கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு இதுதான்!!

0
228
christmas
Credit: Wikipedia

கல்வாரிக் குன்றிலே, கழு மரத்திலே, வானகத்திற்கும் வையகத்திற்கும் நடுவே,  சாவை பரிசாகப் பெற்றாலும் இரட்சணியத்தை இந்த உலகத்திற்குத் தந்த ஏசுபெருமானின் பிறந்தநாளே கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அன்பின் பேரூற்றைத் தன் கருணையால் திறந்த ஓர் உலகத்துக் குடிமகனின் வரலாற்று வாழ்க்கையை நினைவு கூறும் விதமாகவே இப்பண்டிகை பார்க்கப்படுகிறது.

வீட்டையும், கிறிஸ்துமஸ் மரத்தையும் அலங்கரித்து, புத்தாடை உடுத்தி, வாசலில் நட்சத்திர மின் விளக்குகளைத் தொங்கவிட்டு, சர்ச்சுக்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவந்து நிம்மதியாக கிறிஸ்துமஸ் நாளை கழித்தாலும், கிறிஸ்துமஸ் தாத்தா வருகைக்காக புத்தாடை கலையாமல் காத்திருக்கும் குழந்தைச் செல்வங்களைக் கண்டால் சற்று வருத்தமாகத்தான் இருக்கும். அதுவே அவர்கள் வாயைத் திறந்து கேட்க ஆரம்பித்தார்கள் என்றால் தொலைந்தது கிறிஸ்துமஸ். தந்தையால் என்னென்ன வாங்கித்தர முடியாதோ அத்தனையும் சான்டா கிளாஸ் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் வைத்துவிட்டுப் போவார் என்று நம்பியே ஏமாந்த குழந்தைகளும் உண்டு. அவருக்கே கிஃப்ட் வைத்த வீடுகளும் உண்டு. சரி, இந்தக் கிறிஸ்துமஸ் பண்டிகை, கிறிஸ்துமஸ் மரம், பரிசுக் கலாச்சாரம் இதெல்லாம் எப்போது தோன்றியது என்று பார்க்கலாமா?
xmas

ஏன் டிசம்பர் 25?

முன்னொரு காலத்தில் ரோம் நகரத்தைச் சார்ந்த பாகன் இன மக்கள் “சதுர்னாலியா” (saturnalia) என்னும் அறுபடை பெருந்திருவிழாவைக் கொண்டாடி வந்தனர். ஒருவார காலத் திருவிழாவானது டிசம்பர்   25 ல் முடிவடையும் வரை எந்தவித குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவதில்லை. அப்பொழுது அந்நகரைக் கைப்பற்றிய கிறித்துவ பிரச்சாரகர்கள் இயேசுவின் பிறந்த நாளோடு சேர்த்து சதுர்னாலியா திருவிழாவை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாட பாகன் இன மக்களுக்கு அனுமதி அளித்தனர். அடிப்படை ரீதியாக இயேசுவின் பிறந்த நாளை டிசம்பர் 25 என்று கூற எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஆனால் 1889 – ஆம் ஆண்டு வாழ்ந்த பாதிரியார் “லூயிஸ் து செஸ்னே” என்பவர் பின்வருமாறு கூறுகிறார் . “மார்ச் 25 ல் தான் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் அறிகுறிகள் வானில் தென்பட்டது என்றும், அதிலிருந்து 9 வது மாதம் டிசம்பர் ஆகையால் அதுவே இயேசுவின் பிறந்தநாள்“ என்கிறார். இதையே பல கிறித்து ஆராய்ச்சியாளர்கள் சில குறிப்புடன் அடித்துச் சத்தியம் செய்கின்றனர். இயேசு கிறிஸ்து பிறந்தபின்  முதன்முதலில் கிறிஸ்துமஸ் தினம் கிபி 336 ல் தான் கொண்டாடப்பட்டது. அதுவும் இப்போது போல கொண்டாட்டங்கள் எல்லாம் இல்லை. இந்தக் கொண்டாட்டங்கள்  எல்லாம் முதலில் இத்தாலியில் தான் ஆரம்பமானது.

christmas_TREE
Credit: NDTV

அறிந்து தெளிக!!
“Christmas என்பது கிரேக்க மக்களால் Xmas என்றானது.  X என்றால் கிறிஸ்து என்று பொருள்.

கிறிஸ்துமஸ் மரம்

கிபி 336 ல் தான் கிறிஸ்துமஸ் தினம் முதலில் கடைபிடிக்கப்பட்டாலும், கிபி 1510 வரை கிறிஸ்துமஸ் மரத்தின் விதை அக்கொண்டாட்டத்தில் விதைக்கப்பட்டிருக்கவில்லை. கிறித்துவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட பாகன் மக்கள் வனத்தை வணங்கியமையால் காடுகளில் இருக்கும் பைன் அல்லது ஓக் மர வகைகளை எடுத்து வந்து ஊரில் வைத்து வழிபட்டனர். அம்மரம் கிடைக்காத மக்கள் பிரமிடு வடிவில் மரம் ஒன்றைச் செய்து அதனை மலராலும் பழங்களாலும் அலங்கரித்து வந்தனர். ஜெர்மனியிலிருந்து தான் அம்மரத்தை வீட்டுக்குள் கொண்டுவரும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் வைத்த பெயர் பிரமிட் ட்ரீ அல்லது பாரடைஸ் ட்ரீ. நம்மூரிலெல்லாம் பிளாஸ்டிக் ட்ரீதான்!

அறிந்து தெளிக!!
கிறிஸ்துமஸ் மரத்தை விளக்குகளால் அலங்கரிக்கும் வழக்கமானது தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் மூலம் தான் ஏற்பட்டது என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. எடிசனின் மாபெரும் கண்டுபிடிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காக அம்மரத்தைச் சுற்றி மின்விளக்குகளை எரியவிட்டராம் அந்த நண்பர்.

சான்டா கிளாஸ்

காந்தி தாத்தா, இந்தியன் தாத்தாக்கள் வழியில் நமக்கு எக்காலமும் மறக்காத தாத்தா கிறிஸ்துமஸ் தாத்தா. சிவப்பு மற்றும் வெள்ளை கலந்த உடை. உடலில் சிறிய  நட்சத்திரங்கள். உடனே இவர் பழமையான சீன கம்யூனிஸ்ட் என்று நினைத்துவிட வேண்டாம். குழந்தைகளுக்கு உண்மையாகவே ரகசியமாக பரிசளித்து வந்த இவர்தான் தற்கால ஷாப்பிங் மால்களின் தந்தை.  துருக்கி நாட்டில் வாழ்ந்த துறவி செயிண்ட் நிக்கோலஸ் தான் இந்த சான்டா கிளாஸ்.  வாழ்க்கை முழுவதும் அன்புடன் பிறரை அரவணைத்து வந்த இவர் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட இருந்த பல பெண்களை அவர்கள் உறவினர்களிடம் இருந்து காப்பாற்றியுள்ளார். இவரிடம் அனைத்து விதமான விளையாட்டு பொருட்கள், பரிசுப் பொருட்கள் இருக்கும் எனச் சொல்லியே ஒல்லியாக இருந்த இவரை பொம்மை நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய குண்டான விளம்பர மாடலாக்கினர். நல்ல குழந்தைகளுக்கு மட்டும் இவர் பரிசுகளை விட்டுச் செல்வாராம். சேட்டை செய்யும் குழந்தைகளுக்கு கரித்துண்டை வைத்துவிட்டு செல்வாராம்  இந்த குண்டுத் தாத்தா. குழந்தைகள் என்றாலே நல்லவை தானே.

christmas
Credit: How Stuff Works
அறிந்து தெளிக!!
சாண்டா கிளாஸ் தாத்தாவிற்கு முதன்முதலில் சிவப்பு வண்ண உடை அணிவித்த பெருமை கொகொ கோலா நிறுவனத்தையே சேரும்.

இருப்பவற்றை பிறருக்கு மனமுவந்து கொடுத்தால்  நீங்களும் ஒரு சான்டா கிளாஸ்தான். இரவுபோல் வாழ்வில் வருகின்ற துன்பமெல்லாம் ஒளியாய் வருகிற இறைவனால் விலக்கப்படட்டும்.  இந்த கிறிஸ்துமஸ் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியை பொங்கச் செய்யட்டும். அனைவருக்கும் எழுத்தாணியின் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.