குஜராத் மாநிலத்தில் இருக்கிறது கட்ச் மாவட்டம். கடந்த இரண்டு மாத காலமாக இந்த மாவட்டத்தின் லாக்பாத் தாலுகாவில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது. கட்ச் பல்கலைக்கழகமும், கேரள பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன.

பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, 4,600 – 5,200 ஆண்டு பழைமையான கல்லறைகள் கிடைத்துள்ளன. கைப்பற்றிய எழும்புக்கூடுகளை கேரளாவிற்கு அனுப்பிருக்கிறது ஆய்வுக்குழு.
ஹரப்பா
ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி அந்த இடம் ஹரப்பா நாகரீகம் உச்சத்தில் இருந்த போது சிறப்பாக இருந்திருக்கலாம். இங்கு இதேபோல் 260 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்லறைகள் ஆக்கிரமித்திருக்கும் மொத்த பகுதி 300 சதுர மீட்டர்கள் ஆகும். இங்கு கைப்பற்றப்பட்டதிலேயே நீளமான ஆறு அடி எழும்புக்கூடு மேற்கட்ட ஆராய்ச்சிக்காக கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முக்கோண கல்லறைகள்
குஜராத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகள் அனைத்துமே வட்ட அல்லது அரைவட்ட வடிவம் கொண்டவை. ஆனால் தற்போது கிடைத்திருப்பவை முக்கோண வடிவிலானது என்பதால் ஆராய்ச்சியாளர்கள் சற்றே குழப்பம் அடைந்துள்ளனர்.

கிழக்கு – மேற்கு திசையில் இந்த கல்லறைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அளவைப் பொறுத்தவரை 6.9 மீட்டர் நீளம் கொண்ட கல்லறை மிக நீண்டதாகவும், மிகக்குறைந்த நீளமுள்ள கல்லறை 1.2 மீட்டர்கள் ஆகும்.
மண்பானைகள்
ஒவ்வொரு கல்லறைக்குள்ளும் மண்பானைகளும் சேர்ந்தே புதைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஒரு கல்லறையில் 19 மண்பானை இருந்திருக்கிறது. குறைந்தபட்சம் மூன்று. அதேபோல் விலங்குகளுக்கும் தனித்தனி கல்லறைகளை எழுப்பியுள்ளனர் இந்தப் பெயர் தெரியாத முன்னோர்கள்.
இதே மாதிரியான மண்பாண்டங்கள் அம்ரி, நால், கோட் (பாகிஸ்தான்), நக்வாடா, சாட்ரத் சஹெளி மற்றும் வட குஜராத்தின் சில பகுதிகளில் கிடைத்துள்ளன.

புது வரலாறு
மண் பாண்டங்கள் செய்வதற்கு உபயோகித்த பொருட்கள், இந்த தொழில் ஈடுபட்டிருந்த மக்களின் வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்வதன் மூலம் ஹரப்பா பண்பாட்டின் சில மர்மங்களை உடைக்கலாம். மேலும், கல்லறைகளிலேயே மண்பாண்டம் சேர்த்து வைக்கப்பட்டிருப்பதால் அம்மக்களுடைய பிரதான தொழிலாகவும் மண்பாண்டம் செய்வது இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கேரளாவிற்கு அனுப்பப்பட்ட எழும்புக்கூட்டை ஆராய்வதன்மூலம் அவர்கள் வாழ்ந்த காலம், இறப்பு நிகழ்ந்த விதம் போன்ற தகவல்கள் தெரியவரலாம். இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் விடைகளுக்காக காத்திருப்பது மட்டும்தான்.