வடக்கு தைவான் நாட்டின் இருக்கிறது ஹூடாங்” (Houtong) என்னும் மலைக்கிராமம். சொக்க வைக்கும் பேரழகு கொண்ட இயற்கை அங்கே குடியிருக்கிறது. தைவான் நாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இந்த கிராமம் பலரின் தேர்வாக இருக்கிறது. இந்த கிராமத்திற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. இங்கு வசிக்கும் மனிதர்களை விட இங்குள்ள பூனைகளின் எண்ணிக்கை அதிகம். ஆமாம். இந்த கிராமத்தில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் நீங்கள் பூனைகளைப் பார்க்கலாம்.

மூக்கு வேர்த்த ஜப்பான்
தைவானில் நிலக்கரி இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது ஜப்பான் தான். அதுவும் ஹூடாங் பகுதியில் அதிகளவு நிலக்கரி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சத்தியம் செய்ய ஜப்பானியர்களின் குட்டி மூக்கு மூர்க்கத்தனமாக வியர்த்தது. வருடம் 1920. அனைவருக்கும் வேலை தருகிறோம் என குழாய் ஸ்பீக்கரில் கூவிவிட்டு ஜப்பானியர்கள் ஹூடாங்கில் டேரா போட்டார்கள்.

இதனால் அந்த கிராம மக்களும் பொருளாத ரீதியில் பயனடைந்தனர் என்பது உண்மைதான். ஏனெனில் ஒரு இடத்திற்கு தொழில்துறை கால்வைக்கும்போதே நேரடி மறைமுக வேலைவாய்ப்புகள் பெருக ஆரம்பிக்கும். உதாரணமாக ஹீடாங்கில் நிலக்கரி எடுக்கத் தொடங்கியதும், ரயில் பாதைகள் போடப்பட்டன. போக்குவரத்திற்காக புது சாலைகள் வந்தன. அத்தியாவசியப்பொருட்களின் தேவை அதிகமானது. இதனால் பல்வேறு வணிகர்களின் சொர்க்கபுரியாக அந்த கிராமப் பகுதி மாறிவந்தது.
அதிசயம்
இப்படி வளர்ச்சிப்பாதையில் வெறிகொண்டு பயணித்துக்கொண்டிருந்த ஹீடாங் மக்களின் முன்னால் வேகத்தடை ஒன்று வந்தது. ஆம். 1990 ஆம் ஆண்டு நிலக்கரி உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக ஜப்பான் அறிவித்ததும் மறுபடியும் வேலைவாய்ப்பின்மை தனது கோர பற்களால் கிராமத்தை தின்னத் தொடங்கியது.
வறுமை காரணமாக இங்கிருந்த மக்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். நிலக்கரி உற்பத்தி ஜோராக இருந்த காலத்தில் அங்கு சுமார் 6000 பேர் இருந்தனர். ஆனால் கடைசியில் மிஞ்சியது 100 பேர் மட்டுமே. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்திருக்கிறது. எங்கிருந்தோ பூனைகள் இந்த கிராமத்திற்கு சாரைசாரையாக வந்துசேர்ந்தன. எண்ணிப்பார்த்ததில் வந்தது மொத்தம் 200 பூனைகள். அதாவது மனிதர்களை விட பூனைகள் இரண்டு மடங்கு அதிகம்.
மறுவாழ்வு
இப்படி பூனை உண்டு வாழ்வு உண்டு என இருந்த ஹீடாங் மக்களின் வாழ்க்கையில் வறுமை ஓரங்கமாகிப்போனது. கடைசியில் 2008 ஆம் ஆண்டு பெக்கி செயின் (Peggy Chein) என்னும் பெண் அந்த கிராமத்தை சுற்றிப்பார்க்க போயிருக்கிறார். பெக்கி அந்த கிராமம் முழுவதையும் போட்டோ எடுத்து உலகம் முழுவதும் பரப்ப ஹீடாங் மீது காலம் கண்ணடித்துச் சிரித்தது.
இன்றைய நிலவரப்படி ஹூடாங் கிராமத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் பயணிக்கிறார்கள். இதனால் இழந்துபோன வாழ்க்கையை அந்த மக்கள் மறுபடி பெற்றிருக்கிறார்கள். இதுபற்றி ஹூடாங் மக்களிடம் பேசினால் எல்லாப்புகழும் பூனைகளுக்கே என்கிறார்கள்.