நீ இல்லையென்றால் நான் இல்லை என்று காதலிக்கும் ஆசாமிகள் மணிக்கணக்கில் பேசும் வசங்களைக் கேட்டிருக்கிறோம். லைலா – மஜ்னு, அம்பிகாவதி – அமராவதி, சலீம் – அனார்கலி என காவியக் காதலர்களின் பட்டியல் மிக நீளம். அந்த வரிசையில் இணைந்திருக்கிறது அடுத்த ஜோடி. இங்கே அல்ல, இங்கிலாந்தில். ஹால்லடன் (Hallaton) என்னும் கிராமம் இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த நான்கு வருட காலமாக அங்கு லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள்துறை ஆராய்ச்சியாளர்கள் (ULAS – University of Leicester Archaeological Services) ஹால்லடன் கிராமத்தில் தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு
வருகிறது. இதுவரை 11 எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு வினோத எலும்புக்கூடு ஜோடியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கைகோர்த்திருக்கும் காதலர்கள்
சுமார் 700 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதில் ஒன்று 46 வயது ஆணின் எலும்புக்கூடும், 20 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் எலும்புக்கூடும் கையைக் கோர்த்தவண்ணம் இருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்திருக்கிறார்கள். இக்கல்லறைகளுக்குப் பக்கத்தில் தேவாலயம் இருந்ததும் தெரியவந்திருக்கிறது. எல்லா எலும்புக்கூடுகளும் தனித்தனியே புதைக்கப்பட்டிருக்கும் போது இந்த இரண்டு எலும்புக்கூடு மட்டும் ஜோடியாகப் புதைக்க தேவாலயம் எப்படி ஒத்துக்கொண்டது என்பது புதிராகவே உள்ளது.

பயங்கரத்தின் உச்சம்
ஆணின் உடல் வித்தியாசமான முறையில் புதைக்கப்பட்டிருக்கிறது. மேலும், தலையில் வெட்டுக்காயம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. கோடரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவு. இதில் கோரம் பெண்ணின் தலையிலும் இதேபோல் காயத்தின் சுவடு இருப்பதுதான். அதனால் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

காதல் பரிசு
பழங்கால கிருத்துவ மரபுகளுக்கு எதிராக ஆணும் பெண்ணும் புதைக்கப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இரு உடலிலும் ஒரேபோன்ற காயங்கள் ஏற்பட்டிருப்பதால் இருவரும் ஒரே சமயத்தில் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இக்கொலைக்கான காரணமாக அவர்கள் சொல்வது காதல் தான். பழங்கால வரலாறுகளை உற்றுநோக்கும் போது காதலைத்தவிர வெறெந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை ஏற்றுக்கொண்ட ஐரோப்பியாவில் பொருளாதார நிலைமைகளின் மூலமாக காதலை நிராகரித்தல் இருந்திருக்கிறது. ஆனாலும் கையினை கோர்த்திருக்கும் காதலர்களைப் பார்க்கும் போது காதலின் வலிமை கண்கூடாகத் தெரிகிறது.