பீர் என்றவுடன் பலருக்கு முகம் சட்டெனெ மலர்ந்து விடுகிறது. புதிய புதிய பெயர்களில் இன்று நாம் பார்க்கும் பீர்கள் எல்லாவற்றுக்கும் தாயகம் சுமேரியா தான். அன்று தொடங்கி பல ஆண்டுகளாய் குடிமகன்களின் வயிற்றில் பீர் வார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இஸ்ரேல் நாட்டிலிருக்கும் குகை ஒன்றில் பழங்காலத்தில் பீர் தயாரித்ததற்கான சான்று கிடைத்துள்ளதாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் (Stanford University) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். உலகின் முதல் பீர் தொழிற்சாலை இதுதானாம். சுமார் 13,000 வருடங்களுக்கு முன்னால் பீர் தயாரிக்கும் பணி இங்கு நடந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

பீர் கடவுள் !!
நீங்கள் படித்தது உண்மை தான். சுமேரியர்கள் பீர்களுக்கென்று தனியாகக் கடவுளையே வழிபட்டிருக்கின்றனர். பெண் கடவுளான நின்காசிக்குப் (Ninkasi) பீர்களைப் படைத்து வழிபாடெல்லாம் நடத்தியிருக்கிறார்கள் அந்த ஊர் குடிமகன்கள். அதன் பின்னால் வந்த பாபிலோனிய சாம்ராஜ்யத்திலும் பீரின் பெருமை நுரைத்துப் பொங்கியது.

அப்படிப் பரவியதுதான் இஸ்ரேல் வரையிலும் வந்து சேர்ந்திருக்கிறது பீர். திருவிழாக்கள், திருமணம் என அம்மக்கள் பீரைக் குடித்து காலி செய்திருக்கிறார்கள். புட்டிகள் காலியான வேகத்தில் பீரினைத் தயாரிக்க முடியாமல் போகவே, புதிய தயாரிக்கும் முறைகளைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.
விவசாயமே காரணம் !!
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் லீ லியு (Li Liu) பழைய ஜோர்டானில் விளைச்சல் அமோகமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அளவுக்கதிகமான தானிய விளைச்சல் பீர் உற்பத்தியைப் பெருக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
பார்லி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவை பீர் தயாரித்தலில் முக்கியப் பங்காற்றியுள்ளன. நுரைப்பதற்காக பிரெட்டைப் பயன்படுத்தியுள்ளனர். பீர் தயாரிப்பதற்காக இவர்கள் முதலில் தானியங்களைத் தண்ணீரில் ஊற வைப்பார்கள். பின்னர் வெளியே எடுத்து தானியங்கள் முளைகட்டும் வரை காத்திருப்பார்கள். அதன் பின் அதனை எடுத்து அரைத்து மாவாக்குவார்கள். கடைசியாக ஈஸ்ட்டுகளுக்காக பிரெட் சேர்க்கப்பட்டு காய்ச்சப்பட்டு வடிகட்டப்படும். அப்பறமென்ன, பீர் தயார். கொண்டாட வேண்டியதுதான்.