நீரிழிவு அறிவியல் பூர்வமாக தீர்க்க முடியாத குறைபாடாக இருக்கிறது. நீரிழிவை சரியான முறையில் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், மற்ற பல நோய்கள் உடலை எளிதில் தாக்கலாம். அதை தடுக்க, நீரிழிவு எப்படி எல்லாம் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
அதிக எடை
நீரிழிவுக்கு முக்கிய காரணம் உடல் எடை தான். அதிலும் கொழுப்பு உள்ள உணவுகள், திண்பண்டங்கள் அதிகம் உண்பவர்களுக்கு உடல் பருமன் எளிதில் அதிகரிக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பவர்களுக்கு இன்சுலினின் தேவையும் அதிகமாக இருக்கும்.
அதற்கேற்றார்போல் உடலில் இன்சுலினை சுரக்கும் கணையம் விரைவில் செயலிழக்க துவங்குகிறது. இவ்வாறு அதிக எடை உள்ள நபருக்கு எளிதில் நீரிழிவு ஏற்படுகிறது.
அது மட்டுமல்லாமல், உடலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சேரும் போது, செல்களின் இயல்பான நிலை மாறுபடுகின்றது. கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் செல்களுக்குள் நுழைய சிரமப்படுகிறது. ஒருவேளை நுழைந்தாலும் கொழுப்புகளால் அடைத்துக் கொள்கிறது. இவ்வாறு இன்சுலின் செயலிழக்கும்.

இன்சுலின் எதிர்ப்பு
உடலில் கொழுப்பு சேரச்சேர, செல்கள் இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை. இன்சுலினை எதிர்க்கின்றன. அத்துடன் ஒருவேளை இன்சுலின் சுரந்தாலும், அது சரிவர வேலை செய்யாது. காரணம் இன்சுலின் ஏற்பான் குறைவாக இருக்கும்.
இதனால் செல்களுக்குள் குளுக்கோஸ் நுழைய முடியாமல் இரத்தத்தில் தங்கி விடும். இவ்வாறு இரத்தத்தில் சர்க்கரை நோய் வந்து விடுகிறது. இது இன்சுலின் எதிர்ப்பு எனப்படும்.
அதிக உடல் எடை, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பும், அடிக்கடி நோய்த் தொற்றுக்கு ஆளாகுபவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு இருக்கும்.
பரம்பரை
நீரிழிவு தற்போது அதிகரித்து வருவதற்கு குடும்ப பாரம்பரியம் முக்கிய காரணமாக உள்ளது. அதாவது பெற்றோர் உடலில் நீரிழிவு பாதிப்பு இருந்தால் அது குழந்தைகளுக்கு எளிதில் கடத்தப்படும்.
ஒவ்வொருவரின் உடலில் உள்ள செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. அவற்றில் தான் மரபணுக்கள் இருக்கும். பெற்றோருக்கு நீரிழிவு இருக்கையில் பிள்ளைகளுக்கும் அது போன்ற மரபணுக்கள் கடத்தப்படும். இவ்வாறு நீரிழிவு குடும்ப பாரம்பரியமாக நீரிழிவு தொடர்கிறது.
மன அழுத்தம்
நீரிழிவின் பெரிய அளவில் தாக்கத்திற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக விளங்குகிறது. அதாவது வேலைப்பழு மற்றும் பிரச்சினைகளால் ஏற்படும் கோபம், கவலை, பயம், பதற்றம், ஏமாற்றம் போன்ற உணர்வுகள் அதிகம் இருந்தால் நீரிழிவு ஏற்படலாம்.
இந்த உணர்வுகள் அடிக்கடி ஏற்படும்போது, அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாக சுரந்து இன்சுலின் செயல்பாட்டை தடுக்கும்.

இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் இரண்டு வகைகளாக உள்ளது. ஒன்று குறை இரத்த அழுத்தம், மற்றொன்று மிகை இரத்த அழுத்தம். உடல் பழுமன் அதிகம் உள்ளவர்களுக்கு மிகை இரத்த அழுத்தம் எளிதில் வந்து விடும். இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கையில், கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உண்டாகும். இது கணையத்தை பாதிக்கும். அப்போது எளிதில் நீரிழிவு ஏற்படும்.
அடிக்கடி கருச்சிதைவு
கர்ப்பமான பெண்களுக்கு ஹார்மோன்களின் வேறுபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுவது வழக்கம். இது பிரசவத்திற்கு பின் சிலருக்கு மட்டும், தொடர் குறைபாடாக மாறிவிடும்.
ஆனால், அப்படி கர்ப்பமாகும் பெண்களுக்கு நீரிழிவு பிரச்சினை அடிக்கடி ஏற்படுவதால் அது நிரந்தர பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.

சினைப்பை நீர்க்கட்டிகள்
இது பெண்களுக்கு ஏற்படும் நீர்கட்டி பிரச்சினை. இதை PCOS(Polycystic ovary syndrome) என்று குறிப்பிடுவர். இந்நோய் “டெஸ்டோஸ்டீரான்” பிரச்சினையால் அதிகமாக ஏற்படுகிறது. பொதுவாக இது உடல் பருமன் உள்ள பெண்களுக்கு பெரும்பாலும் வரும். இந்த நோய் இருப்பவர்களுக்கு நீரிழிவு எளிதில் ஏற்படுகிறது.
வாழ்க்கை முறை
முறையற்ற வாழ்க்கை முறையால் நீரிழிவு எளிதில் ஏற்படும். அதாவது சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு எளிதில் சர்க்கரை அதிகமாகும். அத்துடன் உடலில் கொழுப்பும் அதிகமாகும். இதன் காரணங்களால் கணயம் சேதமடைகிறது. இதனால், நீரிழிவு எளிதில் ஏற்படுகிறது.
இவை அனைத்தும் நீரிழிவு ஏற்படும் காரணங்களாகும். இதை முன்கூட்டியே கவனித்து பாதுகாத்துக் கொண்டால் நாம் சர்க்கரை குறைபாட்டில் இருந்து தப்பிக்க முடியும்.