நம் வீட்டில் இருக்கும் பலவித உணவுப் பொருட்களும், எண்ணற்ற மருத்துவத் தன்மைகளைக் கொண்டது. குறிப்பாக, அஞ்சறைப் பெட்டியில் உள்ள அனைத்து வகையான உணவுப் பொருட்களும் அற்புதமான மருத்துவகுணம் கொண்டவை. நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, ‘உணவே மருந்து’ என்ற மரபை பின்பற்றி நாம் வாழ்கிறோம் என்பதே உண்மை. மற்ற நாட்டு உணவுப் பொருட்களைக் காட்டிலும் நம் இந்திய உணவுப்பொருட்கள் ஒவ்வொன்றிலும் பலவித மருத்துவ குணங்கள் ஒளிந்து கொண்டுள்ளது.
மஞ்சள் – மிளகு
மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பாலில் மஞ்சளைக் கலந்து சாப்பிட்டால் பலவித நன்மைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பால் மற்றும் மஞ்சளின் கலவையை “தங்கப் பால்” என்று அழைக்கிறார்கள். பல்வேறு உடல் சார்ந்த நோய்களையும் இது சரி செய்யவல்லது.
அதே போன்று “கருப்பு தங்கம்” என்று கூறப்படும் மிளகும் உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தரக் கூடியது.

மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற மூலப்பொருள் இருக்கிறது. குர்குமின் தான் மஞ்சளின் மருத்துவத்தன்மைக்கு அடிப்படை காரணம். இந்த மூலப்பொருள் பல நோய்களில் இருந்தும்,நோய் தொற்றுகளில் இருந்தும் உடலைக் காக்கிறது. கூடவே இதய நோய்கள், முடக்கு வாதம், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது.
அதே போன்று மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) என்ற மூலப்பொருள் மிளகின் மருத்துவ குணத்துக்கு காரணம். மிளகும் சளித்தொல்லை, இருமல் போன்ற பல்வேறு உடல் பிரச்சினைகளில் இருந்து காக்கிறது. மிளகும் பல்வேறு நன்மை பயக்கக்கூடியது. இவை இரண்டின் (Curcumin + Piperine) வேதி வினை பல வகையான நன்மைகளை உடலுக்கு ஏற்படுத்தக்கூடியதாகும்.
இந்த அற்புத கலவையை வாரத்தின் பல நாட்களில் ரசம் சாப்பிட்டு அதன் மூலம் நமக்கே தெரியாமல் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
புற்றுநோயை குணப்படுத்தும்
தமிழர்கள் காலகாலமாக உட்கொண்ட இவற்றை ஆராய்ந்த அறிவியலாளர்கள், கீழ்கண்டவற்றை கண்டறிந்துள்ளனர்.
20 மில்லி கிராம் பைப்பரின் மற்றும் 2 கிராம் குர்குமின் ஆகியவை எத்தகைய பலனை உடலுக்குத் தருகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியின் முடிவு இது தான்!
- மிளகையும் மஞ்சளையும் சேர்த்து உண்பதால் அது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக மாறுமாம்.
- மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் இவை காக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மேலும் பல நன்மைகள்!
- மஞ்சள்+மிளகு வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
- இவற்றின் கலவை ஜீரணத்தை சீராக்குகிறது.
- குடல் அல்லது வயிற்றுப் பகுதியில் ஏதேனும் வீக்கம் அல்லது புண் ஏற்பட்டால் அவற்றை மிக விரைவிலேயே குணப்படுத்துக்கிறது.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கக்கூடியது. அதனால், உடல் எடையும் குறையக்கூடும்.
- முடக்கு வாதம், கீழ் வாதம், மூட்டு பிரச்சினை ஆகியவற்றிற்கு மஞ்சளும் மிளகும் சிறந்த மருந்தாகும்.

சித்தமருத்துவத்தில் மஞ்சளின் பயன்பாடு நாம் அறிந்தது தான். ஆயர்வேதத்தில் கூட இவற்றின் கலவைதான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. பல ஆயிரம் வருடங்களாக இவற்றைத்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
மஞ்சள் மிளகு பால் செய்முறை
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இனி காண்போம். இந்தப் பாலை நீங்களும் வீட்டில் செய்து குடிக்கலாம். விருந்தும் மருந்தும் மூன்று நாளே என்பதை நினைவில் கொள்ளவும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதையும் நியோதமிழ் வாசகர்கள் மனதில் கொண்டு அளவோடு எந்த மருந்துகளையும் பயன்படுத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.
தேவையானவை :-
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
1/2 தேக்கரண்டி துருவிய இஞ்சி (தேவை இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம்)
1 கோப்பை பால்
1 மேசைக்கரண்டி தேன்
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து விட்டு, பின் அதனுடன் தேனைத் தவிர மற்ற பொருட்களை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அவற்றை வடிகட்டி, சிறிது நேரம் ஆறவிட்டுக் கடைசியாக தேன் சேர்த்து குடிக்கலாம். சூடாக இருக்கும் போது தேன் கலந்துகுடித்தால் பால் விரைவில் கெட்டுவிடக்கூடும்.
Also Read: இஞ்சி டீ உடல்நலத்துக்கு நல்லதா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இவ்வாறு செய்தால் உடல் மிகவும் வலிமை பெரும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல விதமான நோய்களில் இருந்து காக்கும்.