ராணுவ டாங்கிகள் வரும் சப்தம் இரவெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தது. மீதமிருந்த ஆட்களை மாளிகை முழுவதும் காவலுக்கு நிற்கும்படி சொல்லியாயிற்று. இன்னும் சில மணி நேரங்கள். பரந்து விரிந்திருந்த மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதிகளை பார்வையிட்டு வந்த பின்னர் சோபாவில் உட்கார்ந்தார் இடி அமீன். கிழக்கு வெளுப்பதற்குள் லிபியாவிற்குள் இருக்க வேண்டும். ராணுவத்திடம் சிக்கினால் சின்னாபின்னம் தான். எட்டு வருடங்களாக என் கட்டுப்பாட்டில் இருந்த ராணுவம். நான் நேரடியாக தேர்ந்தெடுத்த வீரர்கள். என் தேசம். எல்லாம் இன்னும் ஒரு மணி நேரம் தான்.
பாதுகாப்பு அதிகாரிகள் கிளம்புவதற்கான சுப முகூர்த்தத்தை குறித்தார்கள். தன் கட்டுப்பாட்டில் இருந்த தேசத்தை விட்டு அகதியாக அடுத்த நாட்டிற்குள் ஓடிப் பதுங்க வேண்டிய கட்டாயத்தில் காலம் அவரை நிறுத்தியிருந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் தனது ராட்சத இறக்கைகளினால் சிறகடித்து மேலெழுந்தது விஞ்ஞானப் பறவை. தோள்பட்டை முதல் வயிறு வரை தொங்கும் மெடல்கள். ராணுவ உடையுடன் வலம் வரும் அமீன் எளிய உடையுடன் ஜன்னலுக்கு அப்பால் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். ஹெலிகாப்டர் முன்னேற அவருக்கு காலம் பின்னோக்கிச் சுழன்றது போலிருந்தது.
உலகத்தின் ஆதி நாகரீகத்தைப் பிரசவித்த நைல் நதிக்கரையோரம் தான் இடி அமீன் பிறந்த நகரமான கொபோகோ இருக்கிறது. ஏழைக்குடும்பம் என்ற ஒருகாரணமே அமீனை கல்லூரிப் பக்கம் ஒதுங்க விடாமல் செய்வதற்கு போதுமாக இருந்தது. சின்ன சின்ன வேலைகள் செய்து அலுத்த பின்னர் ஆங்கிலேய ராணுவத்தில் சேர்ந்தார். சமையல் உதவியாளராக வாழ்க்கையைத் துவங்கியவருக்கு காலம் அவருக்கு அளிக்க இருப்பதை பற்றியெல்லாம் அறிந்துகொள்ள அவருக்கு அப்போது அக்கறையில்லை.
ஆறடி நான்கு அங்குல உயரம். நீச்சல், குத்துச்சண்டை, தொடரோட்டம் என அனைத்திலும் சகலகலா வல்லவன் என தன்னை நிரூவித்துக்கொள்ள அவருக்கு வெகுகாலம் பிடிக்கவில்லை. உகாண்டாவின் வளம் அனைத்தும் தவணை முறையில் ஆங்கிலேயர்களால் கொள்ளயடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஆங்கிலேயே ராணுவத்தில் சிப்பாயாகும் வாய்ப்பு கிடைத்தது அமீனுக்கு. வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். ஆஜானுபாகுவான உடல்வாகும், அதிரடியான முடிவுகளை எடுக்ககூடியவருமான அமீன் சீரான இடைவெளியில் வளரத் தொடங்கினார்.
முதல் படி
உகாண்டாவின் அண்டை நாடான கென்யாவும் அப்போது ஆங்கிலேய ஆட்சிக்கு கீழ்தான் இருந்தது. மௌ மௌ (Mau Mau) என்னும் புரட்சிப்படை ஆங்கிலேயருக்கு எதிராக 1953 – 55 காலகட்டத்தில் தீவிரமாக போராடிக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் பிரிட்டிஷ் அரசு கலவரக்காரர்களை ஒடுக்கும் பணியில் இறங்கியது. அந்த வேலைக்கு உகாண்டாவில் இருந்த ராணுவ படையினரை அனுப்பும்படி இங்கிலாந்தில் இருந்து உத்தரவு வரவே ஏராளமான போர்வீரர்களுடன் கென்யாவிற்குள் நுழைந்தது உகாண்டா படை. அதில் அமீனும் இருந்தார். சண்டை கடுமையாக இருந்தது. பரமன் படைத்தது பாவிகளைக் கொல்வதற்கே எனும்படி அசுரவேகத்தில் முன்னேறினர் அமீன். அவருடைய வேகத்தைப் பார்த்த சக வீரர்கள் மிரண்டு போயினர். யுத்தத்தின் வெற்றிமுள் இறுதியாக ஆங்கிலேயர் நோக்கி நின்றது. நாடு திரும்பியவுடன் சார்ஜென்ட்டாக பதவி உயர்வு பெற்றார் அமீன். செய்த கொலைகளுக்கு கிடைத்த பரிசு!!

கென்யா புரட்சியாளர்களை சமாளிக்கும் போதே உகாண்டாவை வெகுகாலம் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை இங்கிலாந்து உணர்ந்திருந்தது. அதன்படி 1962 ஆம் ஆண்டு உகாண்டா சுதந்திரம் பெற்றது. முதல் அதிபராக மில்டன் ஒடோபே பதவியேற்றார். இடி அமீன் சுதந்திர உகாண்டாவின் ராணுவ துணை கமேண்டராக நியமிக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே முப்படைகளுக்கும் தலைவரானார் அமீன்.
ஒபோடே உகாண்டாவை துரிதகதியில் வளர்ச்சிப்பாதையில் செலுத்த விரும்பினார். அதற்கு சோஷலிச கட்டமைப்பு அவசியம் என்ற முடிவில் தீர்க்கமாக இருந்தார். கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் வெளிநாட்டு நிறுவனங்கள் அறுபது சதவிகிதம் வரியாக கட்டவேண்டும் என புதிய உத்தரவை வெளியிட்டார். உள்நாட்டு கட்டமைப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதேகாலகட்டத்தில் அமீனும் ஒபெடோவும் நண்பர்களாயிருந்தனர். அரசியல் என்னும் புயல் பூமியில் நட்புகள் நிலைத்திருப்பது அதிசயம் தான்.
தான்சானியா எல்லைப் பகுதியில் இருக்கும் கிராமவாசிகள் உகாண்டா ராணுவத்தால் துன்புறுத்தப்படுவது குறித்த தகவல்கள் ஒபெடோவின் காதுகளை எட்டியது. ஆரம்பத்தில் எளிதாக முடிந்துவிடக்கூடிய பிரச்சினையாக இருந்தாலும் போகப்போக அதிகார பலத்திற்கான சண்டையாக மாறியது. தக்க சமயத்தில் இடி அமீனை கைது செய்ய வேண்டும் என ஒபெடோ முடிவெடுக்கும் அளவிற்கு விஷயம் பெரிதானது. அசாதாரண அரசியல் சூழ்நிலையில் பதவியை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஒபெடோ. எந்நேரமும் பழிவாங்கப்படலாம் என நினைத்த அமீன் சுதாரிப்பதற்குள் அடுத்த காயை நகர்த்தினார் ஒபெடோ. அமீனின் பதவி பறிக்கப்பட்டது.
ராணுவத்தில் ஆதிக்கம்
உகாண்டா ராணுவத்தின் தலைமைப்பொறுப்பை அடைந்ததும் அமீனின் இனவெறி விழித்துக்கொண்டது. உள்ளூர் இனக்குழுக்களான அச்சொலி மற்றும் லான்கோவைச் சேர்ந்தவர்களை ராணுவத்தில் சேர மறைமுக தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே பதவியில் இருந்தவர்களும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அதற்குப்பதிலாக கக்வா இன மக்களை நேரடியாக ராணுவ உயர் பதவிகளில் அமர்த்தினார் அமீன். இப்படியாக ராணுவத்தை இனக்குழுவின் ஒரு அங்கமாக மாற்றியமைத்தார். தெற்கு சூடானில் இருந்த கக்வா மக்கள் தன்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சட்டத்திற்கு புறம்பாக அமீன் அவர்களுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒபெடோ – அமீன் இடையேயான பனிப்போர் உச்சத்தைத் தொட காரணமாக இருந்தது இந்தப் பிரச்சினை தான்.
1971 ஆம் ஆண்டிற்கான காமென்வெல்த் மாநாடு சிங்கப்பூரில் கூடியது. அதில் கலந்துகொள்வதற்காக ஜனவரி மாதம் 25 ஆம் நாள் சிங்கப்பூருக்கு கிளம்பினார் ஒபெடோ. இதுதான் சமயம். ஒரு புரட்சி. மொத்த ராணுவமும் கைகளுக்குள். தன்னால் பதவியேற்றவர்கள் தனக்கு உதவமாட்டார்களா? உதவினார்கள். அன்றைய இரவே உகாண்டாவின் தலைநகர் கம்பாலா விமான நிலையத்தில் முதல் குண்டு வெடித்தது. ராணுவம் அணிவகுக்க நேராக சென்று அதிபர் சேரில் உட்கார்ந்துகொண்டார் அமீன். கிழக்கு சிவப்பாய் வெளுத்தது.
அமெரிக்கப் பாசம்
உகாண்டாவின் அதிபராக தன்னை அமீன் அறிவித்துக்கொண்டதற்கு முதல் ஆளாய் வாழ்த்து தெரிவித்தது அமெரிக்கா. இங்கிலாந்து இரண்டாவது. அதற்குக்காரணம் இருந்தது. முன்னாள் அதிபர் ஒபோடே ரஷியாவின் தோஸ்த். இதனால் உகாண்டாவினுள் பொருளாதார ரீதியாக மேற்குலக ஜாம்பவான்களால் காலெடுத்து வைக்க முடியவில்லை. உகாண்டாவில் ஆட்சிமாற்றம் நடைபெற்ற பின்னரே அமெரிக்காவும், இங்கிலாந்தும் விழித்துக்கொண்டது. புதிய அதிபராக பதவியேற்ற அமீனை கைகளுக்குள் போட்டுக்கொள்ள இரு நாடுகளும் திட்டமிட்டன.
இன மத வேறுபாடுகளைக் கடந்து மக்களின் நலன்மீது அக்கறைகொண்ட ஒரு தலைவனால் மட்டுமே வரலாற்றைக் கடந்தும் தன் புகழை பேச வைக்கமுடியும். உகாண்டாவை சக்தியுள்ள, வளமான நாடாக்க வேண்டும் என்ற ஆசை அமீனுக்குள்ளும் இருந்தது. அதற்காக அவர் எடுத்த முடிவுகள்தான் தவறானவை.
முதல் கோணல்
அமீன் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் தேர்தலை நடத்தவிருப்பதாக அறிவித்தார். ஆனால் அப்படியொன்று நடக்கவே இல்லை. ராணுவ தலைமைப்பொறுப்பையும் தானே கவனிக்கத் தொடங்கினார். அரசாங்க மேல்மட்ட தலைவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அந்த பதவிகளுக்கு ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. ஒட்டுமொத்த அரசாங்கமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதிபர் எடுக்கும் முடிவே இறுதியானது. அதுவே சட்டம்.
பிற இனக்குழுக்கள் புரட்சியில் ஈடுபடாமல் இருக்க அதன் தலைவர்களை கொல்லும்படி உத்தரவிட்டார் அதிபர். ஆட்சியின் கொலையுதிர்காலம் அப்படித்தான் துவங்கியது. தனக்கு எதிராக கேள்வி எழுப்பும் எவரையும் விட்டுவைக்கக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார் அமீன். வியாபாரிகள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், முன்னாள் அரசியல்வாதிகள் என அமீனுக்கு எதிரானவர்கள் வேட்டையாடப்பட்டனர்.
கடாஃபி சொன்ன யோசனை
லிபியாவின் அதிபரான கடாபி தான் இடி அமீனுக்கு அந்த யோசனையை வழங்கியிருக்கிறார். உகாண்டா முன்னேற வேண்டுமா? ஒரே வழிதான் இருக்கிறது. உகாண்டாவிலிருந்து ஆசியர்களை வெளியேற்று என கடாபி சொன்னதை அமீன் வேதவாக்காக எடுத்துக்கொண்டார். இன்றிலிருந்து 90 நாட்களுக்குள் ஆசியர்கள் வெளியற வேண்டும் என உத்தரவிட்டார் அமீன். ஆரம்பத்தில் இதனை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அதற்கான நடவடிக்கைகளில் ராணுவம் இறங்கியபோது பயத்தில் உறைந்துபோனார்கள் மக்கள்.
உகாண்டாவில் பெரும்பான்மையான தொழில்கூடங்களை நடத்திவந்தவர்கள் ஆசியர்கள். இதனால் உகாண்டா மக்களை விட கணிசமான பொருளாதார உயர்வு பெற்றவர்களாக ஆசியர்கள் இருந்தார்கள். இதனைத்தான் அமீனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. ஆசியர்களின் கடைகள், வீடுகள் அனைத்தும் ராணுவ வீரர்களுக்கும், அதிபருக்கு வேண்டியவர்களுக்கும் தரப்பட்டன.
அதிகபட்சமாக 55 பவுண்ட் தங்கம் மட்டுமே ஆசியர்கள் எடுத்துச்செல்லலாம். 250 கிலோ வரை பொருட்களை எடுத்துக்கொண்டு நாடு திரும்பலாம். இதனால் செல்வந்தர்கள் அனைவரும் பாதிப்பிற்கு உள்ளாகினர். பலர் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தங்களுடைய நகைகளை புதைத்தனர். இன்னும் சிலர் வங்கி லாக்கர்களில் ஆபரணங்களை பத்திரப்படுத்தினர். தான்சானியா வழியாக நகையுடன் தப்பிச்சென்ற குடும்பங்களும் இருக்கத்தான் செய்தன. ஆனால் பெரும்பான்மையான ஆசியர்களின் உடைமைகள் பறிக்கப்பட்டன. இடி அமீன் உகாண்டாவின் இனக்குழுக்கள் மீது நடத்திய தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கும் போதெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்த அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஆசியர்களை வெளியேற்றும் அமீனின் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அமீன் தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்தார்.
பாதாளத்திற்குச் சென்ற பொருளாதாரம்
பொருட்களை தயாரிப்பதற்கும், வணிகம் செய்வதற்குமான போதிய அறிவு உகாண்டா மக்களுக்கு இருந்திருக்கவில்லை. ஆசியர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட கடைகள் அனைத்தும் கூடிய விரைவில் மூடப்பட்டன. கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கொடுத்து மகிழ மட்டுமே அம்மக்களுக்கு தெரிந்திருந்தது. தீர்ந்துபோன பொருட்களை வாங்க மீண்டும் அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டியிருந்தது. உகாண்டாவில் இருந்த அத்தனை தொழில்களுக்கும் இதே நிலைமை தான். ஆசியர்கள் அகன்ற சில மாதங்களிலேயே உகாண்டா பொருளாதாராம் பூமிக்குள் புதைந்து போனது.
ஒருபக்கம் பொருளாதார வீழ்ச்சி அடுத்தபக்கம் நேற்றுவரை நண்பனாக இருந்த அமெரிக்காவும், இங்கிலாந்தும் தனக்கு எதிராக திரும்பியிருந்தனர். அமீன் ரஷியாவுடன் நட்பு வைத்துக்கொண்டால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற முடிவிற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு வேறு வழியும் இருந்திருக்கவில்லை. இஸ்ரேலுடன் செய்துவந்த ஆயுத கொள்முதலை நிறுத்தினார். ரஷியாவுடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. சிக்கல் தீர்க்கமுடியாத எல்லைக்கு சென்றுகொண்டிருந்தது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் அமீன் கைகோர்த்துக்கொண்டதாக தகவல் கசிந்தது. ஆரம்பத்தில் இது மறுக்கப்பட்டாலும் இஸ்ரேலிய விமானம் கடத்தப்பட்ட விவகாரத்தில் அமீன் எடுத்த முடிவு இஸ்ரேலை இன்னும் உசுப்பேற்றியது. 1976 ஆம் ஆண்டு ஜூன் மாத துவக்கம். இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவில் இருந்து கிளம்பிய விமானத்தை ஹைஜாக் செய்தது பாலஸ்தீன விடுதலை இயக்கம். அவ்விமானத்தை உகாண்டாவில் தரையிறக்க அமீன் அனுமதியளித்தது பெரும் கலவரத்திற்கு காரணமானது. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தார் அமீன். இஸ்ரேல் அதிரடியாக விமானத்தையும், பணய கைதிகளையும் மீட்டது. அப்போதே அமீனின் தலைக்கு மேலே கத்தி தொங்கவிடப்பட்டுவிட்டது.
ஆறாம் கல்யாணம்
அமீனுக்கு மொத்தம் ஆறு மனைவிகள். 43 குழந்தைகள்(இந்த எண்ணிக்கையும் துல்லியமானதல்ல). எக்கச்சக்க காதலிகளும் அமீனுக்கு இருந்திருக்கிறார்கள். இதிலும் தன்னுடைய மூர்க்க முகத்தையே காட்டியிருக்கிறார். அதிபர் குறிவைக்கும் பெண்களின் காதலர்கள் மர்மமான முறையில் காணாமல்போனார்கள். சடலங்கள் கூட யாருக்கும் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் 30 மாளிகைகளை தனது அந்தப்புர சேவைக்காக ஒதுக்கிய தியாகி அமீன்.

தான் விரும்பும் பெண்களின் முன்னாள், இந்நாள் காதலர்களை கடத்தும் அமீனின் ஆட்கள் உடனடியாக அவர்களைக் கொன்றுவிடுவதில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை குரூரம். ஆனால் எல்லா கொலைகளிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அத்தனை உடம்பிலிருந்தும் தலை தனியாக வெட்டப்பட்டு அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். அமீன் வசித்த மாளிகையில் இந்த தலைகளை பதப்படுத்துவதற்கென தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது பின்னாளில் தெரியவந்தது. கூடவே அமீன் பற்றிய இன்னொரு அதிர்ச்சியூட்டும் தகவலும். சடலங்களுடன் தனியறையில் ஓய்வெடுக்கும் வழக்கம் அமீனுக்கு இருந்திருக்கிறது. அவருடைய இனமான கக்வாவின் முன்னோர்கள் மனித ரத்தத்தை குடிப்பவர்கள். இடி அமீனுக்கும் அப்பழக்கம் இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். போலவே மனித மாமிசத்தை உண்டதாக அமீனே பல இடங்களில் சொல்லியும் இருக்கிறார். மனித மாமிசம் அதிக உப்புத்தன்மை கொண்டதாகவும், சிறுத்தை கறியை விட மோசமானது என்றும் தனது நண்பர்களிடம் அமீன் சொல்லியிருக்கிறார். இன்னும் எதையெல்லாம் தின்று பார்த்தாரோ தெரியவில்லை!!
இறுதி யுத்தம்
1978 ஆம் ஆண்டு உகாண்டாவின் பக்கத்து நாடான தான்சானியா மீது தாக்குதலைத் துவங்கினார் அமீன். வீரர்கள் ஏற்கனவே அமீனின் மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள். போதாத குறைக்கு பாதுகாப்பு அமைச்சர் அடிரிசியை கொல்ல அமீன் திட்டமிட்டதாக கிளம்பிய செய்தியால் நாடு கலவர பூமியாக இருந்தது. பயங்கர கார் விபத்தில் சிக்கிய அடிரிசி துருக்கியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குணமடைந்து நாடு திரும்பியவுடன் தான் தனது பதவி பறிக்கப்பட்டது அவருக்கு தெரிவிக்கப்பட்டது. எல்லாம் அமீனின் ஆணை. அடிரிசிக்கு ஆதரவாளர்கள் ராணுவத்தில் கணிசமான அளவில் இருந்தார்கள். அமீனின் தவறான பொருளாதார கொள்கைகள், சிறுபான்மையினர் வெறுப்பு ஆகியவற்றால் மீதமிருந்த வீரர்கள் எரிச்சலடைந்திருந்தனர்.
ராணுவத்தில் தனக்கெதிரான சூழல் இருப்பதை அறியாமலே தான்சானியா போரை துவக்கி வைத்தார் அமீன். ராணுவம் இரண்டாக உடைந்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார் தான்சானியா அதிபர் ஜூலியஸ் நைரேரே (Julius Nyerere) அடிரிசிக்கு ஆதரவளித்த வீரர்களும், தான்சானிய ராணுவமும் அமீனுக்கு எதிராகத் திரும்பியது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் அவர் ஆட்சி செலுத்திய ராணுவம் அவருக்கு எதிராகவே கிளர்ந்து எழுந்ததை சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே அமீன் கண்டுபிடித்துவிட்டார். இனி செய்வதற்கு ஏதுமில்லை எனத் தெளிவாக தெரிந்த பின்னர் தான் ஹெலிகாப்டரில் தப்பிச்செல்ல முடிவெடுத்தார். ஒருவருடம் லிபியாவில் வசித்தார். ஆனால் அதுவும் தனக்கு பாதுகாப்பில்லை என்பதால் சவூதிக்கு பறந்துவிட்டார். 2003 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் அவர் சவூதியின் ஜெட்டா நகரத்தில் வசித்தார். சிறுநீரக செயலிழப்பு காரணமாக அமீன் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இடி அமீனின் ஆட்சிக்காலத்தில் சுமார் 3 – 5 லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமை மீறல்கள், தீவிரவாத ஊக்குவிப்பு என அவர்மீது செலுத்தப்பட்ட எந்தக் குற்றத்திற்கும் தண்டனை அனுபவிக்காமலேயே இறந்துபோனார் அமீன்.