- இன்சுலின் என்பது ஒரு புரதமாகும். இதில் 51 அமினோ அமிலங்கள் உள்ளன!
- இரத்தத்தில் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்க இன்சுலின் உதவுகிறது!
இன்சுலின் பற்றி உங்களுக்கு தெரியாத பல்வேறு தகவல்களும் இந்த கட்டுரையில்…
சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க இயலாமை தான்! சர்க்கரை நோயின் பொதுவான ஒரு அறிகுறி என்னவென்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது. இதற்கு முக்கிய காரணம் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனான இன்சுலின் சரியான அளவு உடலில் சுரக்காதது தான்! இப்படி சர்க்கரை பிரச்சினைக்கு காரணமாக இருக்கும் இன்சுலின் பற்றி தெரிந்துகொள்வோம் இங்கே…

இன்சுலின் என்றால் என்ன?
நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் ஆற்றலுக்கு சர்க்கரை தேவை. ஆனால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையால் உடலின் செல்களுக்கு தானாக செல்ல முடியாது. பொதுவாக நாம் உணவைச் சாப்பிட்ட பிறகு, நம் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். உடனே கணையத்தில் உள்ள செல்கள் (பீட்டா செல்கள்) இன்சுலினை உருவாக்கி சுரக்கும்.
இன்சுலின் என்பது ஒரு புரதமாகும். இதில் 51 அமினோ அமிலங்கள் உள்ளன. இந்த இன்சுலின் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையை உறிஞ்ச சொல்லி செல்களுக்கு அறிவுறுத்தும். இப்படி தான் செல்கள் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டில் இருந்து சர்க்கரையை உறிஞ்சி ஆற்றலை பெறும்.
இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது ஹைப்பர்கிளைசீமியா எனப்படும்!
இன்சுலின் வேலை
இது மட்டும் அல்ல இன்னும் சில வேலைகளையும் இன்சுலின் செய்கிறது. ஒரு வேளை நம் உடலில் செல்களுக்கு தேவைப்படுவதை விட அதிகமான சர்க்கரை இருந்தால், இன்சுலின் அந்த சர்க்கரையை அப்படியே கல்லீரலில் சேமிக்க உதவி செய்யும். அதே போல இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் போது அதாவது நாம் வெகு நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது அல்லது நம் உடல் செயல்பாடுகளின் போது அதிக சர்க்கரை தேவைப்படும் போது ஏற்கனவே சேமித்து வைத்த அந்த சர்க்கரையை வெளியிடவும் இன்சுலின் உதவுகிறது. கொழுப்பு செல்கள் கொழுப்பை உருவாக்குவதிலும் இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது.

இன்சுலின் குறைபாடு
ஒரு வேளை உடல் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாவிட்டால் அல்லது உடல் செல்கள் இன்சுலின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயல்படாத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து ஹைப்பர்கிளைசீமியா (உயர் இரத்த சர்க்கரை) ஏற்படும்.
Also Read: உடற்பயிற்சியை ஏன் காலை உணவிற்கு முன்பே செய்ய வேண்டும்? காரணம் இது தான்!
மனித உடலை பொறுத்தவரை சர்க்கரை தான் உடலுக்கு முக்கிய ஆற்றல் என்பதால், செல்களில் சர்க்கரை இல்லாமல் சோர்வு ஏற்படும். அடுத்து, இப்படி இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சர்க்கரை சிறுநீரகத்திற்கு செல்லும். இதனால் சிறுநீரகம் அதன் கையாள கூடிய அளவை விட அதிகப்படியான சர்க்கரையை வடிகட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.
இதனால் சிறுநீரகங்களால் எல்லா சர்க்கரையும் வடிகட்ட முடியாது. விளைவு சர்க்கரை சிறுநீர் வழியாக வெளியேறும்.இதனால் தான் சர்க்கரை நோயாளிக்கு வழக்கத்தை விட அதிக முறை சிறுநீர் வெளியாகும்.

இப்படி அதிகப்படியாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் சோடியம் அளவு குறைய ஆரம்பிக்கும். இது மூளையில் உள்ள தாகத்தை ஏற்படுத்தும் செல்களை தூண்டி அதிக அளவு தாகம் ஏற்படும்.அதிகமாக தண்ணீர் குடிக்க குடிக்க மீண்டும் மீண்டும் அதிக அளவு சிறுநீர் வெளியாகும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது சிறுநீரகத்தை மட்டுமல்ல இதயம், கண்கள், நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை கூட பாதிக்கும்.
அதே போல் இன்சுலின், சர்க்கரையை சேமிக்கா விட்டால், நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும் போது உடலில் சர்க்கரை இல்லாமல் ஹைப்போகிளைசீமியா (இரத்தச் சர்க்கரைக் குறைவு) ஏற்படும்.இதனால் பசி,உடல் நடுக்கம்,வியர்வை,தோல் வெளிறுதல்,சீரற்ற இதய துடிப்பு,தலை சுற்றல்,மயக்கம் போன்றவை ஏற்படும்.
இப்படி தான் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல், சரியான அளவில் வைத்திருக்க இன்சுலின் உதவுகிறது.அதே போல சர்க்கரை நோய் என்பது நம் உடலில் இன்சுலின் சுரக்கும் குறைபாடு தானே தவிர பெயரில் இருப்பது போல நோயல்ல!