Home குழந்தைகள் பேரன்பின் ஆதித் துளி... தாய்ப்பால்!! - உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு

பேரன்பின் ஆதித் துளி… தாய்ப்பால்!! – உலக தாய்ப்பால் வார சிறப்புப் பகிர்வு

இயற்கை நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பல விந்தைகளை இவ்வுலகில் விதைத்திருக்கிறது. அதில் ஒன்று தான் உயிரினங்கள் தாய்மை அடைதல். அதிலும் குறிப்பாக பாலூட்டிகள். புதியதாய்ப் பிறக்கும், ஏதுமறியா  சிசுக்களுக்கு  பால் குடிப்பது மட்டும் எப்படித் தெரிகிறது? இது தான் இயற்கையின் விந்தை. குழந்தை வாழ்வின் இறுதி வரையில் திடமாக வாழ்வதற்கான ஆசீர்வாதத்தின் முதல் துளியை தாய்ப்பாலில் தருகிறது இயற்கை.

ஏனைய பாலூட்டிகளைப் போலில்லாமல், மனித இனம் காலம் காலமாக தாய்மையையும், தாய்மையடைவதால் பெண்மையையும் புனிதத் தன்மையோடே  பார்க்கிறது.

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஆதி உணவு தாய்ப்பால் தான். அவன் வாழ்க்கை முழுமைக்குமான ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது பிறந்த உடன் அவன் அருந்தும் தாய்ப்பால் தான். வானளவு மகத்துவம் கொண்ட தாய்ப்பாலையும், தாய்மையையும் போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப் படுகிறது.

தாய்ப்பால் – குழந்தையின் ஆரோக்கியம்

தற்போதைய நவீன சூழலில், பெண்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தல் என்பது அரிதாகி வருகிறது. பரபரப்பான பணிச்சூழல், நின்று பார்க்க நேரமில்லாத வாழ்வின் ஓட்டம் ஆகியவை காரணங்களாக இருந்தாலும், முக்கியமாக தற்போதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல்கள் நேர்கின்றன. மாறி வரும் உணவுமுறைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளே இதற்கு முக்கிய காரணங்களாக  அமைகின்றன.

ஆனால், நம் குழந்தைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்மை என்பது தாய்ப்பால் சரியாகக் கொடுப்பது தான். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, தாதுப் பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகின்றன.

தாய்ப்பாலும் பசும்பாலும்...
தாய்ப் பாலில் மட்டுமே செறிவூட்டப்பெற்ற கொழுப்பு அமிலங்கள் (Poly unsaturated Acid) உள்ளன. பசும் பாலில் இல்லாத இந்த அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.

தாய்ப்பால், பிறந்த குழந்தையின் செரிமான உறுப்புக்களைப் பாதுகாக்கவும், குறைகளைப் போக்கவும் பெரிதும் உதவுகிறது.  குழந்தை பிறந்தவுடன் சில நாட்களுக்கு சுரக்கின்ற சீம்பாலில், தாதுப் பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. இவை குழந்தையின் குடல் பகுதிகளை  அமிலச்சுரப்பினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. குழந்தை இனிமேல் சாப்பிடப் போகும் உணவுகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக பக்குவப்படுத்துகின்றன. தாய்ப்பால் பருகும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வர். இதற்குக் காரணம் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புத்  திறன் தான்.

தாய்ப்பால் குடிப்பதனால், குழந்தைகளின் கன்னம் மற்றும் தாடை எலும்புகள் வலுவடைகின்றன. அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயின் பால், குழந்தையின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.


தாய்ப்பால் – தாய்க்கும் நலம் பயக்கும்

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள் இருப்பதைப் போல தாய்க்கும் நன்மைகள் இருக்கின்றன. முதலாவது, தாய் கருத்தரிப்பதை இயற்கையாக  தள்ளி வைக்கிறது. மேலும் தாய்ப் பால் கொடுப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய் வருவதை தவிர்க்கமுடியும்.

சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும்.

கர்ப்பகாலங்களில் அதிகரித்த உடல் பருமனை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. கர்ப்ப பையை சுருங்கச் செய்து மீண்டும் இயல்பான நிலைமைக்கு கொண்டு வருகிறது.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க…

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் இழக்கும் கலோரியை ஈடு செய்துவிடலாம்.

அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவு வகைகளான அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், மேலும் முளை கட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால் வகைப் பொருட்கள், சுறாமீன், மீன் முட்டை கரு(சிணை) முதலியவற்றை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பேரீச்சம் பழம், திராட்சைப் பழம், வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயா பீன்ஸ், காய்ந்த சுண்டைக் காய், கொத்தமல்லி, சீரகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். மீன்கள் சாப்பிடலாம்.

வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், அதிக புரதம், மாவு சத்துள்ள பொன்னாங்கன்னி கீரை உள்பட அனைத்து கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பால் நிறைய சுரக்கிறது. மேலும் தாய் தினமும் பசும் பால் உட்கொண்டால் தாய்ப் பால் பற்றாக் குறையே இருக்காது.

ஆகவே,  அம்மாக்களே,  வருங்கால அன்னைகளே, அழகு கெட்டு விடுமோ என்ற பயத்தினாலோ, அல்லது வேறு எந்த காரணத்தினாலோ உங்கள் குழந்தையின் வளமான வாழ்விற்கு வரம் அளிக்கும் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.

ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

- Advertisment -
error: Content is protected!!