ஒல்கா லேடிஷேன்ஸ்கயா (Olga Ladyzhenskaya). பயப்படவேண்டாம் பெயர் தான். ரஷியா, சோவியத் யூனியனாக இருந்த காலத்தில் கோலோக்ரிவ் (Kologriv) நகரத்தில் பிறந்தவர் ஒல்கா லேடிஷேன்ஸ்கயா. தந்தை ஒல்கா அலெக்சான்ட்ராவ்னா லேடிஷேன்ஸ்கயா (Olga Aleksandrovna Ladyzhenskaya). அந்தப்பிராந்தியத்தில் மிகச்சிறந்த கணித ஆசிரியர். தந்தையினுடைய கணித அறிவுதான் ஒல்கா லேடிஷேன்ஸ்கயாவின் கணிதத்தின் மீதான ஈடுபாட்டிற்குக் காரணம்.
பகுதி வகைப்பாட்டியல் (partial differential equations) மற்றும் நீர்ம இயக்கவியல் (fluid dynamics) துறைகளில் ஒல்கா லேடிஷேன்ஸ்கயாவின் பங்களிப்பு அசாதாரணமானது. இதனைக் கவுரப்படுத்தும் விதமாகவே கூகுள் இன்று டூடுல் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தேசத்துரோகி
ஒல்கா 15 வயது சிறுமியாக இருக்கும்போது நாட்டில் கிளர்ச்சிப்படைகள் உருவாக ஆரம்பித்தன. அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் பிரச்சாரம் செய்வதாக அரசு தீவிர கட்டுப்பாடுகளை மக்களின்மீது திணித்தது. அரசின் கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களை “மக்கள் நல விரோதி” எனக்கூறி மரணதண்டனை அளித்தது அப்போதைய சோவியத் யூனியன் அரசு.
அப்படி அரசின் அதிகாரத்தால் கொலை செய்யப்பட்டவர்களுள் ஒல்காவின் தந்தையும் ஒருவர். இதனால் ஒல்காவின் வாழ்க்கை திசைமாறிப்போனது. பள்ளிகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்த போதும் அவரால் மேற்படிப்பில் சேர இயலவில்லை. காரணம் தந்தையின் அவப்பெயர். ரஷியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான லெனின்கிராட் (Leningrad University) ஒல்காவின் விண்ணப்பத்தை மறுதலித்தது.
தன்னைப்பார்த்து அடைத்துக்கொள்ளும் கதவுகளைப் பார்த்து பழக்கப்பட்டது ஒல்காவிற்கு. பல கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துப் பார்த்தார். தோல்விதான். வாழ்க்கை எங்கு நம்மைக் கரைசேர்க்கும் என தாயின் மடியில் புலம்பியவளின் காதுகளுக்கு வந்து சேர்ந்தது அந்தச் செய்தி. அதிபர் ஸ்டாலின் மரணமுற்றிருந்தார்.

திறக்கப்பட்ட கதவுகள்
அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டன. தன்னை மறுத்த அதே லெனின்கிராடில் இருந்து அழைப்பு வந்தது. கண்ணீருக்கு காலம் வெகுமதி அளித்தது. ரஷியாவின் மிகச்சிறந்த கணிதமேதையான இவான் பெட்ரோவ்ஸ்கியின் (Ivan Petrovsky) துணையோடு கணிதத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும் இருந்து பல்வேறு கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
Navier-Stokes சமன்பாடுகளை ஆதாரத்துடன் நிரூபித்தார். எந்த அரசு ஒல்காவின் சிறுவயது கனவுகளை சிதைத்ததோ அதே ரஷிய அரசாங்கம், கணிதத்துறையில் இவருடைய சேவையினைப் பாராட்டி 2002 ஆம் ஆண்டு லோமொனசொவ் (Lomonosov) தங்கப்பதக்கம் இவருக்கு வழங்கியது.
விடாமுயற்சி என்றும் வெற்றியை மட்டுமே பரிசளிக்கும் என்பதற்கு ஒல்காவும் ஒரு சான்று.