சாக்லேட், மனித குலத்தின் மிகச்சிறந்த படைப்பு. சாக்லேட்டுகளை பார்த்தாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சாக்லேட்கள் சில ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. சாக்லெட் உடலில் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய செரோடோனின் (Serotonin) என்ற வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. இதே வேதிப்பொருள் பிறரை கட்டிப்பிடித்தால் சுரக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்லெட் வட அமெரிக்காவில் உள்ள மெசோஅமெரிக்காவில் தோன்றியது. முதல் புளித்த சாக்லேட் பானம் கிமு பொ.மு 450 க்கு முந்தையது. மெக்ஸிகோவில் பேசப்படும் Nahuatl என்ற மொழியில் உள்ள Xocolātl என்ற சொல்லில் இருந்து உருவானது. சாக்லெட் செய்ய பயன்படுத்தும் கோகோ விதைகள் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு என்று அந்த காலத்து மெக்ஸிகோவினர் நம்பினர். அது மிகவும் விரைவாக பிரபலமடைந்தது. மெக்ஸிகோவில் வசித்த மாயன்களின் காலத்தில் சாக்லேட் நாணயமாக பயன்பட்டது.
சாக்லேட் உருவான வரலாறு
கொக்கோ பீன்ஸ் அல்லது தியோப்ரோமா கொக்கோ மரத்திலிருந்து விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கொக்கோ பழத்தில் 20-60 விதைகள் வரை இருக்கும். இந்த விதைகள் இறுதி தயாரிப்பாக மாற நொதித்தல், உலர்த்துதல், வறுத்தல் மற்றும் அரைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சாக்லேட் ஆரம்பத்தில் பான வடிவில் மட்டுமே உட்கொள்ளப்பட்டது மற்றும் சுவைக்கு மிகவும் கசப்பாக இருந்தது. ஒரு முறை மசாலா மற்றும் சோளம் கூழ் கலந்த ‘சிலேட்’ (Chilate) என்ற பானம் அதில் இருந்து தயாரிக்கப்பட்டது. இது குடிப்பவருக்கு வலிமை அளிக்கும் என்றும் நம்பப்பட்டது.

பொ.பி 1519 ஆம் ஆண்டில், ஆஸ்டெக் பேரரசர் மான்டெசுமா, ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளரான ஹெர்னான் கோர்டெஸுக்கு Xocolātl என்ற பானத்தை வழங்கினார் . கோர்டெஸ் அவருடன் ஸ்பெயினுக்கு மீண்டும் பானத்தை எடுத்துச் சென்று சர்க்கரை, வெண்ணிலா மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு கூடுதல் சுவையைத் தந்தார். இதற்கு பிறகு சாக்லேட் இன்றுவரை உலகை ஆண்டுகொண்டு இருக்கிறது.
கி.மு , கி.பி. எதற்கு ? பொ.மு , பொ.பி இருக்கு!!!
ஸ்பானிஷ் அத்தியாயத்தைத் தொடர்ந்து பொ.பி 1600 களில் இந்த பானம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமானது. பொ.பி 1800 களில் தான் மக்கள் சமையல் சாக்லேட்டுகளை தயாரிக்க கற்றுக்கொண்டனர். இப்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தமான சுவைகளில், நிறங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பிறந்த நாட்கள், காதலர் தினங்கள் சாக்லெட் இல்லாமல் கொண்டாடப்படுவதே இல்லை. காதலிக்கு கொடுக்கவில்லை என்றால் காதலே முறிந்துவிடும் அளவுக்கு சாக்லேட் புகழ் பெற்றிருக்கிறது.