குளிர்காலம் வந்துவிட்டால் போதும் மூக்கைத்தவிர அனைத்து பிரதேசங்களையும் மொத்தமாக மூடிக்கொண்டால் மட்டுமே சிலரால் நிம்மதியாய் இருக்க முடியும். பனி போகிற போக்கில் கைகழுவிட்டுப் போகும் நம் நாட்டிலேயே இப்படியென்றால் ஐரோப்பிய நாடுகளைப் பற்றிப் பேசவே வேண்டாம். காலுறையே நான்கு ஜோடிகள் தேவைப்படும் அங்கே !! குளிரானது பரமாத்மா போல் எங்கும் வியாபித்திருக்கும் நகரங்களில் சில விசேஷ குளிர் தடுப்புப் பொருட்களை மக்கள் பயன்படுத்துவார்கள். அவற்றில் முதலானது பூட்ஸ் எனப்படும் நீண்ட சப்பாத்துக்கள். ஏனென்றால் பனிக்கால இரவுகள் சாலைகள் முழுவதையும் வெண்போர்வை கொண்டு மூடியிருக்கும். நம் ஊர் செருப்பெல்லாம் அங்கே அணிந்தால் முடிந்தது கதை. உடல்வெப்பம் கண்ணிமைக்கும் நேரத்தில் காணமல் போய்விடும் கலவர பூமிகளில் பாதங்களைக் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் எம்பெருமானின் பாதங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துவிடும். அது போகட்டும். பூட்ஸ் பற்றி சொன்னேன் அல்லவா?

பூட்சே புகழ்
பொதுவாக பூட்ஸ்கள் முழங்கால் அளவு வரை உயரம் கொண்டதாக இருக்கும். எல்லாம் பனியின் மீதுள்ள பயத்தினால் தான். ஆனால் இங்கிலாந்தில் இந்த பயத்திற்கு முன் காலத்தில் அந்தஸ்து என்னும் பெயர் இருந்திருக்கிறது. அதாவது பூட்ஸ்கள் அணிவது பெருமையான விஷயமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த சச்சரவு எப்போதும் உண்டு.
ஆடையின் வண்ணங்கள், வடிவமைப்பு, காலணிகள் ஆகியவை பிற நாடுகளில் உள்ளதைவிட சிறப்பாகச் செய்து அணிந்துவிடவேண்டும். இல்லையேல் மனிதப் பிறவி எடுத்ததே வீண் என நினைக்கும் பல மண்டைகள் அங்கே இருந்திருக்கின்றன. அப்படி ஒரு மண்டையைத் தான் கடந்தவாரம் லண்டன் நகரில் ஓடும் வரலாற்றுச் சிறப்புமிக்க தேம்ஸ் நதிக்கரையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். 500 வருடம் பழைமையான அந்த எழும்புக்கூடு பூட்ஸ் அணிந்திருப்பதைக் கண்ட ஆராய்ச்சியாளர்களின் புருவங்கள் நெற்றியையும் தாண்டி ஏறி இருக்கின்றன.
தேம்சும் பூட்சும்
தேம்ஸ் நதியில் கலக்கும் மழைநீரை சேமிக்க சுமார் 540 கோடி அமெரிக்க டாலர்கள் செலவில் பிரம்மாண்ட சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டுகொண்டு இருக்கிறது. அதற்கான வேலைகளின் போதுதான் பூட்ஸ் ஆசாமியின் எழும்புக்கூடு கிடைத்திருக்கிறது. அலுவலகத்தில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை அவசரமாக வரச்சொல்லி ஆய்வு செய்யுமாறு உள்ளூர் காவல்துறை கேட்டுகொண்டதால், பூதக்கண்ணாடி சகிதமாக ஆராய்ச்சியாளர்கள் குழு ஆற்றங்கரையில் இறங்கியிருக்கிறது.

அந்த பூட்ஸில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தோலானது மிகவும் விலைமதிப்பு மிக்கது என்பதால் இறந்துபோன ஆசாமி பெரும்புள்ளியாக இருந்திருக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால் 16 – ஆம் நூற்றாண்டில் தேம்ஸ் அவ்வளவு புகழ் வாய்ந்தது எல்லாம் கிடையாது. மீன்பிடித் தொழில் மட்டுமே அங்கு இருந்திருக்கிறது. அதனால் இறந்துபோனவர் மீனவரகத்தான் இருப்பார் என்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள்.
அந்த எழும்புக்கூடு மனிதன் அரசனா ஆண்டியா என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ஆனால் விலை மதிப்புள்ள பூட்ஸ் அதன் கால்களில் இருந்தது மட்டுமே உண்மை. அதேபோல் 16 – ஆம் நூற்றாண்டில் தேம்ஸ் நதிக்கரை ஆபத்தான இடமாக விளங்கியது என்ற கதையும் இருக்கிறது. அப்படிப்பட்ட இடத்திற்கு இந்த பிரகஸ்பதி ஏன் சென்றான் என்றும் கேள்விகள் எழுகின்றன. தற்போது இறந்துபோனவரின் எழும்புக்கூடுகள் சேகரிக்கப்பட்டு மரணம் குறித்த விவாதங்கள் அங்கே நடைபெற்று வருகின்றன.