பிரெஞ்சு நாடக உலகின் முன்னோடியாகத் திகழ்ந்த மோலியர் (Moliere) அவர்களின் படைப்புகளை கவுரவப்படுத்தும் விதமாக கூகுள் டூடுல் ஒன்றினை இன்று வெளியிட்டிருக்கிறது. மோலியரின் இறுதிப் படைப்பான லே மெலடி இமேஜினரி இதே தேதியில் தான் அரங்கேற்றம் கண்டிருக்கிறது. நகைச்சுவை ததும்பும் அவரது நாடகத்தில், சமுதாய ஒற்றுமை, மூட பழக்க வழக்கங்கள் குறித்த கருத்துகளும் இடம்பெற்றிருக்கும். இதனால் வெகுஜன மக்களின் கலைஞனாக மோலியர் கொண்டாடப்பட்டார்.
ஆரம்ப கட்டம்
அப்போதைய பிரஞ்சு நாட்டில் மிகப்பெரிய செல்வந்தவராக இருந்தவர் மோலியரின் தந்தை. வீட்டுவசதிப் பொருட்களைத் தயாரித்த தனது குடும்பத் தொழிலை விட்டு நாடகத்துறையில் சேர்ந்தார் மோலியர். எல்லோருக்கும் போலவே ஆரம்ப காலம் அவ்வளவு வசந்தமாக அவருக்கும் இருக்கவில்லை. ஆனாலும் விடாமல் போராடினார் மோலியர். 1660 ஆம் ஆண்டு தனது முதல் நாடகத்தை பாரிசில் நடத்தினார். நாடகத்தின் பெயர் Les Precieuses ridicule. படைப்புலகம் மோலியரின் வருகையால் அதகளம் கண்டது.
அர்கான் என்னும் புகழ்பெற்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்த மோலியருக்கு பாராட்டுகள் குவிந்தன. கடும் நோயால் அவதிப்பட்டுவரும் ஏழை ஒருவனின் கதை அது. தன்னுடைய ஒரே மகளை மருத்துவரின் மகனை மணந்துகொள்ளும்படி வற்புறுத்துவான் அர்கான். ஏனெனில் அதன்மூலமாவது மருத்துவ செலவினைக் குறைக்கலாம் என்றுதான். இப்படி மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்வதில் மொலியருக்கு இணை அவர்மட்டுமே.

மத அடிப்படையில் மனிதம் எப்படி சிதைக்கப்படுகிறது என்ற கருப்பொருளைக்கொண்டு இவர் இயற்றிய satire Tartuffe என்னும் நாடகம் (1664 ஆ ஆண்டு) பிரெஞ்சு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. பின்னாளில் மோலியரின் சிறந்த படைப்புகளுள் ஒன்றாக கருதப்படதும் இதே நாடகம் தான். வாழ்நாள் முழுவதும் பல சிக்கல்களை எதிர்கொண்ட மோலியர் எதற்காவும் நாடகத்தை மட்டும் விட்டுக்கொடுக்கவில்லை. அதனாலேயே வரலாறு அவரது பெயரை இன்னும் உச்சரிக்கிறது.