மது அருந்தி இறந்தவர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் பீர் வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்களைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது நடந்தது இங்கிலாந்தில். 1817 – ஆம் ஆண்டு அக்டோபர் 17 – ஆம் தேதி கிரேட் ரஸ்ஸல் தெரு (Great Russell Street) மக்கள் எப்போதும் போலவே தங்களுடைய வேலைகளில் மும்மரமாய் இருந்தனர். குழந்தைகள் வீட்டினை ஒட்டிய இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்த பேரிரைச்சல் கேட்டது. பூமி அதிர்வதைத் தெளிவாக உணர்ந்தார்கள் மக்கள். பூகம்பம் என நினைத்துக் கட்டில், நாற்காலிகளுக்குக் கீழ் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். பெரும் நுரையுடன் பீர் வீட்டிற்குள் புகுந்தது.

சிறிய தவறு
ரஸ்ஸல் தெருவின் அருகில் இருக்கிறது ஹென்றி மேக்ஸ் நிறுவனம் (Henry Meux and Co). அரசர் மூன்றாம் ஜார்ஜின் காலத்திலிருந்தே புகழ்பெற்ற நிறுவனம். வருடத்திற்கு 1 லட்சம் பெரல் பீர்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. யானைக்கும் அடி சறுக்குமல்லவா? அப்படி ஹென்றி நிறுவனம் சறுக்கிய நாள் அக்டோபர் 17 மாலை 4.30. ஆலையின் உள்ளே பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 22 அடி உயரமுள்ள பீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை. பாதுகாப்பு அதிகாரி விரிசலை முன்கூட்டியே பார்த்ததாகவும், அதனால் பிரச்சனை இல்லை என நினைத்ததாகவும் பின்னர் நடந்த விசாரணையின் போது தெரிய வந்தது.
உலகின் முதல் பீர் தொழிற்சாலையைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
570 டன் பீர்
10 மாதத்திற்கும் மேலாக புளிக்க வைக்கப்பட்டிருந்த பீர்கள் ஆலை முழுவதும் இருந்திருக்கின்றன. பீரில் நுரை அதிகளவில் பொங்கி, குழாயினை விரிசல் விழச் செய்திருக்கிறது. அழுத்தம் தாங்க முடியாமல் குழாயானது வெடித்துச் சிதறியது. அதன் அழுத்தம் மற்ற குழாய்களையும் தாக்க எல்லா குழாய்களும் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. 570 டன் எடையுள்ள பீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடத் துவங்கியது. இப்படி காட்டாறு போல் வழிந்தோடிய பீர் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

9 பேர் மரணம்
அடுத்த நாள் பூகம்பம் ஏற்பட்டதாகவே பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனாலும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையினால் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. பீர் வெள்ளம் வீட்டிற்குள் புகுந்ததினால் மொத்தம் 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை மரணமடைந்திருந்தார்கள். அதன் பிறகு பீர் தொழிற்சாலைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இவ்விபத்து வரலாற்றில் ஒரு வினோதம் தான்.