இயற்கை ஏராளமான ஆச்சரியங்களையும் அசரடிக்கும் அழகையும் மனிதர்களுக்கு தரும் அதேவேளையில் என்றென்றைக்கும் புரிந்து கொள்ள முடியாத சில வினோத வலிகளையும் தந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி ஒருவரின் கதைதான் யானை மனிதனின் கதை. நீங்கள் தெருவில் ஒருவரை பார்க்கிறீர்கள். அவருடைய தலை 3 அடி விட்டம் கொண்ட பெரிய பந்து போல் இருக்கிறது. மணிக்கட்டு மட்டும் சுமார் ஒரு அடி சுற்றளவு கொண்டதாக இருந்தால் உங்களுக்கு என்ன தோன்றும். இப்போது என்றால் அவரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதோடு போய்விடுவோம். ஆனால் அப்படியும் ஒரு மனிதன் இருக்கிறான் அவருக்கும் ஒரு மனது இருக்கிறது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. இப்படியெல்லாம் நடக்குமா என்கிறீர்களா நடந்து இருக்கிறது இங்கிலாந்து நாட்டில்.

Lighthouse Books, ABAA
1862 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோசப் மெரிக். முதல் ஐந்து வயது வரையிலும் சாதாரண குழந்தைப் போலத்தான் இருந்திருக்கிறார் ஜோசப். அதன் பிறகுதான் இயற்கை தனது கோரமுகத்தை அவரிடம் காட்டியுள்ளது. உடம்பு முழுவதும் உள்ள தசைகள் விரிவடைந்து சில இடங்களில் கட்டிகள் வீங்கி உடம்பு வித்தியாசமான வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அவரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால் ஜோசப்பின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. உடல் முழுவதும் வீங்கி எலும்புகள் வளைந்த நிலையில் இருந்த ஜோசப்பை பள்ளி நிர்வாகம் இனிமேல் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டது. தன்னுடைய 11 ஆவது வயதில் தாயாரும் இறந்துபோக மிகக் கொடுமையான நாட்களில் ஜோசப் வாழத் தலைப்பட்டார். அவருடைய தந்தை இன்னொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டு சென்றுவிட சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார் ஜோசப்.
ஆனாலும் அவரால் தனது வலது கையை தூக்க முடியாத அளவிற்கு அது வீங்கியிருந்தது. இடுப்பு எலும்புகளும் அதிக எடை காரணமாக கடும் அழுத்தத்திற்கு உள்ளானதில் அவரால் சரிவர வேலையில் ஈடுபாடு செலுத்த முடியவில்லை. இதனால் அந்த வேலையும் பறிபோனது. கொடும் இரவில், தனிமையில் இருக்கும்போது நெருக்கத்தில் படபடக்கும் மின்மினிப் பூச்சியின் ஆதரவாய் வந்து சேர்ந்தது தந்தையின் கடிதம். உடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த அவரது தந்தை ஜோசப்பின் பெயரில் விற்பனையகம் ஒன்றைத் தொடங்கினார். ஆனால் தந்தை அளவிற்கு இயற்கை அவர் மீது கருணை காட்டவில்லை.

ஜோசபின் பேசும் திறனும் முழுவதுமாக நின்று போனது பொருட்களை வாங்க வந்த மக்கள் ஜோசப்பின் நிலைமையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பலர் அக்கடைக்கு வருவதை நிறுத்தி விட்டனர். பலர் ஜோசப்பை யானை மனிதன் என்று கிண்டல் செய்யவே அவர் தந்தை மனம் உடைந்து போனார். இதனால் வியாபாரத்தில் படுதோல்வியை சந்தித்தது அந்த நிறுவனம்.
அதன் பின்னர் முழுவதும் தனிமை. முழு இருள். கடைசியாக ஒரு முடிவிற்கு வந்தார் ஜோசப். தன்னை விசித்திரமாக பார்க்கும் மக்களின் குரூர எண்ணத்தை வைத்தே நிகழ்ச்சி ஒன்றினை துவங்கினார். சர்க்கஸ் நிறுவனம் போன்ற ஒன்றில் யானை மனிதனின் காட்சி இடம் பெற்றது. எந்த மனிதனின் கரங்களை தொடுவதற்கே மக்கள் அச்சப்பட்டனரோ, யாருடைய முகத்தை பார்ப்பதற்கு மக்கள் அருவருப்படைந்தனரோ, அவரைப் பார்ப்பதற்கு வரிசையில் நின்று பணம் கட்டினர் மக்கள். இதனால் இங்கிலாந்து முழுவதும் ஜோசப் பிரபலமானார். அதேசமயம் அவருடைய உடம்பும் மிக மோசமாகிக்கொண்டே வந்தது. அவருடைய 27 வது வயதில் முதுகெலும்பு பகுதியில் இருக்கும் இணைப்புகள் உடைந்ததால் மரணமடைந்தார் ஜோசப். அவருடைய எலும்பு மருத்துவ பல்கலைக்கழகத்தில் வைக்கப்படுவதற்காக உடம்பில் இருந்து அகற்றப்பட்டது. அவருடைய தோல் பகுதியின் சிறிதளவை ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழகம் எடுத்துக்கொண்டது. மீதமிருந்த உடலில் எங்கே புதைத்தார்கள்? யார் செய்தார்கள்? என்ற விபரம் தெரியவில்லை.

இதனைத்தான் விகோர் முங்கோவின் இத்தனை ஆண்டுகளாகத் தேடி வந்தார். அவருடைய கல்லறையை தேடுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கினார் முங்கோவின். இங்கிலாந்து முழுவதிலும் உள்ள கல்லறைத் தோட்டங்கள் மற்றும் அதன் நிர்வாக அமைப்புகள் அனைத்திற்கும் நேரடியாகச் சென்று ஜோசபின் கல்லறையை தேடியிருக்கிறார். ஒருவழியாக தற்போது அதனை கண்டுபிடித்து விட்டார். கடவுள் பக்தி நிறைந்த ஜோசப் தான் இறந்தபிறகு சர்ச் வளாகத்தில் தன்னை புதைக்குமாறு வலியுறுத்தும் கடிதம் ஒன்று தான் தற்போது அவரை 140 வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடித்திருக்கிறது. இது குறித்து பேசிய முங்கோவின்,” என்னுடைய நீண்ட கால ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறது ஜோசப்பிற்கு நினைவிடம் ஒன்றை அமைக்க அரசாங்கத்தை வலியுறுத்துவேன். ஜோசப் மாதிரியான ஆள் ஒருவர் இருந்தார். சராசரி மனிதனுக்கு கிடைக்கும் அன்பும், அரவணைப்பும் கிடைத்திருந்தால் அந்த யானை மனிதன் இன்னும் சில ஆண்டுகளில் இந்த பூமியில் வாழ்ந்திருப்பான் என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார். இன்றும் ஜோசப்பை போல் எத்தனையோ பேரை நாம் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு ஒரு சிறு தொகையை அளிப்பதன் மூலமே நம்மை நாம் திருப்திப் படுத்திக் கொள்கிறோம். உண்மையில் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தை இல்லை.