மனிதகுல வரலாற்றில் மகத்தான ஓவியராகக் கொண்டாடப்படும் வின்சென்ட் வான்காவின் உயிரைக்குடித்த துப்பாக்கி பாரீசில் ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிகஅதிக விலைக்கு இந்த வரலாற்று ஆயுதம் வாங்கப்பட்டிருக்கிறது. இதை யார் ஏலத்தில் வாங்கியது என்ற தகவலை அந்த நிறுவனம் வெளியிட மறுத்துவிட்டது. துப்பாக்கியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கு முன் வான்காவைப் பற்றி பார்த்துவிடலாம்.

வான்காவும் வறுமையும்
1853. மே மாத இறுதியில் பூமி சுழன்று கொண்டிருந்தது. நெதர்லாந்தில் ஸன்டெர்ட் என்னும் குக்கிராமத்தில் தியோடரஸ் வான் கா- அன்னா கர்னெலியா கார்பென்டஸ் தம்பதிக்கு வான்கா பிறந்தார். எளிமையான மிகச்சாதாரணமான ஒரு நிகழ்வு. ஆனால் இந்த உலகத்தை மாற்றிய அனைத்தும் அப்படி ஆரம்பித்தவை தான். பிஞ்சுக்கையை அசைக்கும் குழந்தைக்கு பரிசாக கொடுக்க தந்தையிடம் ஒன்றுதான் இருந்தது. அது அவர்களது பரம்பரைச் சொத்தான வறுமை.
குழந்தைப்பருவத்திலேயே வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்றும் பசியின் கூர் நகங்கள் எப்படியெல்லாம் உடலைக் கிழிக்கும் என பரிச்சயம் பெற்றவராக இருந்தார் வான்கா. நாம் எதற்கு அருகில் இருக்கிறமோ அதன் மறுமுனையில் தான் நம் சிந்தனை நிலைத்திருக்கும். வறுமையினாலும், புறக்கணிப்பினாலும் வாடிக்கொண்டிருந்த வான்கா ஓவியத்தை வழிபடு கடவுளாக ஏற்றுக்கொண்டார். வாழ்வில் தனக்கு கிடைக்காமல்போன புதுப்புது வண்ணங்களை ஓவியமாக தீட்டினார். ஆனாலும் பொருளாதார நிலையில் பெரிதாக மாற்றமில்லை. வான்காவின் ஓவியத்தைப் பார்த்து அனைவரும் அதிசயித்தார்களே தவிர அவரை ஆதரிக்க யாரும் முன்வரவில்லை. எத்தனை பெரிய கலைஞனுக்கும் வயிறு என்று ஒரு உறுப்பு இருக்கிறது என்பதை இந்த உலகம் ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. கடும் மன உளைச்சலில் இருந்த வான்காவின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு உதவியாக இருந்தவர் அவரது சகோதரர் தியோ தான்.

ஒவ்வொரு முறை விழும்போதும் தூக்கிவிட தியோ இருக்கிறான் என்ற நம்பிக்கையில் வான்கா தைரியமாக விழத் தொடங்கினார். கைகள் ஓவியம் வரைந்து வரைந்து கடுத்தன. பணத்தேவை காரணமாக சிறிதுகாலம் ஆங்கில ஆசிரியராகவும் இருந்து பார்த்தார் வான்கா. ஆனால் கலை ஒரு ராஜ போதை. அங்கே உங்களால் துவக்கத்தை மட்டுமே நிர்ணயிக்க முடியும். முடிவு உங்களுக்கு அப்பாற்பட்டது. எத்தனையோ சிறிய சிறிய தொழில்கள், நஷ்டம், வறுமை மீண்டும் ஓவியம். இதுதான் அவரது வாழ்க்கையானது. ஒருகட்டத்தில் மனநோய் தீவிரமடைந்து எப்போதும் தனக்கு பக்கத்திலேயே வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து வயிற்றில் சுட்டுக்கொண்டார். எது வாழ்நாள் முழுவதும் தன்னை இம்சித்ததோ அதன் பெருவெளியை தோட்டக்களால் நிரப்பி இந்த உலகத்திற்கு விடைகொடுத்தார் வான்கா.
அவர் வாழ்ந்த காலத்தில் அவரது எந்த படைப்பும் பெரிய அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை. வான்காவின் கடைசிக்காலத்தில் அவர்வரைந்த தி ஸ்டேரி நைட்ஸ், லாண்டஸ்கேப் வித் சிப்ரஸ் டிரீஸ், சன்ஃபிளவர் மற்றும் தி யெல்லோ சேர் ஆகியவை மனிதகுல வரலாற்றின் ஆகச்சிறந்த படைப்புகளாக கொண்டாடப்படுகிறது. இவை அப்போதே சில டாலர்களுக்காகவாவது விற்றிருந்தால் வான்கா வெறும் 37 வயதில் இந்த பூமிக்கு இறுதி வணக்கத்தை சொல்லியிருக்க மாட்டார்.

தீர்ந்த பசி
பாரிஸுக்கு அருகில் இருக்கும் உவர்-சர் ஆய்ஸ் என்னும் கிராமத்தில் தான் வான்கா தனது கடசிக்காலத்தில் வாழ்ந்தார். இங்கேதான் அவர் தற்கொலை செய்துகொண்டதும். அப்போது வான்காவின் உடலைக் கைப்பற்ற முடிந்ததே தவிர அந்த துப்பாக்கி யாருக்கும் கிடைக்கவில்லை. அதன்பிறகு அப்பகுதி விவசாயம் செய்யும் நிலமாக மாறியது. 1965 ஆம் ஆண்டு விவசாயி ஒருவரால் அந்த துப்பாக்கி நிலத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அது பின்னர் காவல்துறையிடம் சமர்பிக்கப்பட்டு பழைய வரலாறுகளை மீட்டுக்கொடுத்திருக்கிறது. வான்காவின் துப்பாக்கி தான் இது என்பதற்கு அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவ குறிப்புகள் உதவியிருக்கின்றன.

உண்மை தெரிந்த பின்னர் அதன் புகழ் அதிகரித்துவிட்டது. வான்காவிற்கு எது கிடைக்காமல் போனதோ அது அனைத்தும் அந்த துப்பாக்கிக்கு கிடைத்தது. வான்காவின் படைப்புகளுக்காக கட்டப்பட்ட தனி அருங்காட்சியம் ஒன்றில் அந்த துப்பாக்கி வெகுநாள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதுதான் இப்போது ஏலத்திற்கு வந்திருப்பது. இதன் ஆரம்ப விலையாக ஏல நிறுவனம் $67,000 டாலர்களை நிர்ணயித்திருந்தது. ஆனால் விற்பனையோ $183,000 டாலர்களுக்கு செய்யப்பட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. படைப்பாளிகள் ஒருபோதும் கொண்டாடப்படுவதில்லை அவர்களது வரலாறு மட்டுமே பெரும் வரவேற்பையும் புகழையும் பெரும் என்பதற்கு வான்கா ஒரு சிறந்த சான்று.