28.5 C
Chennai
Sunday, February 25, 2024

ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுநடுங்கச் செய்த “கால் ஒடிந்த அரசனைத்” தெரியுமா?

Date:

நமது நியோதமிழில் வெளிவரும் இம்சை அரசர்கள் தொடரில்… மூன்றாம் இம்சை அரசன் தைமூர்!

இம்சை அரசர்கள் தொடரில் இதுவரை அலாவுதீன் கில்ஜியையும், முகமது பின் துக்ளைக்கையும் சந்தித்திருப்பீர்கள். இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக வெளிநாட்டு அரசர் ஒருவரைப் பார்க்கலாம். எல்லா ஊரிலும் இப்படியான கொலைவெறி கொண்ட ஆசாமிகள் இருக்கத்தான் செய்திருக்கிறார்கள். சரி, யார் அந்த அரசன் என்கிறீர்களா? கால் ஒடிந்த அரசன் என்றவுடனேயே உங்களுடைய மூளையின் வரலாற்றுப் பக்கத்தில் மணி அடித்திருக்கக்கூடும். ஆமாம். நாம் இந்தவாரம் சந்திக்க இருப்பது தைமூரைத்தான். தைமூரைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர் அவருடைய காலகட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

14 ஆம் நூற்றாண்டில் பூமி சுற்றிக்கொண்டிருந்தது. மத்திய ஆசியாவில் மூன்று இனக்குழுக்கள் அதிகார பலத்தை அதிகரித்துக்கொண்டிருந்தன. இவர்கள் மூவருக்கும் ஒரே எண்ணம் தான். தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை அதிகரிக்க வேண்டும். கிட்டத்தட்ட தலைவர் என்ற சொல் உருவானதிலிருந்தே இந்த நாடுபிடிக்கும் பழக்கம் மனிதர்களுக்கு வந்து தொலைத்துவிட்டது. உஸ்பெஸ்கிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பல மன்னர்களுக்கு ட்ரான்ஸோக்ஸியானா பிரதேசம் மீது ஒரு கண். எப்படியாவது அதனை வாரிச்சுருட்ட முகூர்த்தம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் சன்னி முஸ்லிம்கள். அதேநேரத்தில் சஃபாவித் அரசிற்கு சொந்தமான நிலப்பகுதியை கைப்பற்ற ஈரானின் அரசுகள் முட்டிமோதிக்கொண்டிருந்தன. இந்த ஈரானியர்கள் அனைவரும் ஷியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள்.

இவர்களுக்கு இடையே நூற்றாண்டு காலமாக இருந்த இந்த “பங்காளிச் சண்டை” சொத்து சேர்க்கும் ஆசையை வெறியாக்கிவிட்டு வேடிக்கை பார்த்தது. மூன்றாவதாக துருக்கியை மையமாகக்கொண்ட ஒட்டமான் பேரரசு. இந்த சுல்தானுக்கு ஆசை ஐரோப்பா மீது. இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்த மூவருக்குள்ளும் நேரடி பகை ஏதும் கிடையாது. இதில் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை அடுத்தவர் கைப்பற்ற போட்டிபோடவில்லை. ஆனால் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, மொத்த ஆசியாவிற்கும் “டான்” ஆகும் ஆசை இந்த மூன்று தரப்பிற்கும் இருந்தது. காலம் நாம் நினைத்ததை எப்போதும் நிகழ்த்திவிடாது என்பதற்கு சான்றாக 1336 ஆம் ஆண்டு அந்த பிறப்பு இருந்தது.

மங்கோலிய நாடோடி குலத்தில் பிறந்த அந்தக் குழந்தை மொத்த ஆசியாவையும் பின்னாளில் கைப்பற்றும் எனச் சொல்லியிருந்தால் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள். முன் பாராவில் சொன்னதைப்போல காலத்தை யார்தான் கணிக்க முடியும்? அதிர்ஷ்டவசமாக அக்குழந்தை பேரரசனாக மாறியது. இதில் துரதிருஷ்டம் என்னவெனில் ஈவு, இரக்கம் இல்லாத மன்னரானதுதான். தைமூர் சிறுவயதிலிருந்தே மூர்க்கத்தனமும், போரார்வம் கொண்டவராகவும் இருந்திருக்கிறார். இதுவே சாமர்கண்டில் மிகப்பெரிய பேரரசை அமைக்க இவருக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

timur tomb

போரின்போது காலில் ஏற்பட்ட காயத்தினால் வலதுகால் கடுமையாக பாதிக்கப்பட்டது. காயம் குணமடைந்தாலும் அவரால் பழையபடி நடக்க முடியவில்லை. அதனால் ஒருகாலை தாங்கி, நடப்பார் தைமூர். இதனாலேயே அவரை நொண்டி தைமூர் என பலரும் அழைத்தார்கள். காயம் உண்மைதான் ஆனால் போரெல்லாம் இல்லை. சிறுவயதில் வழிப்பறி செய்தபோது வந்தவினை இது என சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எது உண்மையெனத் தெரியவில்லை. ஆனால் தைமூர் காலில் காயம்பட்டது பொய்யில்லை.

தாக்குதல்கள், ஆக்கிரமித்தல் இதுதான் தைமூர் என்ற மன்னரின் ஒருபாதி. ஆனால் தேவையே இல்லாத இடத்தில் அவர் காட்டிய கொடூரத்தனம் பற்றி படிக்கும்போதுதான் நமக்கு பதறுகிறது. ஏன் இத்தனை மூர்க்கம் அவருக்கு என்ற கேள்விக்கு இரண்டு பதில்களை சொல்லலாம். ஒன்று மங்கோலியர்களின் அப்போதைய நிலை. ஆசியாவை பொறுத்தவரையில் மங்கோலியர்கள் முரட்டுத்தனமும், நாகரீக பழக்க வழக்கங்களும் அற்றவர்களாக கருதப்பட்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் பெரும்பான்மை மங்கோலிய மக்கள் நாடோடிகளாக இருந்தவர்கள். இந்த அடைமொழியை மாற்ற தன்னை மிதமிஞ்சிய வலிமை வாய்ந்த மன்னராக வெளிக்காட்டிக்கொள்ளும் தேவை தைமூருக்கு இருந்தது. மற்றொன்று இயல்பாகவே மங்கோலிய சிற்றரர்சர்களுக்கு இருந்த கோபம். அவர்களைப் பொறுத்தவரை எதிரியின் தலை உடம்பிலிருந்து தனியாக இருக்கவேண்டும். அப்போதுதான் நிம்மதி. பாவ மன்னிப்பு, கருணை போன்ற வார்த்தைகள் எல்லாம் மங்கோலியர்களின் அகராதியில் கூட இல்லை. இப்படி ஆபத்தே ஆளான தைமூருக்கு இந்தியாவின் மீது ஆசை வந்து தொலைத்தது.

அது 1398 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம். பஞ்சாப் வழியாக வலதுகால் எடுத்து வைத்தது தைமூரின் படை. போர் என்று வந்துவிட்டால் படையில் இருக்கும் அனைவருக்குமே தைமூரைப் போன்றே ரத்தவெறி பிடித்துவிடும். கொலை செய்ய “மூட்” இல்லையென்றால் பொதுமக்களை கைது செய்வார்கள். பரவாயில்லையே! என பச்சாதபப்பட வேண்டாம். கைது செய்பவர்களை சங்கிலியால் பிணைத்து குதிரையின் பின்னால் நடக்கச் செய்வார்கள். தைமூரின் குதிரை எங்கு நிற்கிறதோ அங்குதான் இந்த அடிமைகளுக்கும் ஓய்வு கிடைக்கும். பசி, தண்ணீர் என்றெல்லாம் வாயைத் திறக்கவே முடியாது. இப்படித்தான் பஞ்சாப் மக்களை சிறை பிடித்தார் தைமூர். அதுவும் ஒரு லட்சம் பேரை! அப்படியே பொடி நடையாக கூட்டிக்கொண்டு டெல்லியை அடைந்தது இந்தப்படை. தைமூரின் இந்த காட்டுமிராண்டி வீரர்கள் வெளியிலேயே இருக்கட்டும். நாம் டெல்லிக்குள் போய் நிலவரம் என்னவென்று பார்த்துவிட்டு வரலாம்.

முகமது பின் துக்ளக்கிற்கு பிறகு பிரோஷா துக்ளக் டெல்லியை சிறப்பாக ஆட்சி செய்தார். பொருளாதாரம் சீராக தொடங்கிய நேரத்தில் பிரோஷா துக்ளக் இறந்துபோகவே முகமது ஷா அரியணையில் உட்கார்ந்தார். விவரம் தெரியாத அரைகுறை அரசராக இருந்த (வயதும் குறைவுதான்) முகமது ஷாவிற்கு தைமூரின் படையெடுப்பு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. டெல்லி மீது படையெடுக்க இந்துஸ்தானத்தில் யாருக்கு தைரியம் இருக்கிறது? என கோபத்தில் கொப்பளிக்க, மாமன்னா,” தைமூர் உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்தவர் என அடக்கத்துடன் சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஒருவர். இப்படி தைமூர் பற்றித் தெரியாமலே போர் வந்தால் போரிடலாம். நம்மிடம் வாள் இல்லையா? ஆட்கள்தான் இல்லையா? என கத்தியிருக்கிறார் சுல்தான். ஷாவின் இந்த தவறுக்கு அவர் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருந்தது.

கூடாரத்தில் அமர்ந்தபடியே டெல்லி அரண்மனையை வெறித்துக்கொண்டிருந்தார் தைமூர். பெரிய மைதானத்தில் ஒரு லட்சம் அடிமைகளும் தங்கவைக்கபட்டிருந்தார்கள். இந்த இரவு, ஒரே இரவு. அடுத்தநாள் டெல்லி என் கையில் என கடைசித் தம்ளர் மதுவைக் குடித்தார் தைமூர். ஆனால் அவர் நினைத்தது அடுத்தநாள் நடக்கவில்லை. தைமூரைப் பொறுத்தவரை ஆழம் தெரியாமல் கால் விட்டுப்பார்க்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். டெல்லி அரண்மனையின் புவியியல் கூறுகள், வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கண்காணிக்க தன் தளபதிகளோடு மாலையில் சென்றிருக்கிறார்.

வாளுக்குத்தான் வேலை வந்துவிட்டதோ என எண்ணி அவசர அவசரமாக ரத, கஜ, துரக, பதாதிகளை அனுப்பி தைமூரை விரட்டி அடித்தார் முகமது ஷா. உண்மையில் தைமூர் வந்தது வேடிக்கை பார்க்கத்தான். இப்படி தோற்று தனது கூடாரத்திற்கு வந்து சேர்ந்த அடுத்தவினாடி வீரர்களுக்கு ஓர் உத்தரவு அளிக்கப்பட்டது. அடிமைகளாக இருந்த அனைவரையும் முடித்துவிடுங்கள் என. ஒரு லட்சம் பேரையுமா? என கேட்கக்கூட தளபதிகளுக்கு பயமாக இருந்தது. ஒரே இரவு. ஒரு லட்சம் பேரையும் வீழ்த்தி பூமியை சிவப்பாக்கினர் படையினர். அடுத்து வரப்போகும் நாட்கள் இதைவிடக் கொடுமையாக இருக்கும் எனத் தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தனர் டெல்லி மக்கள்.

சூரியன் விழிப்பதற்கு முன்பாகவே விழித்திருந்தனர் தைமூரின் படையினர். ஒரு லட்சம் பேருடைய குருதி குடித்தும் பசியடங்கா வாள்கள் மின்னிட அணிவகுத்தனர் டெல்லி அரண்மனையை நோக்கி. முகமது ஷாவிடமும் படைபலம் இருந்தது. குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை, காண்டாமிருகப்படை என அனைத்தையும் களத்தில் இறக்கினார். அத்தனையையும் நொறுக்கி அடித்தார்கள் தைமூரின் படையினர். காலையில் ஆரம்பித்தது இந்த யுத்தம். பொழுது சாய்வதற்குள் டெல்லி தைமூரின் மடியில் சாய்ந்துவிட்டது. பொறுமையாக உடல்களை அப்புறப்படுத்திவிட்டு அரண்மனைக்குள் நுழைந்தது இந்தப்படை.

timur statue

உடனடியாக அரசாங்க அதிகாரிகள், அந்தப்புர அழகிகள், அரசரின் மனைவிகள் அனைவரும் தைமூரின் முன்னால் நிறுத்தப்பட்டனர். ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டது. கஜானாவில் இருந்த கடைசி தங்கக் காசும் கைப்பற்றப்பட்டது. மொத்த செல்வங்களையும் கணக்கெடுத்த பின்னர்தான் தைமூரின் படைகள் ஓய்வெடுக்கச் சென்றன. அடுத்தநாள் டெல்லியின் நுழைவுவாயில் அனைத்திலும் காவலுக்கு ஆட்களை நிறுத்தினார் தைமூர். புதிய அரசரிடம் அனுமதி வாங்காமல் காகம் கூட நகரத்தை விட்டு வெளியேற முடியாத நிலை. முதல் வாரம் நன்றாகத்தான் போனது.

இருந்தவருக்கு வந்தவர் பரவாயில்லை என்ற எண்ணத்திற்கு டெல்லி மக்கள் வந்திருந்தனர். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அந்த முதல்வாரம் வரை. திடீரென தைமூரின் ராட்சத மூளை விழித்துக்கொண்டது. டெல்லியின் வரலாற்றில் மறக்க முடியாத அந்தநாள் மற்றைய நாட்களைப்போலவே விடிந்தது. சிவந்த கண்களும், துடிக்கும் கண்ணத் தசைகளுமாக அமர்ந்திருந்த தைமூர் “டெல்லியை தரைமட்டமாக்குங்கள்” என முதன்மைத் தளபதிக்கு உத்தரவிட்டார். ஆடிப்போனார்கள் அரண்மனைவாசிகள். தைமூரின் படை தெருவில் இறங்கியது. ஓய்வெடுத்தது போதும் என உறைவாளோடு கிளம்பினார்கள். கண்ணில் பட்ட அத்தனை பேரையும் கொன்றார்கள். வயதானோர், பெண்கள், குழந்தைகள் என எவ்வித பாகுபாடும் இல்லை. வன்முறைக்கு வயதேது? வரம்பேது?

டெல்லி வீதிகள் இரத்தச் சகதியில் வழுக்கின. திரும்பிய பக்கமெல்லாம் மனித உடல்கள். மறக்காமல் அத்தனை நகைகளையும் வாங்கிக்கொண்ட பின்னரே வாளுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வீடாய் இந்த கொலை படலம் நிகழ்ந்தது. இத்தனைக்கும் மத்தியில் கலைஞர்களை மட்டும் சிறைபிடித்து பத்திரப்படுத்தி இருக்கிறார் தைமூர். டெல்லியை மொத்தமாக “காலி ” செய்ய அவ்வீரர்களுக்கு ஒருவாரம் ஆனது. எல்லாம் முடிந்தது என உறுதிசெய்யப்பட்ட பின்னரே நிம்மதியடைந்தார் தைமூர். குண்டுமணி தங்கம் இல்லாமல் டெல்லி சல்லடை போட்டு சலிக்கப்பட்டது. மலைபோல் ஆபரணங்கள் தைமூரின் முன்னால் குவிக்கப்பட்டது. அதனைப் பார்த்த மன்னர் ” அனைத்தையும் கட்டி ஒட்டகத்தின் மீது ஏற்றுங்கள், நாம் ஊருக்குத் திரும்பப் போகிறோம்” என்றார்.

டன் கணக்கில் தங்கம், அடிமைகளாக்கப்பட்ட கலைஞர்கள் மற்றும் டெல்லி அரண்மனையில் இருந்த 120 யானைகள் என தைமூரின் படை இந்தியாவை விட்டு அகன்றது. சாமர்கண்ட் திரும்பிய அடுத்த ஆண்டே அடுத்த திட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டார் தைமூர். மத்திய ஆசியாவிலேயே செல்வம் கொழிக்கும் இந்தியாவை சுருட்டி சட்டைப்பைக்குள் வைத்தாகிவிட்டது. அடுத்தது, இந்த பிராந்தியத்தில் செல்வாக்குப்பெற வேண்டுமென்றால் மிகப்பெரிய அரசர் ஒருவரைத் தோற்கடிக்கவேண்டும். என்ன செய்யலாம்? யாரை செய்யலாம்? என தைமூர் தாடியைச் சொறிந்துகொண்டே உலக வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. “படைகளைத் தயார் செய்யுங்கள். வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்ற தைமூரின் கண்கள் துருக்கியை குறிவைத்திருந்தன.

தைமூர் துருக்கியைத் தேர்ந்தெடுத்தது தற்செயல் அல்ல. அப்போது துருக்கியின் சுல்தானாக இருந்தவர் சுல்தான் இரண்டாம் பயேசித். இந்த துருக்கியர்களுக்கு மங்கோலியர்களைக் கண்டால் இளக்காரம் தான். தைமூருக்கு அரசர் என்ற மரியாதையும் அளிக்க பயேசித் தயாராக இல்லை. வழக்கமாக நடைபெறும் கடிதப்போக்குவரத்துகள் கூட தைமூரின் குட்டிக்கண்களை இன்னும் சிவப்பாக்குவதாகவே இருந்தன. ஒவ்வொரு முறையும் தன்னை மட்டம்தட்டும் சுல்தானை ஒழிக்கப் புறப்பட்டார் தைமூர். துருக்கியின் வீதிகளில் அலைமோதியது தைமூரின் படை.

அதேநேரத்தில் பயேசித்தும் சாதாரண ஆள் இல்லை. ஐரோப்பா முழுவதும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. இவருடைய தாக்குதலுக்கு பயந்து செர்பிய மன்னர் தனது தங்கை டெஸ்பினாவை பயேசித்திற்கு மணமுடித்து வைத்தார். (இதற்கு அப்போதைய காலகட்டத்தில் ராஜதந்திரம் என்று பெயர்.) வலிமையான படைகள் அவர் வசமும் இருந்தன. ஆனால் அதனை தைமூரின் படை ஒரே நாளில் வீழ்த்தி துருக்கியை தனதாக்கிக் கொண்டது. பயேசித்தின் கண்முன்னே டெஸ்பினாவை சித்ரவதை செய்தான் தைமூர். பின்னர் பொறுமையாக பயேசித்தை கொன்றார்கள். இந்த அவமானம் காரணமாக துருக்கி சுல்தான்கள் அடுத்த இருநூறு வருடங்களில் பட்டத்து ராணி என யாரையும் அமர்த்திக்கொள்ளவில்லை!!

துருக்கியும் துடைத்து எடுக்கப்பட்டது. ஆனால் தைமூரின் பயணம் அத்தோடு நிற்கவில்லை. தொடர்ந்து பயணித்து அனடோலியா, காஸ்பியன் மற்றும் கருங்கடல் பகுதிகள், ஏஜியன் பிரதேசத்தில் இருந்த இஸ்மார் ஆகியவற்றில் தனது வெற்றிக்கொடியை நாட்டினார். படைபலமும் அதிகமானது. தன்னுடைய 68 வயதில் சீனாமீது போர்தொடுக்க நினைத்திருக்கிறார் தைமூர்!! போர் என்றால் அப்படி என்னதான் விருப்பமோ இந்த கிழவனுக்கு.. ஆனால் காலம் அவரை அனுமதிக்கவில்லை. மன்னருக்கு உடல்நலக்குறைவு என செய்தி மக்களை முழுமையாக பரவுவதற்கு முன்னரே இறந்துபோனார் தைமூர்.

போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் மண்டை ஓடுகளை வைத்து பிரமிடு கட்டும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. அதேபோல தர்பாரில் உக்கார்ந்து தண்டனை தருவதென்றால் தைமூருக்கு ஏக குஷி. பல தண்டனைகளைக் கேட்கவே பயமாக இருக்கிறது. மிகவும் கண்டிப்பான அரசராக இருந்த தைமூர் 14 பெண்களைத் திருமணம் செய்துகொண்டார். (அடுத்த வரியை படித்த பின்னர் ஆச்சர்யப்படவும்). இவைபோக 30க்கும் மேற்பட்ட அழகிகளை தனது அந்தப்புர சேவகத்திற்காக பயன்படுத்தினார் என்பது தெரிகிறது. அப்படி ஒரு ஆளுக்கு இப்படி ஒருபக்கம் இருந்திருக்கிறது!!

தைமூருக்கு கலை என்றால் கொள்ளைப்பிரியம். அதனால் தான் இந்தியாவில் இருந்து கட்டிடக்கலை கலைஞர்களை அடிமைகளாக்கி அழைத்துச்சென்று சாமர்கண்டில் மிகப்பெரிய அரண்மனை ஒன்றினைக் கட்டினார். தான் படையெடுத்த நாடுகளில் இருந்து இப்படி கலைஞர்களை வாக்கிங் செய்யவைத்து சாமர்கண்டிற்கு அழைத்துச் செல்வது தொடர்ந்திருக்கிறது. இந்தக் கலவையான மன்னரின் கல்லறை சற்றே திகிலூட்டும் சமாச்சாரம் கொண்டது.

tomb of timur
Credit: Flickr

தைமூர் கல்லறையில் “இதனைத் திறப்பவரின் நாட்டில் போர் மேகம் சூழும் “என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டதாம். இப்படி எதையாவது எழுதிவைத்துக்கொள்வது அப்போதைய ஃபேஷன் தான் என்றாலும், எந்த ஆராய்ச்சியாளரும் அதனை நெருங்கத் தயங்கினார்கள். எதற்கு வம்பென்று தான். ஆனால் இதனைக் கேள்விப்பட்டு ரஷியாவில் ஒருவருக்கு நாடி துடித்திருக்கிறது. ஜெரசிமோவ் என்னும் ஆராய்ச்சியாளர் தைமூரின் கல்லறையைத் திறந்திருக்கிறார். ஆண்டு 1941. ஆமாம். அடுத்த சில தினங்களில் ஹிட்லரின் நாஜிப்படை ரஷியாமீது படையெடுத்தது. இப்படி குழப்பமும், கோபமும், திகிலும் நிரம்பிய தைமூரின் கல்லறையை அதன்பின்னர் யாரும் தொடக்கூட இல்லையாம். இன்றும் சாமர்கண்டில் அவருடைய கல்லறைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் போய் பார்த்துவிட்டு வாருங்கள். தொட்டுவிட வேண்டாம்!!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!