ரோம் பேரரசர் காலிகுலா அன்றையதினம் காலையிலேயே நாடகம் பார்க்கச் சென்றிருந்தார். தலைமை தளபதியான காசியஸ் கயீரியா மன்னரைப் பார்க்க மண்டபத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தார். நாடகம் மதிய உணவு இடைவெளிக்காக நிறுத்தப்பட்டது. கூட்டம் கலைந்தது. மன்னர் அரங்கை விட்டு வெளியே வந்ததும் அவரை வரவேற்றது தளபதியின் வாள். அடிவயிற்றில் ஆழமாக இறங்கி வெளியே வந்தது. வலியால் துடித்து வீழ்ந்த மன்னர் தன் சொந்த சேவகர்களின் குருவாட்களின் கோபத்திற்கு இரையானார். புகழ்பெற்ற அகஸ்டஸ் சீசரின் பேரனான காலிகுலாவை ஏன் அவருடைய வீரர்களே கொல்லவேண்டும்? நான்கே ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காலிகுலாவின் இந்த கொடூர மரணத்திற்கு காரணம் காலிகுல்லாவேதான்.
காலிகுல்லா அரசரானபோது ஒட்டுமொத்த ரோமும் அவர் மண்டையில் பூக்களைக் கொட்டியது. செனட் சபையின் அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்துதான் காலிகுல்லாவை அரசாக்கினார்கள். ஆனால் இதுவெல்லாம் ஆறுமாதம் கூட நினைக்கவில்லை. பெயரைக் கேட்ட உடனையே வரலாற்று ஆய்வாளர்கள் பலரையும் முகம் சுழிக்கும் காலிகுல்லாவின் வாழ்க்கை ஒருமிகச்சிறந்த போர்வீரரின் மகனகாகத் துவங்கியது.
குட்டிச்செருப்பு
டைபீரியஸ் ரோம் மன்னராக இருந்தபோது தலைமை ராணுவ தளபதியாக இருந்தவர் ஜெர்மானிக்கஸ். அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜெர்மானிக்கசிற்கு புகழ்பெற்ற முன்னாள் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பேத்தியான அக்ரோபீனாவை மணமுடித்து வைத்தார்கள் பெரும்தலைகள். அரசவாரிசு என்பதால் மட்டுமல்லாது ஜெர்மானிக்கஸ் உண்மையாகவே போர் தந்திரத்தில் ஜித்தனாக அறியப்பட்டவர். எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் போரைத் திறம்பட வழிநடத்துவதில் அசாத்திய திறமை படைத்தவர். வாழ்வின் பெரும்பான்மையான பொழுதுகளை யுத்த களத்திலும், தந்திரங்களை வகுக்கும் மந்திராலோசனை மண்டபங்களில் மட்டுமே ஜெர்மானிக்கஸ் இருந்தார். ரோம் நகரத்து சீதையான அக்ரோபீனாவும் அவர்கூடவே இருந்தார்.
டைபீரியசின் நிம்மதியான அரசாட்சிக்கு ஒரு வகையில் காரணம் ஜெர்மானிக்கஸ் தான். ஆனால் மன்னருக்கு ஜெர்மானிக்கசை ஏனோ பிடிக்காமல் போனது. மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு இதற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையில் இருந்த இந்த பனிப்போர் ஒருகட்டத்தில் உச்சத்தை அடைந்தது. தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தார் மன்னர். ஏனெனில் நேரடியாக ஜெர்மானிக்கஸ் மீது கைவைப்பதெல்லாம் ஆபத்து என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இறுதியில் அதற்கான நேரமும் வந்தது. சிரியா மீது போர்தொடுத்தது ரோம். இதில் ஜெர்மானிக்கஸ் கொல்லப்பட்டார்.
ரோம் கலங்கிப்போனது. தேசமெங்கும் ஜெர்மானிக்கசின் பேச்சாக இருந்தது. அவை எல்லாம் அடங்கிய பிறகு பொறுமையாக அவரது குடும்பத்தை சிறைபிடித்தார் டைபீரியஸ். குழந்தைகளை தாயிடமிருந்து பிரித்த அரசர், அக்ரோபீனாவை தனித்தீவு ஒன்றில் சிறை விதித்தார். வாழ்நாள் முழுவதும் தனிமையில் விடப்பட்ட அக்ரோபீனாவின் கல்லறையை மட்டுமே ரோமிற்கு கொண்டுவர முடிந்தது. கொண்டுவந்தவர் காலிகுலா.
ஜெர்மானிக்கஸ் – அக்ரோபீனாவிற்கு மூன்றாவதாக பிறந்தவன் காயஸ் ஜூலியஸ் சீசர் ஜெர்மானிக்கஸ். சிறுவயதிலேயே தந்தை மற்றும் தாயுடன் போர் பயிற்சி நடைபெறும் இடங்களுக்குச் செல்வது இவனது வழக்கம். தலைவரின் மகனுக்கு வீரர்களிடையே மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குட்டி வாள், போர் ஆடைகள் மற்றும் குட்டி காலணிகளை அணிந்து வலம் வந்த சிறுவனை அனைவருக்கும் பிடித்துப்போனது. அவனுடைய குட்டிக்காலணிகளை விரும்பாத ஆட்களே இல்லை. அதனாலேயே அவனை அனைவரும் காலிகோ என்றழைத்தனர். காலிகோ என்றால் லத்தீன் மொழியில் குட்டிச்செருப்புகள் என்று அர்த்தம். இதுவே பின்னாளில் காலிகுலா என்று மாறிப்போனது. பார்க்கப்போனால் தன்னை அப்படி விளிப்பது காலிகுலாவிற்கு எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். அவர் இருக்கும் வரை இப்பெயரை யாரும் உச்சரித்தது கூட இல்லை. அவருக்குப்பின்னால் வந்த ஆய்வாளர்கள் அவர்மீதுள்ள காண்டில் “காலிகுலா” வை நிலைபெறச் செய்துவிட்டார்கள்.
தன் சகோதரிகளிடம் மிகுந்த நெருக்கமாயிருந்த காலிகுலாவை சிறுவயதிலேயே பிரித்து “காப்ரி” என்ற தீவில் இருந்த அரண்மனைக்குச் சொந்தமான இடத்தில் அடைத்தார் டைபீரியஸ். சகோதரர்கள் இருவரால் சிக்கல் வரும் என நினைத்த மன்னர் அவர்களை பாதாள சிறையில் அடைத்தார். உணவும் நீரும் கிடைக்காத அந்த சிறையின் கதவுகள் அதன்பின்னர் திறக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் அனைவரையும் இழந்த சிறுவன் காலிகுலா காப்ரியைச் சுற்றி சுற்றி வந்தான். அங்கிருந்து சுமார் இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள தீவில் அவனுடைய அம்மா இருந்தாள். இத்தகைய கொடும் தனிமையில் தான் கழிந்தது காலிகுலாவின் குழந்தைப்பருவம்.
கைக்கு வந்த கிரீடம்
யார் பழிவாங்கப்படுகிரார்களோ? யார் சிறுவயதிலேயே சிலுவையைத் தாங்குகிறார்களோ? அவர்களது கைகளுக்கே அதிகாரம் திரும்புவது வரலாற்றில் பலமுறை நடைபெற்றிருக்கிறது. காலிகுலாவிற்கும் இந்தப்பட்டியலில் இடம் கிடைத்தது. டைபீரியஸ் கிபி 37 ல் மர்மமான முறையில் இறந்துபோகவே அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு செனட் சபையிடம் போனது. முடிக்குரிய வாரிசுகளாக டைபீரியசின் பேரன் கமேல்லஸ் இருந்த போதிலும் செனட்டர்கள் வாய்ப்பை காலிகுலாவிற்கு வழங்கினார்கள். காப்ரியில் இருந்து ராஜ மரியாதையுடன் வரவழைக்கப்பட்ட காலிகுலாவின் தலையில் கிரீடம் ஏறியது.
முதல் ஆறு மாதங்கள்
ஜெர்மானிக்கசின் வாரிசு என்பது காலிகுலாவிற்கு மிகப்பெரிய செல்வாக்கை மக்களிடத்தில் காலிகுலாவிற்கு பெற்றுத்தந்தது. முதல் நடவடிக்கையாக தனித்தீவில் அடக்கம் செய்யப்பட்ட தன் தாயார் அக்ரோபீனாவின் கல்லறையை தோண்டி எடுத்து கொண்டுவந்து நகரத்திற்குள் மிகப்பெரிய மண்டபம் ஒன்றைக்கட்டி அதை நிறுவினார். விவசாய வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. காவலாளிகளுக்கு வரித்தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. விவசாயத்திற்காக புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டன. மத்திய ரோமிலிருந்து நகரம் முழுவதும் குடிநீர் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. இன்று வாட்டிகனில் இருக்கும் வாடிகன் ஒபெலிஸ்க் எனப்படும் பிரம்மாண்ட தூண் இவரது காலத்தில் கட்டப்பட்டதாகும். மன்னரின் இந்த அதிரடித் திட்டங்களால் மக்கள் குளிர்ந்து போயினர். செனட் சபை உறுப்பினர்கள் அனைவரும் காலிகுலாவின் பேச்சைக்கேட்க ஆரம்பித்தார்கள்.
வேலைநிறுத்தம் செய்த உடல்
அடுத்தடுத்து பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கியவுடனே மன்னருக்கு உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டது. துவக்கத்தில் வெறும் ஜுரமாக இருந்தது சில நாட்களில் அரசரை படுக்க வைத்துவிட்டது. தீராத உடல்வலியும், தூக்கமின்மையும் அவரை வாட்டின. பொதுமக்கள் பிரார்த்திக்கும் அளவிற்கு காலிகுலாவிற்கு தங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்திருந்தனர். பொதுமக்கள் எதிர்பார்த்தபடியே சில தினங்களில் மன்னர் உடல்நிலை சீரானது. கையைப்பிடித்துப் பார்த்த தலைமை மருத்துவர் அரசர் முழுவதும் குணமடைந்துவிட்டதாக அறிவித்தார். ஆனால் அரசரின் மனதிற்குள் வெடித்துச்சிதறும் வன்மங்கள் பற்றி பாவம் அவர் அறிந்திருக்கவில்லை.
காலிகுலாவின் வரலாற்றைத் தொகுத்தவர்கள் அனைவரும் ஒத்திசையும் இடம் இதுதான். பதவியேற்ற முதல் ஆறுமாதத்தில் பொறுப்பான மன்னராக இருந்த காலிகுலா வெறிபிடித்த மிருகமாக மாறியது இந்த ஒரு வாரத்தில் தான். காலிகுலாவின் இந்த திடீர் மாற்றம் அவருடைய தனிமையின் கோர எதிர்வினை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அதற்குப்பிறகுதான் ரோம் மக்கள் காலிகுலாவை நினைத்து பயப்படத் தொடங்கினர்.
விபரீதங்கள்
காலிகுலா காய்ச்சலில் இருந்து எழுந்தவுடன் தன்னையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார். மிக அந்தரமான காரியதரிசிகளுக்கு மட்டுமே அரசரைப் பார்க்க அனுமதி கிடைத்தது. கிட்டத்தட்ட ஒருமாத காலம் இப்படி மர்மமாகவே அரசாங்கம் நடைபெற்றது. பிறகுதான் அந்த அறிவிப்பு வந்தது. நாடு முழுவதும் புதிய விபச்சார விடுதிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கணிசமான வரியும் இதற்கு விதிக்கப்பட்டதோடு, சுகாதாரமான முறையில் விடுதிகள் செயல்படுவதைக் கண்காணிக்க மாதம் ஒருமுறை மன்னர் வருகை தருவார் என்று அறிவிக்கப்பட்டது.
ரோமில் பெரிய பிரச்சனை என்னவெனில் கலாச்சாரமும், குடிமக்களும் தான். யூதர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். கிரேக்க நாகரீகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரோம் நகர சட்டங்கள் பலவற்றில் கசப்பு இருந்தது. காலிகுலாவின் துவக்கம் இந்த கசப்பை அகற்றும் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் கிழக்கில் இருந்து புதிய பிரச்சினை வந்தது. எகிப்தை ஆண்ட அலூஸ் அவிலியஸ் ஃபால்காஸ் என்னும் மன்னன் காலிகுலாவிற்கு எதிராக சதி செய்வதாக தகவல்கள் கிடைத்தன. ஃபால்காசிற்கு எதிராக தனது நண்பனான ஹெரோட் அக்ரிப்பாவை படையெடுக்க வைத்து வெற்றியும் பெற்றார். ஆனால் இது கிழக்கில் காலிகுலாவிற்கு எதிரான அதிருப்தியலையை உருவாக்கியது. அடுத்தடுத்து கிழக்கு நாடுகள் காலிகுலாவிற்கு எதிராக கோதாவில் இறங்கின.
நான் கடவுள்
யூதர்களின் மீதான அரசரின் வெறுப்பு எல்லை தாண்டியது. யூதர்களின் புனித பூமியான ஜெருசலேமில் தனக்கு கோவில் கட்டவேண்டும் என்று காலிகுலா அறிவித்தது யூதர்களை கொந்தளிக்கச் செய்தது. முதல் முறையாக செனட் சபை மன்னரின் திட்டத்திற்கு எதிராக நின்றது. அரசியல் ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்படும் எனத்தெரிந்த பின்னர் அத்திட்டத்தைக் கைவிட்டார் காலிகுலா. ஆனால் அதற்குப்பதிலாக ரோம் நகரத்திற்கு உள்ளே அரசருக்கு கோவில் கட்டப்பட்டது. கூடவே தாத்தா அகஸ்டசிற்கும் தனியாக ஒரு கோவில் கட்ட உத்தரவிட்டார். தன்னைக் கடவுளாக சித்தரிக்கும் ஆசை காலிகுலாவிற்கு நிறையவே இருந்தது. அதற்காகத்தான் இத்தனை திட்டமும்.
எல்லை மீறிய உல்லாசம்
அந்தப்புரத்தின் மீதான மன்னரின் ஆசை வெறியாகிவிட்டிருந்தது. நிர்வாண விருந்துகள் வாடிக்கையாகிவிட்டன. மன்னருக்காக புதிய பெண்களை பல்வேறு தேசங்களிலிருந்து கொண்டுவரும் நபர்களுக்கு தங்கம் தாராளமாக வழங்கப்பட்டது. இவையெல்லாம் வரலாற்றில் பல மன்னர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் மன்னர் இத்தோடு நிற்கவில்லை.
தனக்குப்பிடித்த பெண்களை எல்லாம் பலவந்தமாக அடையத் தொடங்கினான் காலிகுலா. இந்த வரிசையில் அதிகாரிகளின் மனைவிகளும் வரும்போதுதான் பிரச்சினையின் வீரியம் அனைவருக்கும் புரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தனது சகோதரிகளையும் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு பைத்தியம் பிடித்தது காலிகுலாவிற்கு.
எதிராகத் திரும்பிய செனட்
டைபீரியஸ் இறந்த பின்னர் காலிகுலாவை அரசராக்கிய அதே சபை தற்போது மன்னரின் கிறுக்குத்தனங்களைக் கண்டு வெலவேலத்துப்போனது. உடனடியாக மேல்மட்ட அதிகாரிகள் கூடி காலிகுலாவின் அதிகாரத்தைக் குறைக்க முடிவெடுத்தார்கள். இது எப்படியோ மன்னரின் காதுகளை எட்டியது. செனட் சபையைச் சேர்ந்த அனைவரையும் அவமானப்படுத்த எண்ணினான் காலிகுலா. குதிரை லாயத்திலிருந்த தனக்குப் பிடித்த குதிரையான இன்சிடேடசை தயார் செய்யும்படி உத்தரவிட்டான்.
அடுத்தநாள் காலை. செனட் சபைக்கு அனைவரும் வரும்படி மன்னரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அடித்துபிடித்துக்கொண்டு ஓடிவந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். “இன்று முதல் என் குதிரை இன்சிடேடஸ் தலைமை அமைச்சர் பொறுப்பை கவனித்துக்கொள்ளும்” என்று சொன்னால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது. அரண்மனைக்குள் மன்னருக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகமாகின.
இறுதி மரியாதை

காலிகுலாவின் அமைச்சரவையில் தலைமை படைத்தளபதியாக இருந்தவர் காசீசியஸ் கயீரியா. காலிகுலாவிற்கு இவரைக்கண்டாலே ஆகாது. பொது இடங்களில் அவரை அவமானப்படுத்துவதே காலிகுலாவிற்கு வேலை. தரம் தாழ்ந்த சொற்களும் சில நேரங்களில் மன்னரிடமிருந்து வெளிப்பட்டது. பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குமல்லவா? அந்த எல்லையை மீறிய போதுதான் கயீரியா காலிகுலாவின் வயிற்றில் வாளைச் சொருகினார். ரத்தத்தோடு வீழ்ந்த மன்னரை தாங்கிப்பிடிக்க யாரும் வரவில்லை. வந்த சிலரும் தங்களது பங்கிற்கு ஈட்டியால் மன்னரைக் குத்தினார்கள். மொத்தம் முப்பது இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. யாரும் துளி கண்ணீர் சிந்தவில்லை. நான்கு ஆண்டுகளில் தனக்கு எதிராக அனைவரையும் திருப்பியிருந்தான் காலிகுலா. காயிரியாவிற்கு அனைவரும் நன்றி சொன்னார்கள். ரோம் வெகுகாலம் கழித்து நிம்மதியாக உறங்கச் சென்றது.