தற்போது வயது வரம்பு ஏதும் இல்லாமல் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக இருக்கின்றது குறட்டை. நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர் வாழ்கின்றோம். எனவே, மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல், அவ்வப்போது அதற்குரிய தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, நோய் வரும் முன்பு உடலை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கணவரின் குறட்டை சத்தத்தினால் விவாகரத்து கேட்ட செய்திகளும் இங்கே உண்டு.
குறட்டை ஏன் வருகிறது?
உறங்கும் பொழுது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இது தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. தொண்டைக்குள் டான்சிலும், மூக்கின் பின்புறம் அடினாய்ட் தசையும் இருக்கின்றது. அவை பெரிதாகும் பொழுது, சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நிலை ஏற்படும். அந்த நெருக்கடியான நிலையால், அழுத்தம் கொடுத்து மூச்சை இழுக்கும் பொழுது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.
குறட்டையினால் இதயம், சிறுநீரகம் இவற்றின் செயல்பாடுகளும் பாதிக்கப்படக்கூடும். ஞாபகமறதி, ஆண்மைக்குறைவு, ரத்த அழுத்த நோய்கள் போன்றவைகளும் ஏற்படக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்கும்போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. சுவாசத்தில் ஏற்படும் இந்த இடையூறு காரணமாக தொண்டையில் உள்ள திசுக்கள் அதிர்ந்து குறட்டை ஒலி எழுப்புகிறது.
குறட்டை வருவதற்கு உடற்பருமன், தொண்டை கோளாறு, வாய் கோளாறு, நாசி கோளாறு, உறக்கமின்மை போன்றவை காரணமாக இருக்கலாம். புகைப் பழக்கத்தினால் குறட்டை தொல்லை அதிகரிக்கும். குறட்டையால் அருகில் உறங்குவோருக்கு உறக்கம் கெடுகிறது. உறங்குவதற்கு முன் மது அருந்தினால் குறட்டை வரலாம். சத்தமான குறட்டை, அடிக்கடி குறட்டை, உறங்கும் போது மூச்சுத்திணறல், காலை எழுந்தவுடன் தலைவலி, வறண்ட தொண்டையுடன் விழித்தல், ஞாபக மறதி, பகல் நேரத்தில் தூக்கக் கலக்கம் ஆகியவை இருந்தால் மருத்துவரை அணுகவும்.
குறட்டைத் தொல்லையில் இருந்து விடுபட உங்களுக்கு பயனுள்ள சில டிப்ஸ்:-
- மது : மது அருந்துவதால், தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே மது அருந்துவதை தவிர்க்கவும். போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள்.
- புகை பழக்கம்: புகை பிடிப்பதால் சுவாசப் பாதையில் எரிச்சல் உண்டாகுவதால் புகை பிடிப்பதை தவிர்க்கவும். புகை பிடித்தால் குறட்டை தொல்லை அதிகரிக்கும்.
- பழங்கள்: உணவில் மெலடோனின் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். எனவே, மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், கமலாப்பழம், அன்னாசிப் பழம், ஆகியவை சாப்பிடலாம்.
- உடல் எடை: உடற்பருமன் உள்ளவர்களுக்கு குறட்டை வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ப, உடல் எடையை வைத்துக்கொள்வதன் மூலம் குறட்டைவிடுவது குறையும்.
- தலை உயர்த்தி படுக்கவும்: நன்கு உயரமான தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து உறங்கவும். தலையை உயர்த்தி வைத்து உறங்கும் பொழுது உங்களால் சீராக சுவாசிக்க முடியும்.
- இஞ்சி: சூடான நீரில் எலுமிச்சை சாறு சிறிது ஊற்றி, அதனுடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம். தினமும் இஞ்சி, துளசி, மிளகு மற்றும் ஏலக்காயை சேர்த்து நீரில் கொதிக்க விட்டு, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனையை தடுக்கலாம்.
- மேல்நோக்கி பார்த்தவாறு உறங்கவும்: முதுகு தரையில் படும்படி படுத்து உறங்குங்கள். குப்புறப் படுப்பதோ, ஒரு களித்து படுப்பதோ மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.
- தூக்க மாத்திரை வேண்டாம்: தூக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கவும்.
- பால்: பால் மற்றும் பால் பொருட்கள் தொண்டை மற்றும் நாசியில் வீக்கம் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும். பால் குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க தேவையில்லை. இருப்பினும், தூங்கும் முன் பால் அருந்த வேண்டாம்.
- தண்ணீர்: உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதால் சளி உண்டாகிறது. இதனால் கூட குறட்டை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆண்கள் 3.7 லிட்டர், பெண்கள் 2.7 லிட்டர் அளவில் ஒரு நாளைக்கு தண்ணீர் பருக வேண்டும்.
- யோகா: யோகா பயிற்சி மேற்கொள்வது மற்றும் மூச்சுப் பயிற்சி நல்ல பலனைத் தரும்.
Note: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவையும் மருத்துவ ஆலோசனையாக கருதக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.