நீரிழிவு பற்றி பல தகவல்கள் நமக்கு தெரிந்திருக்கும். அப்போது எல்லாம் அதை சர்க்கரை நோய் என்றே நாம் குறிப்பிடுகிறோம். அது நோயா? அல்லது குறைபாடா? என்று உங்களுக்குள் நீங்களே கேள்வி எழுப்பியது உண்டா?
ஒருவருக்கு கண் சரியாக தெரியவில்லை என்றால் அவருக்கு கண் கண்ணாடி அணிய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அது பற்றி நாம் கூறும் போது அவருக்கு பார்வை குறைபாடு உள்ளது என்றே குறிப்பிடுகிறோம். மாறாக அவருக்கு கண்நோய் உள்ளது என்று யாரும் குறிப்பிடுவதில்லை.
அது போன்று தான், ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறது என்றால், அதை நோய் என்று குறிப்பிட முடியாது. அது ஒரு குறைபாடு மட்டுமே. காரணம் அவரது உடலில் இன்சுலின் சுரக்கும் உறுப்பான கணையம் முறையாக செயல்படவில்லை. அதற்கு பதிலாக வெளியில் இருந்து இன்சுலின் அவரது உடலுக்கு செலுத்தப்படுகின்றது.

இன்சுலின் சுரக்கும் கணையம்?
கணையம் 6 முதல் 8 அங்குலம் நீளம் கொண்ட உறுப்பு. இது அடி வயிற்றில் குறுக்கே கிடைமட்டமாக நீண்டு காணப்படுகிறது. இது சிறுகுடலின் முன் பகுதியுடன் இணைந்திருக்கும்.
Also Read:இன்னும் பத்தாண்டுகளில் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் கிடைக்காது !!
நாம் உண்ணும் உணவுகள் சிறு குடலுக்கு செல்கிறது. அங்கு கணையத்தில் உள்ள சுரப்பிகளுடன் கலந்து செரிமானமாகிறது. கணையத்தில் 95 சதவீதம் எக்ஸோகிரைன் திசுக்கள் உள்ளது. இவை செரிமானத்திற்கு உதவும் நொதிகளை உருவாக்கும். இந்த கணையத்தில் ஒவ்வொரு நாளும் 1 லிட்டர் அளவு நொதிகள் சுரக்கின்றன.
மீதமுள்ள 5 சதவீதம் லாகர்கான் என்ற செல்களால் ஆனது. இது இன்சுலின் உட்பட முக்கிய ஹார்மோன்களை சுரக்கிறது. அதில், இரத்ததில் சர்க்கரை அளவு உயரும் போது கணைய பீட்டா செல்கள், இன்சுலினை வெளியிட்டு அதை குறைக்க செய்கின்றன.
இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது கணைய ஆல்பா செல்கள் குளுக்கோக்கான் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. குளுக்கோக்கான் கல்லீரலில் இருந்து குளுக்கோஸை உருவாக்கி இரத்தத்தை சேர்க்கிறது. இவ்வாறு இரத்த சர்க்கரை அளவு சரியாக இருக்கும்.
கணையம் முறையாக செல்படவில்லை என்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு ஏற்பட காரணமாக அமைகின்றது.

நீரிழிவு
நீரிழிவை மூன்று வகையாக பிரிக்கலாம். டைப்-1, டைப்-2 மற்றும் கர்ப்பக்கால சர்க்கரை குறைபாடு.
டைப் 1: கணையத்தால் முற்றிலும் இன்சுலின் சுரக்க முடியாத நிலையில் டைப்-1 என்று குறிப்பிடப்படுகிறது. டைப்-1 நீரிழிவு உள்ள அனைவருக்கும் இன்சுலின் ஊசி தேவைப்படுகிறது. இது பெரும்பாலும் சிறு வயதில் அல்லது இளம் வயதில் கண்டறியப்படும்.
டைப் 2: தேவையான இன்சுலின் சுரக்காத போது டைப்-2 வகை நீரிழிவு என்று குறிப்பிடப்படுகின்றது. இது பெரும்பாலும் பெரியவர்களுக்கே ஏற்படுகிறது. ஆனால், குடும்ப பாரம்பரியம் காரணமாக சிறுவர்களையும் நீரிழிவு பாதிக்க வாய்ப்புள்ளது. டைப் 2 கடுமையாக பாதித்தவருக்கு மட்டும் இன்சுலின் ஊசி தேவைப்படலாம்.
கர்ப்ப கால நீரிழிவு: இது கர்ப்ப காலத்தில் மட்டும் ஏற்படுகிறது. அதன் பின் இது குணமாகலாம். ஆனால் பத்தில் ஒருவருக்கு இது நிரந்தரமாக தொடர வாய்ப்புள்ளது. சிலருக்கு தற்காலிகமாக சரியானாலும், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்
- அதிக சிறுநீர் கழித்தல்
- அதிக தாகம்
- பசி (உணவு உண்டப்பின்பும் அதிகம் பசித்தல்)
- தீவிர சோர்வு
- கண் பார்வையில் குறைபாடு
- காயங்கள் குணமாக தாமதித்தல்
- தூக்கமின்மை
- எடை குறைதல் – உணவு அதிகம் உட்கொண்டாலும் எடை குறைதல் (பொதுவாக டைப்-1ற்கு)
- கைகள்/ கால்களில் கூச்ச உணர்வு, வலி அல்லது உணர்வின்மை (டைப்- 2ற்கு)
Also Read:சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்
குழந்தைகளுக்கு அறிகுறிகள்
குழந்தைகள் அதிக சிறுநீர் கழித்தல், அதிகம் தண்ணீர் அருந்துதல், எடை குறைதல், மற்றும் சோர்வுடன் காணப்படுவர். டைப்-1 நீரிழிவு குழந்தைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை பெற்றோர் உணர்ந்திருத்தல் வேண்டும்.
நீரிழிவு பெரிய நோய் அல்ல. ஆனால், உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், பிற உறுப்புகள் பாதிக்கப்படும். எனவே இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.