டை கட்டுவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுமா?

0
47

டை கட்டுவது என்பது பல நாடுகளில் இருக்கும் பழக்கங்களில் ஒன்று. இந்தியாவிலும் பல பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. மேலும் சிலர் சொந்த விருப்பத்துடன் கட்டுவதும் உண்டு. அதிலும் கட்டி இருக்கும் டையை இன்னும் இறுக்கமாக்குவது என்பது, வேலையில் தீவிரமாக இறங்குவதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. ஆனால் டை கட்டுவதே உடல் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆம்! டை கட்டுவதால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்ட அளவு குறைகிறது என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. 

Credit: GQ


கீல் பல்கலைக்கழக மருத்துவமனையை (Kiel University Hospital) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டை கட்டும் போது ரத்த ஓட்டம் எந்த அளவு குறைகிறது என ஆராய்ச்சிகள் செய்து கண்டறிந்துள்ளனர். அதன்படி டை கட்டுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தம் குறிப்பிடத்தக்க அளவு குறைகிறதாம்.

டை கட்டுவதால் மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோடிட் தமனிகள் இறுக்கப்பட்டு ரத்த ஓட்டம் குறைகிறது!

இதற்காக நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் டை கட்டிய 15 நபர்களை ஒரு குழுவாகவும், டை கட்டாத 15 பேரை ஒரு குழுவாகவும் உட்படுத்தினர். பிறகு MRI ஸ்கேன் மூலம் அவர்கள் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கண்காணித்தனர். முடிவில் டை கட்டாதவர்களின் ரத்த ஓட்டத்தை விட, டை கட்டியவர்களின் மூளைக்கு ரத்த ஓட்டம் சராசரியாக 7.5% குறைவாகவே நிகழ்ந்துள்ளது.

பாதிப்புகள்

சரி, இந்த 7.5% ஒன்று பெரிய அளவில்லையே என்று தோன்றலாம். இதனால் பெரிய உடல் நிலை பாதிப்புகள் வராது என்றாலும், ஏற்கனவே உடல் பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது. ஆம்! உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள்அதிக வயதானவர்கள், அதிகம் புகைபிடிப்பவர்கள் போன்றோர் நீண்ட காலம் டை கட்டும் போது தலைவலி, மயக்கம்குமட்டல் போன்றவை ஏற்படலாம்.

நமது உடலில் உள்ள தமனிகள் தான் இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் எல்லா உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கின்றனமூளைப்பகுதியான செரிபெரல் பகுதிக்கு செல்லும் ரத்தமானது வலது மற்றம் இடது பக்கங்களுக்கு இரண்டு கரோடிட் தமனிகள் வழியாக செல்கிறது. டை கட்டும் போது இந்த தமனிகள் குறுகுவதால் தான் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிது. மூளைக்கு ரத்த ஓட்டம் என்பது மிக முக்கியம். அப்போது தான் மூளையில் உள்ள செல்கள் அது வேலை செய்யத் தேவையான ஆக்சிஜன், க்ளுகோஸ் மற்றும் தேவையான ஊட்டச்சத்துகளை ரத்தத்தில் இருந்து எடுத்து கொள்ள முடியும்.

Credit: Everyday Health

மேலும் டை கட்டுவது கண் புரை, Glaucoma போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிகரிக்கும். டை கட்டுவதால் கழுத்தில் உள்ள ஜுகுலார் நரம்பில் ரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது. இது கண் நரம்பு அமைப்புகளை பாதிப்பை ஏற்படுத்துவதால் கண் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதன் காரணமாக கண் புரை, Glaucoma போன்ற பாதிப்புகளுக்கான ஆபத்து அதிகமாகிறது. ஒருவேளை ஏற்கனவே இவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தால் இன்னும் நிலைமை மோசமாகும் என்கிறது ஆய்வு.

யோன்செய் பல்கலைக்கழகத்தை (Yonsei Universityசேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இதே சோதனையை வேறு விதமாக செய்துள்ளனர். அதாவது கணினி முன்பு டை கட்டி வேலை செய்ப்பவர்களை வைத்து சோதனை செய்துள்ளனர். செர்விகல் பகுதியின் இயக்கத்தையும் அங்கு உள்ள தசைகளின் (Trapezius muscle) இயக்கத்தையும் அளவிட்டுள்ளனர். டை கட்டாமல் வேலை செய்தவர்களை விட, டை கட்டியவர்களின் கழுத்தின் நெகிழ்வு மற்றும் நீட்சித் தன்மை வெகுவாக குறைந்துள்ளது. இது போல டை கட்டி தொடர்ந்து வேலை செய்யும் போது அவர்களின் தசைகளில் பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இறுக்கமாக கட்டிய டையை தளர்த்தி விட்ட பிறகும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் 5.7% அளவு குறைந்துள்ளது 

செர்விகல் ஸ்பைன் (Cervical spine) என்பது மனிதனின் தண்டுவடத்தில் உள்ள ஒரு பகுதி. இது தான் மண்டை ஓட்டையும் முதுகு பகுதியையும் இணைக்கிறது. மூளையுடனான ரத்த பரிமாற்றதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. 

நோய் பரப்பும் காரணி

மருத்துவமனை போன்ற இடங்களில் டை கட்டும் போது அது இன்னும் பல விளைவுகளை உண்டாக்குகிறதாம். Texas A&M Health Science Center College of Medicine மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட நியூயார்க் மருத்துவமனையை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் டையில் இருந்த கிருமிகளாலேயே முதலில் அவர்களுக்கும், பிறகு அவர்கள் மூலம் நோயாளிகளுக்கும் தொற்று கிருமிகள் பரவியுள்ளன. இது போல் மருத்துவமனையில் ஏற்படும் தொற்றுக்கள் சில சமயம் இறப்பிற்கு கூட காரணமாக அமையும். அண்மையில் அமெரிக்காவில் மட்டும் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 440,000 தொற்றுகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளனர். இதனால் வருடத்திற்கு சுமார் 9.8 பில்லியன் டாலர் செலவும் ஏற்படுகிறதாம்.

இன்னும் சில ஆய்வாளர்கள் செய்த ஆய்வில் இறுக்கமாக கட்டிய டையை தளர்த்தி விட்ட பிறகும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம்  5.7% அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் முடிந்தவரை டையை விட்டு நீங்கள் விலகி இருப்பது தான் நல்லது.