புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் 971 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறது. ஈரான் நாட்டில் செல்யூக் பேரரசு கோலோச்சிய காலத்தில் நிஷாபூர் என்னும் இடத்தில் பிறந்தார் உமர்கய்யாம். தங்கும் கூடாரங்கள் செய்யும் நடுத்தர குடும்பமொன்றில் பிறந்த உமர், தனது குழந்தைப் பருவத்தை ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் என்னும் நகரில் கழித்தார். அதே நகரில் தொடக்கக் கல்வியையும், பின்னர் ஈரானில் மேற்படிப்பையும் முடித்தார்.

இயற்கணித புதிர்கள் தொடர்பான செயல் விளக்க ஆய்வுக் கட்டுரை கணிதவியலில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகும். இந்த கட்டுரையில் முப்படி சமன்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான வழியை விவரித்திருந்தார். மேலும் இருபடிச் சமன்பாடுகளைத் தீர்க்கும் விதியை தந்தவரும் இவரே. இவருடைய இயற்கணிதம் தொடர்பான கருத்துக்கள் அனைத்தும் பெர்ஷியாவில் பாடநூலாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. ஆண்டிற்கு 365 நாட்களைக் கொண்ட காலக் கணிப்பு முறை ஈரானில் அறிமுகப்படுத்தியதோடு காலநிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் மாதங்கள் ஆகியவற்றின் துல்லியமாக கணக்கிட்டார் உமர்.

கடந்த 2012ஆம் ஆண்டு உமரின் 964 ஆம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டபோது கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றினை வெளியிட்டது. இது பயனாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா தவிர கூகுளின் இந்த சிறப்பு டூடுலை ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்க தேசங்கள், அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய நாடுகளில் உள்ள பயனர்கள் இதனை காண முடியும் என கூகுள் தெரிவித்திருக்கிறது. ஆனால் 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட டூடுலை மராக்கோ, அல்ஜீரியா, லிபியா, எகிப்து சவுதி அரேபியா, ஈராக், ஓமன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பார்க்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.