தமிழகத்தின் புதுகை மாவட்டத்தில் பிறந்து மருத்துவம், சமூக நீதி, விழிப்புணர்வு போன்றவற்றிற்காக போராடிய மகத்தான மங்கை முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் 133வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. 1883 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாள் பிறந்த முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண்மருத்துவர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகால வாழ்க்கை
அக்கால தமிழகத்தின் அத்தனை அவலங்களையும் முத்துலட்சுமி நேரடியாகவே சந்தித்திருக்கிறார். இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய பெற்றோர்களின் தீர்மானத்திற்கு எதிராக தன் மருத்துவக் கனவுகளுக்கு சிறகு தயாரித்தார் ரெட்டி. மகாராஜா கல்லூரியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று கனவின் கருவறையான சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். மருத்துவம் முடித்தபிறகு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை புரிந்தார்.

சமூகப் பார்வை
பால்ய விவாக கொடுமை உச்சத்தில் இருந்த தமிழகத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகள் கனல்பறக்கத் தொடங்கிய காலத்தில் தன்னையும் அதனோடு இணைத்துக்கொண்டார். வாழ்வின் லட்சியமாக நினைத்த மருத்துவர் வேலையைத் துறந்து சிறார் மனத்திற்கு எதிராக போராடத் தொடங்கினார். காந்தியடிகளின் கொள்கைகளின் மீது அபாரமான நம்பிக்கை வைத்திருந்த ரெட்டி தொடர்ந்து அவரது வழியிலேயே பயணப்பட்டார்.
1914 ஆம் ஆண்டு சுந்தர ரெட்டி எனும் மருத்துவரை கரம்பிடித்தார் முத்துலட்சுமி ரெட்டி. ஆனாலும் சமூகத்திற்காக இயங்குவதை அவர் ஒருபோதும் நிறுத்திக்கொள்ளவில்லை. ஆலயங்களில் தேவதாசிக்களாக இருந்த பெண்களை அதிலிருந்து விடுவித்ததில் முத்துலெட்சுமி ரெட்டிக்கு பெரும்பான்மையான பங்கு உண்டு. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் இருந்த இந்தியாவில் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்னும் சாதனையையும் நிகழ்த்திக்காட்டினார்.
பிரிந்த தங்கை
1950 களில் தனது தங்கை புற்றுநோயால் இறக்க கலங்கிப்போனார் முத்துலட்சுமி ரெட்டி. தன்னைப்போலவே எத்தனையோபேர் தங்கைகளை, பெற்றோர்களை புற்றுநோய் என்னும் பெருநோய்க்கு இரையாகக் கொடுத்துவிட்டு இன்னலுறுவதை நேரடியாகக் கண்டார். கவலைகளுக்கு கைகொடுக்கத் தயாரானார். அப்படித்தான் சென்னையில் உள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமனை தயாரானது. ரெட்டிக்கு பின்பு மருத்துவர் சாந்தா இந்த மருத்துவமனையை ஏழைமக்களின் வாழ்க்கைக்காகவே அற்பனித்தார். இன்றளவிலும் உலக அளவில் சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் அடையாறு மருத்துவமனையும் ஒன்றாகும். ஆண்டுதோறும் 80,000 பேர் இந்த மருத்துவமனையினால் பயன்பெறுகின்றனர்.

முத்துலட்சுமி ரெட்டியின் சமூக செயல்பாட்டினைப் பாராட்டி 1956 ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. மருத்துவராகத் தேர்ச்சி பெற்றாலும், உடல்நோய்களுக்கு மட்டுமல்லாமல் சமூக நோய்களுக்கும் மருந்தளிக்கும் மகத்தான பொறுப்பை சுமந்த முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளன்று அவரது சாதனைகளை நினைவுகூறுவோம்.