சரிவிகித உணவு(Balanced diet) ஆரோக்கியமான, நோயில்லா வாழ்க்கைக்கு மிக அவசியம். நம் ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது, நம் உடல் உறுப்புகள் மற்றும் ஒவ்வொரு செல்களும் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்படவும் சரிவிகித ஊட்டச்சத்து மிக அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை நாம் உண்ணவில்லை என்றால் நம் உடல் சோர்வடையும், நாம் செய்யும் வேலையில் ஈடுபாடு குறையவும், நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்சினை ஏற்படாமல் இருக்க நாம் உண்ணும் உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.
நாம் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த உணவுகளை உண்ணாமல், நாவின் சுவைக்கு ஏற்ப நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் சர்க்கரை நோய், இருதய நோய், உடல் பருமன் அதிகரிப்பு போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நிறைய பேர் உடல் எடையை இழப்பதற்கு மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து கொண்ட உணவை தவிர்த்து விடுவார்கள், அது தவறு. ஒவ்வொரு ஊட்டச்சத்தும் நம் உடலின் செயல்பாட்டிற்கு அவசியம். புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் நோய்கள் வராதபடி தடுத்து உடலுக்கு சக்தி அளிக்கிறது. உடல் வலிமைக்கும் ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த உணவு உட்கொண்டால் செரிமானத்திற்கு நல்லது. அதாவது மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றின் கலவையே சரிவிகித உணவாகும். அனைத்து வகையான உணவு பொருட்களையும் தேவையான அளவு உட்கொள்வதே ஊட்டச்சத்துக்கு அடித்தளமாகும். சரிவிகித உணவு அல்லது சீரான உணவு என்பது ஒரு நாளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் போதுமான அளவைக் கொண்ட ஒரு உணவு.
1. காய் மற்றும் பழ வகைகள்:
காய்கறிகள் மற்றும் பழங்களில் அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் நிறைந்த பழங்களைஎடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை அதிகம் நிறைந்தவை. கேன்சர் போன்ற நோய்களையும் வராமல் தடுக்கும்.
2. தானிய வகைகள்:
நாம் அன்றாடம் உட்கொள்ளும்இட்லி, தோசை, இடியாப்பம், சோறு, சப்பாத்தி, ரொட்டி, ஓட்ஸ், ராகி போன்றவை இதில் அடங்கும். இவை அனைத்தும் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது மற்றும் நார்ச்சத்தையும் அளிக்கிறது.
3. இறைச்சி வகைகள்:
முட்டை, கோழி, ஆடு, மீன், இறால், நண்டு போன்ற புரதம் நிறைந்த உணவுகள்.
4. பருப்பு மற்றும் நட்ஸ்:
அனைத்து வகையான பருப்புகள், சுண்டல் வகைகள், பாதாம், வேர்க்கடலை போன்றவை நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அளிக்கிறது.
5. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்:
பால், பன்னீர், சீஸ், தயிர், நெய், மோர் ஆகியவை புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்தவை.
6. எண்ணெய்:
சமையல் எண்ணெய்கள், நெய், வெண்ணை, வெல்லம், தேன், சாக்லேட், ஸ்வீட், ஜாம் போன்றவற்றை நாம் தினசரி சாப்பிடுகிறோம். எண்ணெய் மிகக் குறைந்த அளவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.
பொதுவான சில குறிப்புகள்:
- அனைத்து உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும்.
- முழு தானியங்களை உட்கொள்ளுங்கள்.
- பால் அல்லது தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
- காய்கறிகள் மற்றும் பழவகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.
- உப்பு, எண்ணெய், சர்க்கரை, அளவை குறைக்கவும்.
- மதுபானங்களைத் தவிர்க்கவும்.
- எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை மிகக்குறைவாக எடுத்துக் கொள்ளவும்.
- முளைகட்டிய மற்றும் வேகவைத்த பயறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
- நார்ச்சத்து அதிகம் உள்ள பருப்பு, காய், பழங்களை அதிகமாக உண்ணவும்.