குறிப்பு: இக்கட்டுரையை படிப்போர் வைட்டமின்-டி மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள NeoTamil.com பரிந்துரைக்கவில்லை என்பதை தெரியப்படுத்துகிறோம். இந்த கட்டுரையை முழுதாக படிக்கவும் கேட்டுக்கொள்கிறோம். எந்த மாத்திரை மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
கொரோனா வைரஸ்(SARS-CoV2) தாக்கத்தால் பரவும் கோவிட்-19 (Covid-19) நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளவர்கள் என்பதை இங்கிலாந்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கிலாந்தின் கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஐரோப்பா முழுவதும் குறைந்த அளவு வைட்டமின்-டி தான் கோவிட் -19 நோயால் பலர் இறப்பதற்கு காரணம் என்பதை கண்டறிந்துள்ளது என்று சயின்ஸ் அலர்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.
“COVID-19 நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படும் பலர் வைட்டமின் டி இன் பற்றாக்குறையுடன் உள்ளனர்” என்று கூறுகிறது அந்த ஆய்வு.
நமது உடலில் வைட்டமின்-டி குறைவதற்கு பல காரணங்கள் உண்டு எனினும் உடலில் சூரிய ஒளிபடாமலே இருப்பதுதான் மிக முக்கிய காரணம்.
கடந்த மாதம் researchsquare தளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு முன்கூட்டிய ஆய்வில் விவரிக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி, ஐரோப்பாவின் 20 நாடுகளின் குடிமக்கள் மத்தியில் வைட்டமின் டி அளவு COVID-19 ஆல் ஏற்படும் இறப்பு விகிதங்களுடன் ‘வலுவாக தொடர்புடையது’ என்று கண்டறியப்பட்டது. வைட்டமின்-டி பற்றாக்குறை தான் பலரும் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கவும், பிறகு இறக்கவும் காரணம் என அந்த ஆய்வு கூறுகிறது.
ஆனாலும், இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யவும், அதை மதிப்பீடு செய்யவேண்டியதும் இருக்கிறது. வைட்டமின்-டி சத்தை அதிகரித்தால் கொரோனா வைரஸிலிருந்து மீள மக்களுக்கு உதவுமா என்பது பற்றியும் ஆய்வு செய்ய வேண்டியது இருக்கிறது. அதனால், இந்த ஆய்வை மையமாக வைத்து, மக்களுக்கு வைட்டமின்-டி உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் இப்போதைக்கு பரிந்துரைக்கவில்லை.
வைட்டமின்-டி 90% கிடைப்பது சூரிய ஒளியின் மூலம் தான். பல ஐரோப்பிய நாடுகளிலும் சராசரியாக ஆண்டுக்கு 90 நாட்களுக்கு தான் சூரிய ஒளியே கிடைக்கும். ஐரோப்பாவில் சில நாடுகளில் தான் ஒரு ஆண்டில் அதிகபட்சம் 130 நாட்கள் வெயிலடிக்கும். இது நிச்சயம் வைட்டமின்-டி பற்றாக்குறைக்கு ஒரு காரணம். இதுவும் ஐரோப்பாவில் இறப்பு விகிதம் அதிகரிக்க காரணம்.
இந்தியாவில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி கிடைக்கிறது. இதனால் இந்தியாவில் மக்கள் இயல்பாகவே வைட்டமின்-டி உடையவர்களாக இருப்பார்கள் என்று நினைத்தால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. Indian Journal of Clinical Practice இதழில் 2014-ம் ஆண்டு வெளிவந்த ஆய்வின் முடிவில் ஏறத்தாழ 70 சதவிகித இந்தியர்களுக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பது தெரியவந்தது.
கொரோனா பாதிப்புக்கு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் தனிமைப்படுத்துதல் (Quanrantine) தான் கிருமி பரவலை தடுக்க இருக்கும் ஒரே வழி.
இந்நிலையில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) ஒரு நாளைக்கு 10 மைக்ரோகிராம் வைட்டமின் டி எடுக்குமாறு மக்களுக்கு பரிந்துரைக்கிறது. தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போது, சூரிய ஒளியிடம் இருந்து நாம் பெறக்கூடிய வைட்டமின்-டி கிடைக்காமல் போகிறது என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை (NHS) இணையதளம் தெரிவிக்கிறது.
வைட்டமின்-டி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது ஏற்கனவே பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல முந்தைய ஆய்வுகள் வைட்டமின் டி அளவை உயர்த்தினால், இன்ஃப்ளூயன்ஸா (Influenza) மற்றும் காசநோய் (Tuberculosis) உள்ளிட்ட பிற பொதுவான சுவாச நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்க முடியும் என்கிறது.
சூரிய ஒளியில் இருந்து வைட்டமின்-டி எடுத்துக்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன. அவைகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
குறிப்பு: இக்கட்டுரையை படிப்போர் வைட்டமின்-டி மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள NeoTamil.com பரிந்துரைக்கவில்லை என்பதை தெரியப்படுத்துகிறோம். எந்த மாத்திரை மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சென்ற வாரம் கிருமி நாசினிகள் கொரோனாவை கொள்கிறது என்று கூறியதால் படித்தவர்கள் பலரும் இருப்பதாக நம்பப்படும்(!?) அமெரிக்காவில் சிலர் கிருமி நாசினியை உட்கொண்டு மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.