பொதுவாக நீங்கள் கருப்பு நிறத்தில் இருக்கும் எறும்புகளை அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் எறும்புகளும் இருக்கின்றன. கிராமப்பகுதிகளில் இருந்தால் நீங்களும் பார்த்திருக்கக்கூடும். இந்த சிவப்பு எறும்பு, தீ எறும்பு அல்லது நெருப்பு எறும்பு என்றும் அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இது திருடன் எறும்பு (Thief ant) என்றும் அழைக்கப்படுகிறது.
ஒடிஷா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், சிவப்பு எறும்பு சட்னியை சாப்பிடுகின்றனர். சிவப்பு எறும்புகளை பிடித்து கூடவே பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து இந்த ‘சிவப்பு எறும்பு சட்னி’ தயாரிக்கப்படுகிறது. அவ்வப்போது வரும் ஃப்ளூ காய்ச்சல் (Flu), இருமல், சளி, சுவாச கோளாறுகள், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர பழங்குடி மக்கள் இதை உண்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், ஒடிஷாவை சேர்ந்த பொறியாளர் நயதர் பதியால் என்பவர் சிவப்பு எறும்பு சட்னி கொரோனா வைரஸை எதிர்க்கும் செயல்திறனை கொண்டிருப்பதாக அவர் கடந்த ஜூன் மாதமே கூறியிருந்தார். அவரது பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடுமாறு ஒடிஷா உயர்நீதிமன்றத்தில் நயதர் பதியால் ஒடிஷா மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறதா?
சிவப்பு எறும்பு சட்னியில் ஃபார்மிக் அமிலம் (Formic Acid), புரதம் (Protein), கால்சியம், விட்டமின் பி12, துத்தநாகம் (Zinc) மற்றும் இரும்பு சத்துகள் இருப்பதாகவும் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஒடிஷா மட்டுமல்லாது மேற்கு வங்காளம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சிவப்பு எறும்பு சட்னியை உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக அம்மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஒடிஷா உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த விஷயத்தில் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு ஆயுஷ் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Also Read: எறும்புகளுக்கு காதுகள் உள்ளனவா? எறும்புகள் பற்றி உங்களுக்கு தெரியாத 10 தகவல்கள்!