவளை ஏற்றுக்கொண்டான் டெமுஜின். இப்படி ஒற்றுமையாக இருந்த ஜமுக்கா மற்றும் ஆங் கான் மற்றும் டெமுஜிங் இடையே சில ஆண்டுகளிலேயே மோதல் வெடித்தது. எல்லாம் நாற்காலி ஆசைதான். பிரம்மாண்ட மங்கோலிய பேரரசை நிர்வகிக்கும் தகிப்பில் இருந்த டெமுஜின் ஒன்றாக இணைந்திருந்த ஜமுக்கா மற்றும் ஆங் கானை வீழ்த்தினார்.

பிரபஞ்சத்தின் அரசன்

சிதறிக்கிடந்த குழுக்களை ஒன்றுதிரட்டினார். அவர்கள் டெமுஜிங்கை மன்னனாக ஏற்றுக்கொண்டார்கள். ஒட்டுமொத்த மங்கோலிய பேரரசையும் உருவாக்கிய பின்னரே செங்கிஸ்கான் என தன்னை அறிவித்துகொண்டார். செங்கிஸ்கான் என்றால் பிரபஞ்சத்தின் அரசன் எனப்பொருள். டெமுஜிங், செங்கிஸ்கானாக மாறியது கிபி. 1206 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி. தலைமைப்பொறுப்பை ஏற்றவுடன் அவர்செய்த முதற்காரியம் நிலையான சட்டத்தை ஏற்படுத்தியது தான். அதனை கையெழுத்து பூர்வமாக ஆவணமாக்கினார்கள். சட்டப்புத்தகம்!!

இனிமேல் பெண்களை கவர்வது, திருட்டு, ஊழல், வரி ஏய்ப்பு என எதுவும் என் நாட்டில் இருக்க கூடாது. இருந்தால் மரண தண்டனை நிச்சயம் என அறிவித்தார். இதுவரை நாம் பார்த்ததெல்லாம் அவருடைய ஒருமுகம் மட்டுமே. செங்கிஸ்கானுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு செங்கிஸ்கான் விடுக்கும் செய்தி ஒன்றுதான். ஒன்று சரணடைதல், மற்றொன்று உயிரை விடுதல். தன்னை யாரும் எதிர்க்ககூடாது என்பதில் கவனமாக இருந்த அரசர் தண்டனைகளை கடுமையாக்கினார்.

mongol-empire-map-genghis-khan
Credit: Tony Mapped it

எதிரிகளின் தலைவனை சிறைப்பிடித்து கண்களில் உருகிய வெள்ளியை ஊற்றுவது, உயிருடன் கொதிக்கும் நீருக்குள் மூழ்கடிப்பது என தனது மூர்க்கத்தின் வேகத்தை வெளியுகத்திற்கு வெளிப்படுத்தினார். இதனாலேயே பல மன்னர்கள் செங்கிஸ்கானுக்கு அடிபணிய ஒப்புக்கொண்டனர். ஆனால் அவருடைய உச்சபட்ச வெறித்தனம் வெளிப்பட்டது மத்திய ஆசிய நாடுகளின் மீதான படையெடுப்பின் போதுதான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ரத்த வெறி

குவார்சிம் பேரரசின் அங்கமாக இருந்த நிஷாபுரை தாக்கியது செங்கிஸ்கானின் படைகள். கலிஃபாவின் வீரர்கள் கோட்டையை பாதுகாக்க கடுமையாக போர் புரிந்தனர். செங்கிஸ்கானின் படையை வழிநடத்தியது அவருடைய மருமகன் டோகுசர். போர்க்குணமும், சமயோசித புத்தியும் நிறைந்த டோகுசரின் உயிரைக் குடித்தது ஓர் அம்பு. குதிரையிலிருந்து வெற்றுடம்பாக கீழே விழுந்தார் டோகுசர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த டோகுசரின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யுத்தகளத்திற்கு வந்து சேர்ந்தாள். கண்ணீரும் கவலையுமாக வந்த மகளிடம் மண்டியிட்டார் செங்கிஸ்கான்!! உலகத்து ராஜாக்களின் கண்களில் விரல்விட்டு ஆட்டியவர் கலங்கிப்போனார். என்ன செய்ய வேண்டும் என மகளின் கன்னத்தில் கைவைத்து கேட்டார். நிஷாபூர் தரைமட்டமாக வேண்டும் என்றாள் அவள் பளிச்சென்று.

அதுவரை கூடாரத்தில் இருந்து கட்டளைகளை மட்டுமே அளித்துக்கொண்டிருந்த செங்கிஸ்கான் களத்தில் இறங்கினார். வில்லும் வாளுமாக அவரது கைகள் ஆர்ப்பரித்தன. செங்கிஸ்கானின் உயிர் பசியைக்கண்ட எதிராளிகள் தெறித்து ஓடத்தொடங்கினர். ஒருவரையும் விடாதே என முழங்கினார். சற்று நேரத்தில் மொத்த நிஷாபூர் மக்களையும் ஒன்றாக இணைத்துக்கட்டி தீவைத்தனர் செங்கிஸ்கானின் வீரர்கள். இதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம். நகரின் எந்த உயிரும் மிச்சமில்லை எனத்தெரிந்த பின்னரே போர் நிறுத்தத்தை அறிவித்தார் அரசர். நிஷாபூர் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,47,000!!

கிட்டத்தட்ட இதே நேரத்தில் வேறொரு துக்கச்செய்தியும் அவர் காதுகளுக்கு எட்டியது. ஆப்கானிஸ்தானிற்கு அருகே உள்ள பானியான் என்னுமிடத்தில் நிகழ்ந்த போரில் தனது பேரன் முட்டுஜென் கொல்லப்பட்டான். இது செங்கிஸ்கானின் கோபத்தில் மேலும் பெட்ரோல் ஊற்றியது. மொத்த படையும் பானியானுக்குள் நுழைந்தது. எதிர்ப்பட்ட அனைவரையும் கொன்றுவீசினார்கள் செங்கிஸ்கானின் வீரர்கள். செங்கிஸ்கானின் ருத்ரத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16 லட்சம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

1227 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் மீண்டும் சீனாவின் மீது போர்தொடுத்தார் செங்கிஸ்கான். பயணத்தின்போது காட்டுக்குதிரை ஒன்றை வேட்டையாடும் போது காயமுற்று வீழ்ந்த கான் பின்னர் எழவே இல்லை. கனவு சாம்ராஜ்யத்தை தன் கண்முன்னே உருவாக்கிக்காட்டியவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அவரது அகண்ட சாம்ராஜ்யம் அவருடைய நான்கு மகன்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

நீடிக்கும் மர்மம்

செங்கிஸ்கானின் கல்லறை மிகுந்த மர்மங்களை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் இறப்பதற்கு முன்பே போர்ட்டே இறந்திருந்தார். ஈம கிரியைகளை யார் செய்தார் என்ற குறிப்புகளும் இல்லை. மனைவி தான் ஈம கிரியைகளை செய்யவேண்டும் என மங்கோலிய சட்டம் இருந்தது. ஆனால் பிரச்சினை என்னவெனில் செங்கிஸ்கானிற்கு எத்தனை மனைவிகள் என யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒவ்வொரு நாட்டை பிடிக்கும் போதும் அந்நாட்டு பெண்ணை மணந்துகொள்வார் மன்னர். அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினால் அவருக்கு அத்தனை மனைவி இருந்திருக்க வேண்டும் என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயமாகவே இருந்து வருகிறது. போலவே அவருக்கு இருந்த பெண்குழந்தைகளின் எண்ணிக்கை.

ஐரோப்பா – ஆசியாவில் 200 பேரில் ஒருவர் நேரடி செங்கிஸ்கான் வம்சத்தை சேர்ந்தவராக இருக்ககூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படியென்றால் அவருடைய குடும்பம் எத்தனை பிரம்மாண்டமாக இருந்திருக்க வேண்டும் ? நினைத்தாலே தலை சுற்றுகிரதல்லவா? உலக வரலாற்றில் மிகுந்த போர்வேற்றிகளை ருசித்த மன்னர் என்றால் சந்தேகமே இல்லாமல் அது செங்கிஸ்கான் தான். அவரது இந்த பிரம்மாண்ட வெற்றிகள் அவருடைய குரூரத்திற்கு திரையிட்டு விடுகின்றன என்பதே எதார்த்த உண்மை.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!