குபிட்(CUPID), சமீப காலமாக அதிகமானோரால் உச்சரிக்கப்பட்ட பெயர் இது தான். ரெமோ படத்தில் கையில் அம்புடன் பறந்து திரியுமே அதுதான் குபிட். அதன் அம்பு தைத்த மனிதர்கள் காதலில் விழுவார்கள் என்று படத்தின் தொடக்கத்திலேயே அறிமுகம் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் குபிட் – இன் அறிமுகம் அந்தப் படத்தில் அல்ல. சொல்லப் போனால் அந்தப்படத்திலேயே வயதான கதாபாத்திரம் குபிட் தான். வயசு குறைவு தான். சுமார் 3000!!

காதல் கடவுள் பிறந்த கதை
ரோமானிய ஆட்சிக்காலத்தில் தான் குபிட் என்ற பெயர் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. “உங்க ஊருலதான் இதுக்கு பேரு குபிட், எங்களுக்கு ஈரோஸ் தான்” என்கிறார்கள் கிரேக்கர்கள். ஆமாம் கிரேக்கர்களைப் பொறுத்தவரை அதன் பெயர் ஈரோஸ் (Eros). ரோமானியர்களுக்கு முன்பே கிரேக்கர்களால் காதல் கடவுள் என்று ஈரோஸ் வணங்கப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் பின்னர் எரோடிக் (Erotic) என்னும் வார்த்தை வந்ததாம்!! பெயர் மாறினாலும் செய்யும் வேலையில் எந்த வித மாற்றமும் இல்லை. காதலைப் பரவச் செய்வது. எல்லா மதத்தினருக்கும் பிடித்த ஒரே கடவுள் குபிட்டாகத்தான் இருக்க முடியும் !!
பண்டைய கிரேக்க பெரும் புலவர்களுள் ஒருவரான ஹெசியோட் (Hesiod) தான் முதன்முதலில் குபிட் மீது இலக்கிய டார்ச் அடித்தது. இவர் எழுதிய தியோகனி (Theogony) என்னும் நூலில் குபிட்டினைப் பற்றிய ஜாதகமே இருக்கிறது.
அம்பும் வில்லும்
வீனஸ் என்ற தேவதைக்கும், மெர்குரிக் கடவுளுக்கும் பிறந்தவர் தான் குபிட். இவர் கையில் எப்போதும் வில்லுடனே வலம் வருவது வழக்கம். அதுதான் காதல் ஆயுதம். குபிட்டின் அம்பறாத்தூணியில் இரண்டுவகையான அம்புகள் இருக்கும். தங்கத்தாலான அம்பு அன்பையும், ஈயத்தாலான அம்பு வெறுப்பையும் உருவாக்க வல்லது என கிரேக்க புராணங்கள் கூறுகின்றன. ஒருமுறை கிரேக்கர்களின் காக்கும் கடவுளான அப்பல்லோவின் மேல் தங்க அம்பை ஏவி விட்டார் நம் கடவுள். அவரும் அன்பு பெருக்கெடுத்து கொட்டுவதற்கு வழி தெரியாமல் அலைந்தார். கடைசியில் அந்த வழியாய்ச் சென்ற டப்னே (Daphne) என்னும் தேவதையைப் பார்த்து பூரிப்படைந்தார் அப்பல்லோ. இதையெல்லாம் பொறுமையாய் பார்த்துக்கொண்டிருந்த குபிட், தேவதை டப்னே மீது ஈயத்தாலான அம்பை ஏவி விட்டார். விளைவு? அப்பல்லோவைக் கடவுள் என்றும் பாராமல் விரட்டியடித்து விட்டார் டப்னே. இப்படிக் காதலால் கடவுள்களுக்குள்ளும் உட்கட்சிப் பூசல்கள் முளைத்தன.

துரோகப் படலம் !!
கர்மா என்னும் ஒரு சொல் உண்டு. நாம் பிறருக்குச் செய்த வினைகளுக்கெல்லாம் எதிர்வினை நம்மை நிச்சயம் தாக்கும். மனிதன் ஆனால் என்ன? கடவுள் ஆனால் என்ன? கர்மா தன் கைங்கர்யத்தைச் செய்தே தீரும். குபிட்டின் கர்மா அவரின் அம்மா வீனஸின் மூலமாக வந்தது. பெரிதாக ஒன்றுமில்லை. கிரேக்கத்தில் சைக்(Psyche) என்னும் பேரழகி வாழ்ந்து வந்தாள். வீனஸ், அவள் அழகின் மீது பொறாமை கொண்டாள். இத்தனைக்கும் சைக் கடவுள் கூட இல்லை. மனிதப் பிறவிதான். பொறாமை வீனஸின் கண்களை கன்னாபின்னாவென்று மறைத்துவிட்டது. தன் மகன் குபிட்டை அழைத்து, அந்த அழகியை ஓர் மிருகத்துடன் காதல் கொள்ளுமாறு செய்யச் சொன்னாள் வீனஸ். என்னே ஒரு உயர்ந்த உள்ளம்? தாய் சொல்லைத்த தட்டாதவன், தாய்க்குத் தலைமகன் குபிட் உடனே அம்புடன் புறப்பட்டார்.
வினை விதைத்தவன் …

தன் தாய் சொன்னது போல் சைக் மேல் தங்க அம்பினை ஏவினான் குபிட். அடுத்தது ஓர் மிருகத்தின் மீதும் தங்க அம்பினை எய்த வேண்டுமல்லவா? அப்போது தானே கணக்கு சரியாகும்? ஆனால், தங்க அம்பினை எடுத்த குபிட் தன் மீதே எய்துவிட்டான். சைக் – ன் அழகு ஒரு காரணம் என்றாலும் கர்மா மற்றுமொரு காரணம். மானுடர் ஒருத்தியை மணம் முடிப்பதைக் கடவுள் உலக காவல் துறைகள் ஒத்துக் கொள்ளவில்லை. இன்று முதல் நீ சாகாவரம் பெற்று வாழ்வாய் என்று ஆசி வழங்கி, அவளை தேவதை ஆக்கினார் குபிட். அன்று முதல் முதுகில் இறக்கை முளைத்தவளானாள் சைக். பல தடைகளைக் கடந்து குபிட் சைக் – ஐ மணந்தான்.
குபிட் ஒரு குழந்தையா?

குபிட் என்று இணையத்தில் தேடினால் இடுப்புயர குழந்தையின் படம் தான் திரையில் வந்து குவியும். (திரைப்படத்திலும் அப்படித்தான் காட்டப்பட்டிருந்தது) கிரேக்கர்களின் புராண காலத்தைப் பொறுத்தவரை குபிட் மரணமில்லா கடவுள். பெண்களின் கனவுக் கண்ணன். நம்ம ஊர் இந்திரன் மாதிரி. பின்னாளில் கிரேக்க சாம்ராஜ்யம் அலெக்சாண்டரின் கைகளை விட்டு விலகிய பின்னர் வேறுமாதிரியான கதைகள் கிளம்பின. குபிட்டை குழந்தையாக்கி விட்டார்கள் பிற்காலத்தவர்கள். எது எப்படியோ, குபிட் அம்பு விட ஏராளமான இளைஞர்கள் உலகம் முழுவதும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும் மட்டும் நூறு சதவிகித உண்மை.