காந்தியடிகள் தன் வாழ்நாள் முழுவதும் கடிதத்தின் மூலமே பல தலைவர்களோடு உரையாடல் நடத்தியிருக்கிறார். உலகமெங்கிலும் அதிகளவில் கவனம் பெற்றிருக்கிற காந்தியின் கொள்கைகளைப் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்கள் மிக அவசியம். சமீபத்தில் காந்தி நூல் நூற்கும் ராட்டையைப் பற்றி எழுதிய கடிதம் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்தது. தொழிலதிபர் ஒருவரால் 4.62 லட்சத்திற்கு அக்கடிதம் வாங்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஏலம்
அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தைச் சேர்ந்த ஆர்.ஆர். ஏல நிறுவனம் சமீபத்தில் காந்தியின் கடிதத்தினை ஏலம் விட இருப்பதாக அறிவித்தது. காந்தி, குஜராத்தி மொழியில் இக்கடிதத்தை எழுதியிருக்கிறார். பாபுவின் ஆசீர்வாதங்கள் என்று காந்தி கையெழுத்திட்ட இக்கடிதம் யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஏலத்தில் தொழிலதிபர் ஒருவரால் 4.62 லட்சத்திற்கு வாங்கபட்டதாக ஆர்.ஆர். ஏல நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராட்டையின் பயன்கள் குறித்து அக்கடிதத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார் காந்தி. “நூற்பாலைகள் குறித்து நாம் என்ன நினைத்தோமோ அது தான் நடந்துள்ளது. இருந்தபோதும் நீங்கள் கூறியது தான் சரி. அனைத்துமே தறிகளை நம்பியே உள்ளது. கை ராட்டை முக்கியமானது” என்று காந்தி அதில் எழுதியிருக்கிறார்.
காந்தியின் கடிதம்
காந்தியத்தைப் புரிந்துகொள்ள நம்மிடம் உள்ள வழி காந்தியின் எழுத்துக்கள் மட்டுமே. ஏனெனில், காந்தி தன்னுடைய கொள்கைகள் என்றோ, சித்தாந்தம் என்பதாகவோ எதையும் வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை. அவரைப் பொறுத்தவரை தன்னளவில் சரியெனப்படும் கருத்துக்களை நடைமுடைப்படுத்தும் நபராகவே இருந்திருக்கிறார். அதனால் தான் என் வாழ்க்கையே என் செய்தி எனச் சொல்லும் தைரியம் அவரிடத்தில் இருந்தது.

இந்தியாவின் அரசியல் சூழ்நிலைகள் அனலடித்த காலத்திலும் காந்தி தகவல் பரிமாற்றத்திற்கு கடிதங்களையே பயன்படுத்தினார். வாழ்க்கை முழுவதும் காந்தி எழுதிய அனைத்தும் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. மொத்தம் 90 பகுதிகளாக இன்று வரை அப்புத்தகங்கள் பதிப்பில் உள்ளன.