28.5 C
Chennai
Sunday, April 14, 2024

வீட்டிலேயே பிரசவம் – விபரீத விளையாட்டு !!

Date:

 • ஆங்கில மருத்துவ சதி, அமெரிக்க சதி போன்ற இத்தியாதிகளோடு கொஞ்சம் இலுமினாட்டி சதியையும் சேர்த்துக் கொண்டு நவீன மருத்துவமுறையை எதிர்த்தல் தற்போது பிரபலமாகி வருகிறது.
 • மருத்துவ வளர்ச்சிகள் வருவதற்கு முன்னர், இந்தியா முழுவதுமே மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே, இத்தகைய நிலையில் பின்தங்கியே இருந்தது என்பதே உண்மை.

நவீன அலோபதி மருத்துவமே தவறானது என்பது போலச் சித்தரித்துக் கொண்டு ஒரு தரப்பினர், குழந்தை பெற்றுக் கொள்வதும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வது, எப்படி வளர்ப்பது என்றெல்லாம் தீர்மானிப்பதும் தனிமனித சுதந்திரம் என பேசி வருகின்றனர்.

இவர்களின் கவர்ச்சிகரமான பேச்சுக்கு படித்த இளைஞர்களே பலியாகி விடுகிறார்கள் என்பது தான் வேதனை தரும் ஒன்று. சமீபமாக யூ-டியூப் காணொளியைப் பார்த்து பிரசவம் பார்க்க முயன்று உயிரிழந்த, திருப்பூர் பெண்ணைப் பற்றி நாம் இன்னும் மறக்கவில்லை. அதற்குள், வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆவதற்கு பயிற்சி வகுப்பு நடத்த முற்பட்டதற்காக ஹீலர் பாஸ்கர் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

201808021927576626 home birth training camp add Healer baskar arrested by kovai SECVPF
திரு. ஹீலர் பாஸ்கர் அவர்களின் விளம்பரம்

பிரசவம்: உலக அளவில் என்ன நிலை?

கடந்த 2018, பிப்ரவரி 16 அன்று உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில், வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பேறுகால மரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில:

 1. உலக அளவில் ஒவ்வொரு நாளும் சுமார் 830 பெண்கள் கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் போதான தவிர்க்கக்கூடிய காரணங்களுக்குப் பலியாகின்றனர்.
 2. கர்ப்பகால / பிரசவ கால மரணங்களில் 99% மரணங்கள் வளரும் நாடுகளில் மட்டுமே நிகழ்கின்றன.
 3. கிராமம் மற்றும் பின் தங்கிய சமூகத்தினர் மத்தியில்தான் இந்த கர்ப்பகால/ பிரசவ கால இறப்புகள் ஏற்படுகின்றன.
75% பேறுகால உயிரிழப்புகளுக்கு காரணம்
 • கடுமையான இரத்தப் போக்கு
 • நோய்த்தொற்று
 • கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம்
 • பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்
 • பாதுகாப்பற்ற கருக்கலைப்பு

வீட்டிலேயே பிரசவம் பார்த்தால் மேலே கண்ட பிரச்சினைகளால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும்.


இவ்வகையான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுபவை:

 • வறுமை
 • அருகாமையில் மருத்துவ வசதி கிடைக்கப்பெறாமை
 • கர்ப்பகாலம், பிரசவம் குறித்த முழுமையான அறிவியல் அறிவு கிடைக்கப்பெறாமை
 • போதுமான சேவைகள் கிடைக்கப்பெறாமை
 • கலாச்சார நடவடிக்கைகள்

இந்திய அளவில் மருத்துவமனைகள் சாதித்தது என்ன?

இவர்கள் குறை சொல்லும் அதே மருத்துவமனைகள் இந்திய அளவில் சாதித்தது என்ன என்று கீழ்காணும் தகவலைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

2011-2013

பேறுகாலத்தில் தாய்  உயிரிழப்பு 1,00,000-க்கு 167.

2014-2016

பேறுகாலத்தில் தாய் உயிரிழப்பு 1,00,000-க்கு 130

வடஇந்தியாவில் மருத்துவமனைகள் அதிக அளவில் இல்லாததாலும், மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததாலும் பேறுகால இறப்பு மிக அதிகம். ஆனால், தென்மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா,கேரளா, தமிழ்நாடு ஆகியவை இறப்பு விகிதத்தை மிக மிகக் குறைத்து, மிகப்பெரிய முன்னேற்றமடைந்துள்ளன.

வீட்டிலேயே பிரசவம்ஐக்கியநாடுகள் சபை, 17 சர்வதேச இலக்குகளை முன்வைத்து உருவாக்கிய நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றான பேறுகால மரண விகிதத்தை 1,00,000-க்கு 70 என்ற விகிதத்திற்குக் கீழ் கொண்டு செல்லவேண்டும் என்பதை  தமிழகம், கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்கள் அடைந்துவிட்டன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த இலக்கிற்கு நெருங்கி நிற்கின்றன. இந்தியாவில் பிற மாநிலங்கள் மிகவும் பின் தங்கியே உள்ளன.

தமிழகமும் பிற தென் மாநிலங்களும் முன்னணியில் நிற்பதற்கு முக்கியக் காரணங்கள் இங்கு பரவலாகத் திறக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள்

தமிழகமும் பிற தென் மாநிலங்களும் முன்னணியில் நிற்பதற்கு முக்கியக் காரணங்கள் இங்கு பரவலாகத் திறக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவையே ஆகும். மேலும் இன்று தமிழகத்தில் மிகச்சிறு எண்ணிக்கையை தவிர்த்து விட்டு அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில் தான் நடக்கின்றன.

news 03 03 2017 12mom


பிரசவம்: தமிழகத்தில் நிலை என்ன?

 • கடந்த இருபது ஆண்டுகளில், தமிழ்நாட்டில் பிரசவகால  சிசு இறப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பது,மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது ஆகியவை தான் இதற்கு முக்கியக் காரணம். 2000 – ம் ஆண்டு ஆயிரத்திற்கு 51-ஆக இருந்த பிரசவகால சிசு இறப்பு விகிதம், 2016 -ல் 17-ஆகக் குறைந்துள்ளது.  பிரசவங்களை வீட்டில் பாருங்கள் என்ற முட்டாள்தனமான வழிகாட்டல்களால் இந்த விகிதம்  மீண்டும் உயரத் தொடங்கும்.
png
சிசு இறப்பு விகிதம் – Infant Mortality Rate (IMR) (per 1000 live births)

தமிழக ஆட்சியாளர்கள் சுகாதார மற்றும் மருத்துவத் திட்டங்களை அமல் படுத்துவதில் சற்று கண்டிப்புடன் நடந்து கொண்டதன் விளைவு தான் மருத்துவ வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குவது.

 • Institutional Delivery என்றழைக்கப்படும், முறையான பிரசவ வசதிகளை வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் கேரளவைத் தொடர்ந்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இத்தனை ஆண்டு கால திராவிடக் கட்சிகள் ஆட்சியின் மகத்தான சாதனை இது. தமிழக ஆட்சியாளர்கள் சுகாதார மற்றும் மருத்துவத் திட்டங்களை அமல் படுத்துவதில் சற்று கண்டிப்புடன் நடந்து கொண்டதன் விளைவு தான் மருத்துவ வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குவது. சமீபமாகக் கூட, டெங்கு பரவிய நேரத்தில் வீடு வீடாக வந்து கண்காணித்ததும், உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் நாம் கண் கூடாகப் பார்த்திருக்கிறோம். மருத்துவமனையை நோக்கி செல்ல வேண்டாம் என்ற பிரச்சாரங்கள், கண்டிப்பாக கல்வியறிவில் பின்தங்கிய வடஇந்திய மாநிலங்களின் பட்டியலில் தான் தமிழ்நாட்டை சேர்க்கும்.

2008012259000301

 • மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவுகளைக் குறித்து அறிவீர்கள் அல்லவா? மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த  கொண்டுவரப்பட்ட  நாம் இருவர் நமக்கு இருவர் என்ற திட்டம், இப்போது நாம் இருவர் நமக்கொருவர் என்ற நிலையில் நிற்கிறது. வீடுகளில் பிரசவம் பார்க்க ஆரம்பித்து விட்டால், இது எப்படி சாத்தியம் ஆகும்?  மருத்துவமனைகளில் பிரசவம் ஆன கையோடு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படும். வீட்டுப் பிரசவங்களில் இது சாத்தியமே ஆகாத ஒன்று.
 • கடந்த பத்து வருடங்களாக, தமிழ்நாடு போலியோ இல்லாத மாநிலமாக திகழ்ந்து வருகிறது. காரணம் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் சொட்டுமருந்துகள். இதுவும் வேண்டாம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து போடாதீர்கள் என்று ஒரு வதந்தியும் சென்ற வருடம் பரவியது. இவற்றைப் பார்க்கும் பொழுது இவை தான் மாநிலத்தை சீரழிக்க இலுமினாட்டிகளின் சதியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

hospital kvKI 621x414@LiveMint fe6c

 • இதையெல்லாம் தாண்டி, குழந்தை  பிறந்த உடன் நல்ல நிலையில் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் புகட்ட வேண்டும். பிரசவத்தின் போது தாய்க்கோ குழந்தைக்கோ ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட வேண்டும். இப்படி எதைப் பற்றியும் அக்கறை இல்லாமல் வெறுமனே மருத்துவமனை செல்ல வேண்டாம் என்று மக்களை மடை மாற்றி விடுதல் என்பது முட்டாள் தனம் என்றே சொல்ல வேண்டும்.

உணர்ச்சிவயப்படும் தமிழர்கள்

நிலைமை இப்படி இருக்க, இந்தக் கூட்டத்திற்கு வலுவான ஆதரவாளர்களும் இருக்கின்றார்கள். ஹீலர் பாஸ்கர் கைதான போது கூட, வீட்டிலே சுகப்பிரசவம் பார்க்க ஆரம்பித்து விட்டால் மருத்துவமனைக்கு வருமானம் போய் விடும் என்பதற்காகத் தான் அரசு திட்டமிட்டு அவரைக் கைது செய்துள்ளது என்று கண்டனங்கள் எழும்பின.

ஆனால், ஏன் மக்கள் மருத்துவம், மருத்துவமனை என்றாலே தனியார் மருத்துவமனைகளை மட்டுமே நினைத்துக் கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. சகல வசதிகளோடும் அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் இருக்கின்றன. கருத்தரித்த நாளிலிருந்து கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம் அங்கு கணக்கெடுக்கப்படுகிறது. தடுப்பூசிகளில் தொடங்கி, குழந்தை பிறந்த பின்பு கொடுக்க வேண்டிய சொட்டு மருந்துகளுக்குக் கூட அரசு அட்டவணை போட்டு நினைவு படுத்துகிறது. போதாதற்கு மகப்பேறு உதவித்தொகை திட்டங்கள் வேறு.

102697560 gettyimages 930116088 1

ஏன் வீட்டிலேயே பிரசவம் பார்க்கக்கூடாது?
 • மருத்துவமனைகளை உபயோகப்படுத்திக் கொள்ளாமல், சிறிது கூட பாதுகாப்பற்ற முறையில் வீடுகளிலேயே பிரசவங்களைப் பார்க்க முயல்வதும் அதற்கு மருத்துவம் கார்ப்பரேட்மயம் ஆகிவிட்டது என்று காரணம் சொல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாத முரண்கள்.
 • நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பின் பிரசவ கால மரணங்கள் பல மடங்கு குறைந்திருப்பதற்கு ஏராளமான புள்ளி விவரங்கள் உள்ளன. இத்தனை வருடங்களாகப் போராடி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, இப்போது தான் நோய்கள் பற்றிய மூடநம்பிக்கைகளை நீக்கி, மக்களை மருத்துவமனை நோக்கி வரச் செய்திருக்கிறோம். ஆனால், இவர்கள் நம்மை மீண்டும் கற்காலத்திற்கே இழுத்துச் செல்ல முயல்கிறார்கள்.
 • தமிழ் தேசியம், நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவு, பழந்தமிழர் பண்பாட்டு வகையறாக்கள், அரைகுறையான சூழலியல் புரிதல் என்கிற இந்த களேபரமான கூட்டணியோடு இலுமினாட்டி சதி மற்றும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையும், கை மருத்துவத்தின் மீதான திடீர் நேசமும் சேர்த்து மொத்தமாக, உண்மைத் தமிழர்கள் இதைத் தான் செய்வார்கள் என்று மக்களை உணர்வுப்பூர்வமாக திசைமாற்றி வருகிறது ஒரு கூட்டம்.

தமிழர்கள் எளிதாக உணர்ச்சிவயப்படக் கூடியவர்கள். அன்றிலிருந்து இன்று வரை இது ஒன்று தான் நம் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது. அதனால் எது செய்வதாகினும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

நீடூழி வாழ்க!!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!