காதலின் ஒருவித வெளிப்பாடான முத்தம் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. பொதுவாய் முத்தம் என்பதே பிரத்யேகத் தொடுகை. அதிலும் உதட்டு முத்தம் இன்னமும் வசீகரமானவை. காரணம் விரலின் நுனிகளைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக உணர்ச்சிகரமானவை உதட்டின் இதழ்கள். உடனடி முத்தத்தின் போது சராசரியாக இரண்டு தசைகள் இயக்கம் கொள்ளும். ஆழ முத்தமிடும் போது 34 முகத்தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. குறிப்பாய் உதட்டிலிருக்கும் ஆர்பிக்யூலரிஸ் ஓரிஸ் தசை. இதை முத்தமிடும் தசை என்று சொல்கிறார்கள். சிலருக்கு முத்தமிடுதல் பிடிப்பதில்லை. அவர்களை philemaphobia என்னும் நோய் பீடித்திருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். முத்தத்தைப் பார்த்து பயப்படும் நோய் தான் philemaphobia.

உதட்டு முத்தம் மனிதர்களின் கண்டுபிடிப்பல்ல. அணில்கள், சிம்பன்சி குரங்குகள் போன்றவை இப்படி முத்தமிட்டுக்கொள்ளும். முத்தத்தின் அறிவியல் பெயர் cataglottism ஆகும்.
மனிதர்களிடையே உதட்டு முத்தம் ஆரம்பமானது நம் இந்தியாவில் தான். வேதங்களில் உதட்டு முத்தம் பற்றி சொல்லப்படுகிறது. கிபி 1000 ஆம் ஆண்டு வாக்கில் உண்டாக்கப்பட்ட கஜுராஹோ சித்ரகுப்தா கோவிலில் ஆணும் பெண்ணும் உதட்டில் முத்தமிட்டுக் கொள்ளும் சிற்பம் இருக்கிறது. பிற்பாடு கிமு 326ல் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த போது கிரேக்கர்கள் நம்மிடமிருந்து உதட்டு முத்தம் பற்றிக் கற்றுக் கொண்டார்கள். பல நூற்றாண்டுகளாக நம் தேசம் முழுக்க வாய்மொழிக் கதையாக இருந்து கிபி350 ல் எழுத்து வடிவம் பெற்ற மகாபாரதத்தில் உதட்டு முத்தம் காதலின் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பின் 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாத்ஸாயனரின் காமசூத்ரா 30 வகை உதட்டு முத்தங்களை விவரிக்கிறது
முத்தத்தின் வகைகள்
ரோமானிய சாம்ராஜ்யத்தில் மூவகை முத்தம் மிகப்பிரபலமாக இருந்திருக்கிறது. முதல் வகை ஆஸ்குலம் – சாதாரணமாக கன்னத்தில் முத்தமிடுவது. இரண்டாம் வகை பேஸியம் – உதட்டில் ஒரு முறை ஒற்றி எடுப்பது. மூன்றாவது வகையான சேவோலியம் தான் நாக்கு வரை நீளும் நீடிக்கும் அசல் ஃபிரெஞ்ச் முத்தமாகும். இந்த மூன்றாம் வகை முத்தத்தை உற்றார் உறவினர் நண்பர்கள் முன்னிலையில் கொடுத்துத் தான் ஆணும் பெண்ணும் திருமணம் செய்ததை அறிவிப்பது வழக்கம்.
உலக முத்தங்கள்
கிபி 300ல் ரோமில் கணவர்கள் வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய பின் மனைவியரை உதட்டில் முத்தமிடுவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். அது காதலின் பொருட்டன்று; மது அருந்தியிருக்கின்றனரா? என அறியும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

1590 களில் ஷேக்ஸ்பியரின் ரோமியோ – ஜூலியட் நாடகம் மேடையேற்றப்பட்ட போது ரோமியோ ஓர் உதட்டு முத்தத்துடன் இறந்து போவதாக இருந்த காட்சி நிகழ்த்தப்பட்டது. 1763ல் முத்தத்தை XOXO என்று எழுதும் முறை அறிமுகமானது.
1784 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களில் ஜார்ஜியானா என்ற அரசகுடிப் பெண் தேர்தலில் போட்டியிட்ட நண்பருக்கு ஆதர’வாய்’ப் பிரச்சாரம் போய் ஆட்களுக்கு லஞ்ச உதட்டு முத்தம் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது – “kisses for votes” scandal!
சீனர்கள் ஃபிரெஞ்ச் முத்தம் ஆபாசமானது என எண்ணுகின்றனர். பொதுவிடத்தில் அதை நிகழ்த்துவது பெரும் அசிங்கமாகக் கருதப்படுகிறது. பப்புவா நியூ கினியா மக்கள் யாராவது உதட்டு முத்தமிடுவதைப் பார்த்து விட்டால் பெரும் சிரிப்புடன் குலவையிடுகின்றனர். பாலித்தீவு மக்கள் உதட்டு முத்தம் இட்டுக்கொள்வதில்லை; பதிலாக ஆணும் பெண்ணும் முகங்களை தம் நெருக்கமாக வைத்துக் கொண்டு முகர்ந்து பார்த்து, தேக வெம்மையை உணர்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.
ஃபிரெஞ்ச் கிஸ்
உதட்டு முத்தத்திற்கு ஏன் ஃபிரெஞ்ச் முத்தம் என்று பெயர் வந்தது? ஃபிரான்ஸுடன் காலனியாதிக்கப் போட்டி உச்சத்தில் இருந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டினர் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இந்தச் சொல்லை உருவாக்கினார்கள். ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரை உதட்டில் முத்தம் தருவது இங்கிதமற்ற செயல். அதனால் அதனை தங்கள் வைரிகளின் பெயரால் கிண்டலாக ஃபிரெஞ்ச் கிஸ் என்று சொன்னார்கள். 1923ல் இச்சொல் பரவலாய்ப் புழங்கத் தொடங்கியது.
2012ல் காதலர் தினத்தின் போது தொடர்ந்து 50 மணி நேரம் 25 நிமிடம் 1 வினாடி தாய்லாந்தைச் சேர்ந்த நொந்தவாட் சரோன்கேஸொர்ன்ஸின் மற்றும் தனகோர்ன் சித்தியம்தாங் என்ற ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்தது.
இந்த சாதனையை அடுத்த ஆண்டு (2013) முறியடித்தார்கள் Ekkachai – Laksana Tiranarat இணை. 58 மணிநேரம், 35 நிமிடம் 58 வினாடிகள் நீடித்தது இந்த முத்தம். தற்போதுவரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. பின்குறிப்பு: இந்த ஜோடியும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களே.
முத்தத்தின் நன்மைகள்
ஒரு நிமிடம் நீடிக்கும் முத்தம் 26 கலோரிகளை எரிக்க வல்லது. சராசரி வாழ்நாளை விட தினமும் முத்தமிடுவோர் கூடுதலாக 5 வருடங்கள் வாழலாம். முத்தமிடுவதால் மன அழுத்தம் குறைந்து ஆண் பெண் உறவுகளில் திருப்தியும் நிம்மதியும் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடம்பின் கொலஸ்ட்ரால் குறைவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். முத்தமிடும் போது அதீத அட்ரினலின் சுரப்பால் இதயம் வேகமாகத் துடிக்கிறது (நிமிடத்திற்கு 100 வரை). உடற்பயிற்சிக்கு சமானமாய் இது உடம்புக்கு நன்மை பயக்கிறது.

முத்தம் தொடர்பாய் மருத்துவ ஆராய்ச்சிகள் புரிந்த மார்ட்டின் மூரியர் என்பவர் உலக ஜனத்தொகையில் பாதிப்பேர் ஃபிரெஞ்ச் முத்தம் இடுவதாகக் குறிப்பிடுகிறார். மேலும் ஒரு மனிதன் தன் ஆயுளில் 2 வாரங்களை முத்தமிடுவதில் கழிக்கிறானாம்.
அனைவருக்கும் உலக முத்த தின வாழ்த்துக்கள்.