2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அதிசயத் தீவு

Date:

மனிதர்களை விட அசாத்தியத் திறமை, பலம், அன்பு, பண்பு என அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பிய மனிதர்கள் ஒரு மர்மத்தீவில் வசிப்பதாக வெகுகாலமாக உலகின் பாதி மக்களால் நம்பப்படுகிறது. இன்றைக்கு இருக்கும் ஆசியா மற்றும் லிபியாவின் பரப்பளவில் அந்தத் தீவு இருக்கும் எனவும் பலர் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்திருக்கிறார்கள். பெயரைச் சொல்கிறேன், உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா ? என்று பார்ப்போம். 2400 ஆண்டுகளாகத் தேடப்படும் அந்தத் தீவின் பெயர் அட்லாண்டிஸ் (Atlantis). ஏதாவது? ம்ஹூம்!! சரி விடுங்கள். இவ்வளவு எதிர்பார்ப்பைக் கிளப்பிய இடம் வரலாற்றில் வேறில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்திலும் ஏன் இந்த ஒற்றைத் தீவைக் கண்டுபிடிக்க முடியவில்லை?

atlantis mystery island
Credit: Live Science

தத்துவ ஞானி கிளப்பிய சர்ச்சை

ஏனென்றால் அந்தத்தீவு அமைந்திருப்பதாகச் சொல்லும் இடம் அல்லது இடங்கள் பூகோள வரைபடத்திலேயே இல்லை. எனில் எப்படி இத்தீவைப் பற்றிய தகவல்கள் வெளியுலகத்திற்குத் தெரிந்திருக்கும்? முதன் முதலில் இந்த சர்ச்சையைக் கிளப்பியவரிடம் தான் அதற்கான விடை இருக்கவேண்டும். அவர் வேறு யாரும் இல்லர் நம் பிளேட்டோ தான். சாக்ரடீஸின் தலைமை சீடர்களில் ஒருவரான பிளேட்டோ இத்தீவினைப் பற்றிய குறிப்பினை எழுதியிருக்கிறார். கிமு 360 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஒரு குறிப்பு இப்படிச் சொல்கிறது,”மிகச்சிறந்த சமுதாயக் கட்டமைப்பினைக் கொண்டிருந்த இந்த நகரம் அளவிட முடியா கனிம வளத்தையும், நிகரில்லா ராணுவத்தையும், அதிநுட்ப தொழில் வளர்ச்சியையும் பெற்றிருந்தது. 9000 வருடத்திற்கு முன்னர் திடீரென கடவுள் இந்த நகரத்தை அழித்துவிட்டார்”.

கதைகள்

இதில் பெரிய சிக்கல் இதுதான். பிளேட்டோ இந்தத் தீவினைப் பற்றி அக்குவேராகப் பிரித்து மேய்ந்திருக்கிறார். மண், விவசாயம், நீர்நிலை, வாழ்க்கைமுறை, பண்டிகைகள் என எதையும் விடவில்லை. அவருடைய வார்த்தைகளில் உள்ள இந்த உறுதிதான் இன்றுவரை பல ஆராய்ச்சியாளர்களைக் குழப்பிக்கொண்டு இருக்கிறது.

அட்லாண்டிஸ் தீவு பற்றி ஆண்டுதோறும் புதிய புத்தகங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பிளேட்டோ விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து பல தகவல்கள், கதைகள் அட்லாண்டிஸ் தீவின் பெயரில் வரவு வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த மர்மத்தீவினைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பி ஆர்ப்பரிக்கும். ஆனால் அவை அனைத்தும் கர்ண பரம்பரைக் கதைகளே.

Plato_Aristotle
Credit: Wikipedia

அமைவிடம்

இந்தத் தீவின் இருப்பிடமாகப் பிளேட்டோ குறிப்பிடுவது ஜிப்ரால்டர் ஜலசந்திக்கு அருகே ஹெர்குலிஸ் தூண்களுக்கு வெகுதொலைவில் இருப்பதாகத்தான். ஆனால் அந்தப் பகுதியில் அட்லாண்டிக் கடலைத் தவிர வேறொன்றும் இல்லை. ஒருசிலர் வைகிங்குகளின் இடத்தில் தான் (நார்வே நாட்டிற்கு அருகே) அட்லாண்டிஸ் இருந்ததாகவும் பின்னர் அந்த இனம் அழிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இன்னும் சிலர் கருங்கடல் பகுதியில் இருக்கிறதென்கிறார்கள். இவை எவற்றுக்கும் சான்று இல்லை.

பிளேட்டோ சொன்னதைத்தவிர எந்த ஆசாமியிடமும் ஒரு உருப்படியான தகவல்களும் இல்லை என்பதே நிர்வாணமான உண்மை. அதெல்லாம் சரி, பிளேட்டோவே அட்லாண்டிஸ் தீவைப் பார்த்ததில்லை. அவருடைய காலத்திற்கு முன் இருந்ததாகத்தான் குறிப்பிடுகிறார். அதாவது கிரேக்க கடவுள் கதைகளில் இந்த அட்லாண்டிஸ் இருக்கிறதென்றால் எவ்வளவு தூரம் பழையது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கிரேக்க கதைகளில் வரும் அட்லாண்டிஸ்
கிரேக்கக் கடல் கடவுளான பொசைடன் தீவில் வசிக்கும் க்ளெய்டோ என்ற அழகியிடம் காதல் வயப்படுகிறார். மாலை மாறுகிறது. இருவருக்கும் பத்துக் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடன் ஒரு சந்தேகப் பேர்வழி. க்ளெய்டோவைக் கூட நம்பாமல் அந்த இடத்தில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு அகழிகள் அமைத்து அந்தத் தீவை நகரமாக்கி விடுகிறார். அந்த அட்லஸ் ஆட்சிக்கு வந்து பின்னர் அந்நகரம் அட்லாண்டிஸ் என மாறியது ……

இலக்கியச் சுவைக்கத்தான் பிளேட்டோ இந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார் என எல்லா சாட்சியங்களும் தெரிவித்தாலும் அட்லாண்டிக் கடலின் ஓரத்தில் சிறு செங்கற்கள் கிடந்தாலும் அட்லாண்டிசைக் கண்டுபிடித்துவிட்டதாகத் துள்ளிக் குதிக்கும் மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிளேட்டோ மறுபடியும் பிறந்து வந்து இந்தத் தீவு குறித்துப் பேசினால் ஒழிய இந்த சர்ச்சை தீராது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!