கோஹினூர் வைரம். எங்கோ படித்த ஞாபகம் வருகிறதா? வரலாற்றுப் புத்தகத்தின் ஏதாவது வரிகளுக்குள்ளே அந்த வைரம் புதைந்து கிடைக்கும். அதுகுறித்த ஏராளமான தகவல்கள் இன்று நம்மிடையே இருக்கின்றன. ஆனால் கோஹினூர் வைரத்தைப் பற்றி பலரும் கூறும் ஒரு கருத்து, கோஹினூர் வைரத்தின் சாபத்தைப் பற்றியது. வைரக்கல்லின் மீது சாபமா? ஆமாம். வெகுகாலமாய் அதன் மர்மம் அவிழ்க்கப்படாமலேயே இருக்கிறது.

மலை அளவு ஒளி
அதுதான் கோஹினூர் என்பதன் அர்த்தமாகும். ஆந்திராவின் குண்டூர் அருகே உள்ள கொல்லூர் எனும் கிராமத்திலிருந்து கோஹினூர் வைரம் வெட்டியெடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இது 105 காரட் அதாவது 21.6 கிராம் எடை கொண்டது. கில்ஜிக்கள், முகலாயர்கள், பெர்ஷியர்கள், ஆஃப்கானியர்கள் எனப் பல அரசுகளினால் கோஹினூர் வைரம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து யாரிடமும் இருந்ததில்லை. 1877 – ஆம் ஆண்டிற்குப் பின்னால் விக்டோரியா மகாராணிக்கு இது பரிசளிக்கப்பட்டது.
தொடரும் சாபம்..
கோஹினூர் வைரத்தைக் கைப்பற்றிய யாரும் அரசராக நீடித்ததில்லை என்னும் வதந்தி நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மேலும் அவர்கள் மிக இழிவான நிலையை அடைந்ததாகவும், பலர் மர்மமான முறையில் இறந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். அட , இதெல்லாம் கட்டுக்கதை என்றும் சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த மர்மத்தை நம்புபவர்கள் வரலாற்றில் பல சம்பவங்களை இதற்கு எடுத்துக்காட்டாக முன் வைக்கின்றனர். அதில் விசித்திரம் என்னெவென்றால் கோஹினூர் வைரம் பெண்களை ஒன்றும் செய்யாதாம். ஆண்களைத்தான் படாதபாடு படுத்தியிருக்கிறது போலும்.

விடாது கருப்பு
- ஆந்திராவில் இருந்த கோஹினூர் வைரம் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக் கபூரால் கைப்பற்றப்பட்டு டெல்லி எடுத்துச் செல்லப்பட்டது. இங்கு தான் சாபக் கதை தொடங்குகிறது. மாலிக்கபூர் கொல்லப்பட்டார். அடுத்த அரசரை தேர்ந்தெடுப்பதில் வந்த குழப்பத்தில் கில்ஜி மனமுடைந்து நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அவருக்குப்பின் சரியத்துவங்கிய கில்ஜி அரசு பால்பன் அதிகாரத்திற்கு வரும்வரை அதே நிலைமையில் தான் இருந்தது.
- டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியிடம் வைரம் கிடைத்த போதுதான் பாபர் ஆப்கானிஸ்தானிலிருந்து போருக்குப்
- புறப்பட்டு வந்தார். 1526 – ஆம் ஆண்டு பானிபட் போரில் வென்று பாபர் டெல்லியைக் காப்பாற்றினார். அப்போது இளவரசர் ஹுமாயூனுக்கு வைரம் பரிசளிக்கப்பட்டதாம். சுத்தம்.
- ஹுமாயூன் அரசராக பதவியேற்ற கொஞ்ச நாளில் செர்ஷா அப்பதவியைக் கைப்பற்றினார். கூடவே அந்த வைரத்தையும். செர்ஷாவிற்கு என்ன நடந்தது தெரியுமா? பீரங்கி விபத்தில் படுகாயமுற்று இறந்துபோனார். ஹுமாயூன் கடைசிவரை நாடோடியாக அலைந்தார். அதற்கு காரணம் கோஹினூர் வைரம் தான் என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்கிறார்கள் வதந்திக் காப்பாளர்கள்.
- அக்பர் கோஹினூர் வைரத்தைத் தொட்டதில்லையாம். அக்பருக்குப் பிறகு அவர் பேரன் ஷாஜஹான் தான் கருவூலத்தில் இருந்து வைரத்தை வெளியே எடுத்திருக்கிறார். அவரது கதை ஒரு சோகக் காவியம். தன் மகனாலேயே சிறைவைக்கப்பட்டு இறந்துபோனார் ஷாஜஹான். அடுத்து அவுரங்கசீப்.
- அவுரங்கசீபிற்கும் சேர்த்து அவர் வாரிசுகள் துன்பத்தைச் சுமந்தனர். கடல்போல் விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யம் கோடைகாலக் குளமென மாறியது. அவருக்குப்பின் பல கைகள் மாறிய அரசு முகமது ஷாவிடம் வந்து சேர்ந்தது. அதற்குள் பெர்ஷியாவில் இருந்து நாதிர்ஷா படையெடுத்து வந்துவிட்டார். முகமது ஷா தோல்வியைத் தழுவினார். கோஹினூர் வைரத்தையும் சேர்த்து டன் கணக்கில் செல்வங்களை அள்ளிச்சென்றார் நாதிர்ஷா. அவரும் இதிலிருந்து தப்பவில்லை. ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருந்த அரசரை நிரந்தரமாய் தூங்கவைத்தனர் அவருடைய வீரர்கள்.
- அதன்பிறகு மறுபடியும் இந்தியாவிற்கே வந்து சேர்ந்தது கோஹினூர். பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது. கடைசியாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கோஹினூர் வைரம் கைப்பற்றப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலே இருப்பவையெல்லாம் கோஹினூர் வைரத்தின் சாபத்தைப் பற்றிய செய்திகள். வரலாற்றில் இவையெல்லாம் நடந்திருப்பது உண்மைதான் எனினும் அதன்காரணம் வைரம் தான் என்பது ஏற்க இயலாத வாதம்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. இதை கிளப்புவோர்கள் சொல்லும் இன்னொரு கதைதான் “திக்” என்றிருக்கிறது. கோஹினூர் வைரத்தின் சாபத்தைப்பற்றி வெள்ளையர்களுக்கு முன்பே தெரியுமாம். அதனால் தான் ராணியிடம் அதை கொடுத்துவிட்டனராம். ஏனென்றால் பெண்களை அதன் சாபம் ஒன்றும் செய்யாது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்ததாம். இது ராணிக்குத் தெரியுமா என்றுதான் தெரியவில்லை. காகம் உக்கார்ந்து பனம்பழம் விழுந்த மாதிரி எனச் சொல்வார்களே அது தான் இது. என்ன ஒரு வித்தியாசம் இங்கு பல காகங்கள் ; பல பனம்பழங்கள்.