உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா? இதென்ன அபத்தமான கேள்வி என்கிறீர்களா? உலகில் அதிகம் பேருக்குப் பிடித்த உணவுப்பட்டியலில் முதலிடம் சாக்லேட்டிற்குத் தான். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்லவா? மாயன் காலத்தில் பொருட்களை வாங்க விற்க, வேலை ஆட்களுக்கு ஊதியம் வழங்க சாக்லேட்களை பயன்படுத்தியிருக்கின்றனர். சாக்லேட் பணம்!!! நினைக்கவே இனிக்கிறதல்லவா? உண்மை தான். கோகோ கொட்டைகளை அரைத்து, உருக்கி அச்சில் வடித்து அதை நாணயங்களாக பயன்படுத்தியிருக்கின்றனர் பண்டைய மாயன்கள்.

மாயன்கள்
சாக்லேட் நாணயங்களைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்த மாயன்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். யாரும் பயப்பட வேண்டாம் கொஞ்சம் தான். இப்பொழுது உலக வரைபடத்தை உங்களின் முன்னால் விரித்துக் கொள்ளுங்கள். மத்திய அமெரிக்காவையே உற்றுப்பார்த்தால் மெக்சிகோ, கவுதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ் மற்றும் எல்சல்வடார் போன்ற நாடுகளின் பெயர்கள் பொடிப்பொடியாக எழுதியிருக்கும். கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையா? பிரச்சனையில்லை. உங்களுக்காகவே கீழே வரைபடம் கொடுத்திருக்கிறேன்.

பார்த்து விட்டீர்களா? ஆமாம், மாயன்கள் வாழ்ந்த இடம் தற்பொழுது ஐந்து நாடுகளாக இருக்கிறது. கி.மு.2600ல் தொடங்கி கி.பி. 900 வரை நீடித்த நாகரீகம் அது. மாயன்கள் அமெரிக்க செவ்விந்திய இனத்தைச் சேர்ந்தவர்கள். கணிதம், வானவியல், மருத்துவம் என மாயன்கள் கைவைக்காத துறையே இல்லை எனலாம். பெரும்பாலும் தனித்தனி ஊர்களில் வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு ஊருக்கும் தனியாக பிரத்யேகமான ஒரு ஆடைவகை இருக்கும். அவர் அந்த ஊரின் ஆடைகளையே அணிய வேண்டும். மற்றைய ஊரின் ஆடைகளை அணிந்தால் சோலி முடிந்தது. ஒட்டுமொத்த கிராமமும் கேலி செய்யும், கிண்டலடிக்கும்.
மாயன்கள் இயல்பிலேயே அதிக பயம் கொண்டவர்கள். அதனாலேயே அதிகக் கடவுள்களை வழிபட்டவர்கள்.
ஆண்களின் உடை எளிமையானது. சுமார் ஒன்றிலிருந்து, இரண்டடி வரையுள்ள துணிகளை நீள் செவ்வகமாக வெட்டி பின்னர் முதல் பகுதியை….. ஏன் இழுத்துக்கொண்டு நம்ம ஊர் கோவணம் அவ்வளவுதான். ஆனால் பெண்களின் உடைகளில் தனி கவனம் செலுத்தப்பட்டது( அன்றிலிருந்தே!!). கீழாடை, மேலாடை, கழுத்தைச்சுற்றி அணியும் துணிகள், அதில் பல வண்ணங்கள் என அமர்க்களப்பட்டிருக்கிறது மாயர்களின் துணி வியாபாரம். துணிகளில் மயில், குயில் என எம்ப்ராய்டரி போடுவதெல்லாம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது!!

மாயன்கள் இயல்பிலேயே அதிக பயம் கொண்டவர்கள். அதனாலேயே அதிகக் கடவுள்களை வழிபட்டவர்கள். சோளத்திற்கு ஒருவர், அரிசிக்கென்று ஒருவர், க.பருப்பிற்கு, உ.பருப்பிற்கு என கடவுள்களின் பட்டியல் நீளம்.
சாக்லேட் நாணயம்
கவுதமாலாவில் இருக்கும் ஒரு பிரமிடின் அருகில் சந்தை ஒன்று செயல்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் வியாபாரம் பண்டமாற்றத்தின் மூலமாக ஆரம்பத்தில் நடந்தது. பின்னாளில் எல்லா வியாபாரமும் புகையிலை, சோளம், ஆடைகளில் நடந்தன. சுருக்கமாகச் சொல்வதென்றால் எது சீக்கிரத்தில் கிடைக்காதோ அவையெல்லாம் நாணயத்தின் அந்தஸ்த்தில் இருந்தன. எல்லாம் சாக்லேட் வரும் வரை தான்.

பிற்கால மாயன்கள் அதிகளவில் சாக்லேட்டை நாணயமாக பயன்படுத்தியது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இன்றைய மெக்ஸிகோவின் தாழ் நிலங்களில் செராமிக்கில் (Ceramic) வடிக்கப்பட்ட பல ஓவியங்கள் கிடைத்திருக்கின்றன. விற்பனை மற்றும் நாணயம் தயாரித்தல் போன்ற ஓவியங்களில் அதிக அளவு சாக்லேட் பற்றிய செய்திகள் இருக்கின்றன. முதன் முதலில் அந்த படிவங்களின் மீது டார்ச் அடித்து கண்டுபிடித்தது புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜானி பாரோன்(Joanne Baron) தான். 180 வகையான செராமிக் படிவங்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் பூதக்கண்ணாடி போட்டு ஆராய்ந்ததில் சாக்லேட்டின் மூலப்பொருளான கோகோ விதைகள் மன்னருக்கு மாமூலாக கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மாயன்கள் கோகோ விதைகளை அரைத்து ஒருவகையான சூடான பானம் தயாரிக்கக் கற்றிருந்தனர் என சத்தியம் செய்கிறார் பாரோன். இப்போது நாம் குடிக்கும் காப்பியின் கொள்ளுத்தாத்தா அவை. அவற்றில் இனிப்பு இருக்காது. மணத்திற்காகவே கோப்பை கோப்பையாக குடித்துத் தள்ளியிருக்கின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கோகோ மரங்கள் மத்திய அமெரிக்காவில் அதிகம் விழைந்ததில்லை. இருப்பு குறைவு, தேவை அதிகம் என்ன நடக்கும்? பொருளின் மதிப்பு ஜிவ்வென்று ஏறிக்கொண்டது. மாயன்களால் கொண்டாடப்பட்ட அதே சாக்லேட் தான் பின்னாளில் அவர்களின் முடிவுரையை எழுதவும் காரணமாயிருந்தது.
காடுகளை அழித்து வசிப்பிடம் ஆக்கிக் கொண்டதனால் காட்டு விலங்குகள் தாக்கி பலபேர் இறந்திருக்கக்கூடும் என வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
1502 ஆம் ஆண்டு அந்த வழியாக போய்க்கொண்டிருந்தார் கொலம்பஸ். ஆமாம் நம்ம கிறிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus) தான். கடற்கரை ஓரத்தில் நின்ற படகில் குவிந்து கிடந்த கோகோ விதைகளைப் பார்த்தார். எடுத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். ஸ்பெயின் திரும்பியவுடன் அவ்விதைகளை பானமாக அரைத்து அரசர்க்கு கொடுக்கவே ருசியில் கிறங்கிப்போனார் மாமன்னர். விளைவு? கடல் போன்ற ஸ்பானிஷ் படை மாயன்களின் மீது படையெடுத்து வந்து அந்நாகரீகத்திற்கு மங்களம் பாடிவிட்டு சென்றது. போகிற போக்கில் கோகோவை மூட்டை மூட்டையாக அள்ளிச்சென்றனர் ஸ்பானிஷ் வீரர்கள். வந்தது அதற்குத்தானே?? மாயன்களின் அழிவிற்கு மற்றுமொரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது அவர்கள் பெருமளவு காடுகளை அழித்தது ஆகும். காடுகளை அழித்து வசிப்பிடம் ஆக்கிக்கொண்டதனால் காட்டு விலங்குகள் தாக்கி பலபேர் இறந்திருக்கக்கூடும் என வல்லுநர்கள் கணிக்கிறார்கள். இயற்கையை அழிப்பவர்களை இயற்கையும் ஒருநாள் நிச்சயம் அழிக்கும் என்பதற்குச் சான்று மாயன்களே. எனவே நாமும் இயற்கையைக் காப்போம். எதற்கு வம்பு?