இன்றைய நவீன யுகத்தில் நாம் பொருட்களையோ, சேவைகளையோ வாங்கும் போது, அந்தப் பொருள் அல்லது சேவை குறித்த நம் கருத்துகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குத் தெரிவித்து விடுகிறோம். புகார்கள் ஏதும் இருப்பினும் தயங்காமல் பதிவு செய்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் தற்போது வாடிக்கையாளர் சேவை மையங்களை இதற்காகவே வைத்திருக்கின்றனர்.
ஆனால், வணிக வளாகங்களும், அமேசான். பிளிப்கார்ட் ஆகியவையும் இல்லாத காலத்திலேயே ஒரு வாடிக்கையாளர் புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதுவும் மிகக் கோபமாக. அவர் அனுப்பியது ஏதோ 10 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு அல்ல கி.மு 1750-ல். தற்போது தெற்கு ஈராக்கின் ஒரு பகுதியாக இருக்கும், பழமையான நகரமான உர் (Ur) என்ற நகரில் தான் இந்தக் களிமண்ணில் செதுக்கப்பட்ட புகார்க்குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் வாடிக்கையாளர் புகார்க்கடிதமாகக் கருதப்படும் இது தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

சுமார் 4.5 இன்ச்சுகள் உயரமும், 2 இன்ச்சுகள் அகலமும் கொண்ட களிமண் கட்டியில் எழுதப்பட்ட இந்தப் புகார்க்கடிதம், கியூனிபோர்ம் (cuneiform) என்ற பழங்கால சுமேரிய எழுத்துகளில் எழுதப்பட்டது. நன்னி (Nanni) என்பவரால், நசீர் (Ea-nasir) என்பவருக்கு எழுதப்பட்ட இக்கடிதம், நன்னி தரமற்ற தாமிரத்தைப் பெற்றிருப்பதாகவும், இதைப் பற்றித் தெரிவித்து சரியான மாற்றைப் பெற முயன்ற போது நசீர் தொடர்ந்து அதை அலட்சியப் படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கிறது.
கியூனிபோர்ம் மொழியில் எழுதப்பட்ட இக்கடிதத்தை 1960-களில் லியோ ஒபென்ஹெய்ம் (A. Leo Oppenheim) என்பவர் மொழி பெயர்த்தார். அதைத் தன் புத்தகமான லெட்டர்ஸ் ஃபிரம் மெசபடோமியா வில் (Letters from Mesopotamia) வெளியிட்டார். லியோ மிகச்சிறந்த பண்டை மொழி ஆராய்ச்சியாளர் (Assyriologist) ஆவார்.
இது நாம் லியோவிற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரம். அவரால் தான் இன்று நன்னியின் புகார் பற்றியும், பிரச்சனை தீர்க்கப்படா விட்டால் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர் நசீருக்கு விடுத்த மிரட்டல் பற்றியும் நமக்குத் தெரிய வந்திருக்கிறது. சரி, அப்படி என்ன தான் பிராது நசீர் மீது என்று பார்ப்போம்.
சொல் நசீர், நன்னி எழுதுகிறேன். நீ என்னைச் சந்தித்த போது என் தூதரிடம் நல்ல தரமான தாமிரத்தைக் கொடுத்தனுப்புவதாகக் கூறினாய். ஆனால், நீ உன் வாக்கைக் காப்பாற்றவில்லை. நீ கொடுத்தனுப்பிய தாமிரம் மோசமானது. நீ அதைத் திருப்பி எடுத்துக் கொள்வதானால் எடுத்துக்கொள் இல்லையெனில் எப்படியோ போ. என்னை எப்படி நீ அவமதிக்கலாம் ? பல முறை எனக்குச் சேர வேண்டிய பணத்தை உன்னிடமிருந்து வாங்கி வரும்படி என் தூதர்களை அனுப்பி விட்டேன். ஆனால், நீ அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்புகிறாய். அவர்களைத் திருப்பி அனுப்பியதன் மூலம் நீ என்னைத் தான் அவமதித்தாய். உன் வாடிக்கையாளரை நீ இப்படித் தான் நடத்துவாயா? நீ சொல்லித் தான் நான் அரண்மனைக்கு 1080 பவுண்டுகள் தாமிரத்தைக் கொடுத்தேன். ஆனால், நீ என்னை அவமதித்து விட்டாய். இனி நான் உன்னிடம் இருந்து தாமிரங்களையும் பெறப் போவதில்லை. நீயும் என் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு. இனி நான் உனக்கு எதிராக இருப்பேன் ஏனினில் நீ என்னை அவமதித்து விட்டாய்.
நன்னியின் இந்தக் கடிதம், பண்டைய பாபிலோனியா மக்களின் வாழ்க்கை முறை, வர்த்தக முறை, நீதிமன்ற வழிமுறைகளை அறிந்து கொள்ள உதவுகிறது. இன்னும் ஆயிரமாயிரம் கற்கடிதங்கள் உர் நகரில் கிடைத்துள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் மெசபடோமியாவில் இருக்கும் எனத் தோன்றுகிறது.
ஆனால், நாம் நினைத்ததை விட நன்னி கோவக்காரர் போல. இருந்தாலும், நசீரும் இப்படிச் செய்திருக்கக் கூடாது.