சென்னையிலிருக்கும் ஊர்களின் பெயர் காரணங்களை விளக்கும் இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கவும். சென்ற கட்டுரையில் விட்டுப் போன ஊர்களின் பெயர்காரணங்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.
பாரி முனை
தாமஸ் பாரி என்ற வணிகர், வணிகம் செய்த ஊர் பாரிமுனை.
மாம்பலம்
மா அம்பலம் (பெரிய அம்பலம்) இருந்த ஊர், மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் வசித்த ஊர், எனும் பொருளில், மாம்பலம் என்ற பெயர் உருவானது.
கிண்டி
விகடக் கூத்து ஆடும் தேவதாசி இனப் பெண்களான, கோட்டாளக் கொண்டி பெண்கள் வாழ்ந்த பகுதி கொண்டி. அது தற்போது கிண்டி என மாறி விட்டது.
சேத்துபட்டு
குயவர்கள் மண்ணைக் குழைத்து சேறாக்கி, மாட்டு வண்டியில் ஏற்றும் இடம் சேற்றுப்பட்டு. தற்போது சேத்துப்பட்டு.
எழும்பூர்
முதலில் சூரியோதயம் எழும் மேட்டுப் பகுதி, எழுமீஸ்வரர் கோவில் உள்ள பகுதி என்பதால் எழும் ஊர் என்றாகி, தற்போது எழும்பூர் என அழைக்கப்படுகிறது.
ராயபுரம்
பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பகுதி தான் அன்று ராயர்புரம் இன்று ராயபுரம்.
சிந்தாதிரிப்பேட்டை
பிரிட்டிஷ் ஆட்சியில், நெசவாளர்கள் குடியேறிய பகுதி. சின்னத் தறிகளை வைத்துத் தொழில் செய்ததால், சின்னத் தறிப் பேட்டை என அழைக்கப்பட்டது. தற்போது சிந்தாதிரிப்பேட்டை என வழக்கத்தில் உள்ளது.
அமைந்தகரை
ராமபிரான் அமர்ந்த கூவக்கரை என்பதால் தான் அமைந்தகரையாம். அதுவும் மருவி இன்று அமிஞ்சிக்கரை ஆகி விட்டது.
பெருங்குளத்தூர்
பெரிய குளங்கள் நிறைந்த ஊர் பெருங்குளத்துார்.
நந்தனம்
மா அம்பலத்திலிருந்த சிவன் கோவிலுக்கான நந்தவனம் இருந்த இடம் நந்தவனம். இது தான் தற்போது நந்தனம் என்று அழைக்கப்படுகிறது.
வளசரவாக்கம்
கடவுள் முருகன் வள்ளியுடன் சேர்ந்த இடம் தான் வள்ளி சேர் பாக்கம். இது மருவி தற்போது வளசரவாக்கம் என்றுள்ளது.
ஈக்காட்டுத்தாங்கல்
தண்ணீரில் மிதக்கும் காட்டுக்கு நடுவில் உள்ள சோலை. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை திருவல்லிக்கேணி பெருமாள் இரவில் வந்து தங்குவார் என்பது நம்பிக்கை. ஈர காடு தங்கல், தற்போது ஈக்காட்டு தாங்கல் என்று மருவியுள்ளது.
முகலிவாக்கம்
கோவூர் ஈசனின் மவுளி எனும் கிரீடம் இருந்த இடம் மவுளிவாக்கம். தற்போது முகலிவாக்கம் என்றழைக்கப் படுகிறது.
மின்ட்
ஆங்கிலேயர் காலத்தில் தங்கம், வெள்ளி காசுகள் அச்சடித்த இடம் தங்கசாலை. தற்போது மின்ட்.
பிராட்வே
சென்னையில் வசிக்க வரிகட்ட வேண்டும் எனும் திட்டத்தை முன்மொழிந்த, ஆங்கிலேயர் போபம்ஸ் பிராட்வேயின் பெயரில் அமைந்தது தான் தற்போதைய பிராட்வே.
குரோம்பேட்டை
தோல் தொழிற்சாலைகளான, ‘குரோம் பேக்டரிகள்’ இருந்த இடம், குரோம்பேட்டை.
தேனாம்பேட்டை
தெய்வநாயக முதலியார் வசித்த ஊர், தெய்வநாயகம் பேட்டை எனவும், தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தென்னம்பேட்டை எனவும் இருந்து, தற்போது தேனாம்பேட்டை ஆனதாக கருதப்படுகிறது.
ஆவடி
ஆவடி எனும் ஊர், – Armoured Vehicles And Depot of India எனும் ஆங்கில வார்த்தையின் சுருக்கம்.
மண்ணடி
நரி மேட்டில் இருந்து பள்ளத்தில் மண்ணடித்து சமமாக்கிய இடம் என்பதால் மண்ணடி எனப்பட்டது.
உங்கள் ஊரின் பெயருக்கும் காரணம் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ஊரின் பின்னூட்டம் இடுங்கள். நாங்கள் அதன் வரலாற்றைச் சொல்ல முயற்சிக்கிறோம்.