கொசுக்கடி ஒன்று போதும் இந்த உலகை வெறுக்க வைப்பதற்கு. நீர் மாசடைவதால் உருவாகும் கொசுக்கள் 13 – க்கும் அதிகமான உயிர்கொல்லி நோய்களைப் பரப்பும் தன்மை கொண்டவை. மலேரியா, டெங்கு காய்ச்சலால் மரணமடைவோரின் எண்ணிக்கை ஆப்பிரிக்க நாடுகளில் வருடாவருடம் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்துவது மணலில் கயிறு திரிப்பதை விடக் கடினமானது. ஏனெனில் கொசுவின் எண்ணிக்கையைக் குறைக்காமல் இது சாத்தியமில்லை.
இதற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த இம்பீரியல் காலேஜ் லண்டனைச் (Imperial College London) சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதுவித யோசனையை முன் வைக்கிறார்கள். இதன் மூலம் கொசுக்களை இவ்வுலகத்திலிருந்து மொத்தமாக அழித்துவிடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கொசுத் தொல்லை
வருடத்திற்கு சுமார் 4,75,000 மக்கள் கொசுக்கடியினால் ஏற்படும் நோய்களினால் இறந்துபோவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனால் வளர்ந்த நாடுகள் கொசுவினை ஒழிக்கப் பெரும் செலவில் முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால், ஆப்பிரிக்கா போன்ற கீழை நாடுகளில் நிலவும் சுகாதாரக் குறைபாடுகளால் மலேரியா, டெங்கு போன்றவை பெரும் உயிர்ச் சேதத்தினை விளைவிக்கின்றன.
புது ஆராய்ச்சி
இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கொசுக்களின் மரபணுக்களை மாற்றியமைக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்கள். இந்த முறைக்கு ஜீன் டிரைவ் (gene drive) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அனோபிலஸ் காம்பியே (Anopheles Gambiae) எனப்படும் மலேரியாவைப் பரப்பும் கொசுவினை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, பெண் கொசுவினில் உள்ள மரபணுவை ரசாயனம் மூலம் மாற்றியமைக்கலாம் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மரபணு மாற்றமானது பெண் கொசுக்களை முட்டையிடாமல் செய்து விடும். எனவே புதிய கொசு உற்பத்தி இருக்காது.
எல்லா வகையான கொசுக்களையும் மரபணு மாற்றத்தின் மூலம் முட்டையிடாமல் செய்துவிடலாம். வெகு காலத்திற்கு முன்பே இந்த ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டாலும் கொசுக்களின் மரபணு மாற்றங்கள் இயற்கையாகவே சரி செய்து கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதால் சாதகமான முடிவினை எட்ட முடியவில்லை.

8 தலைமுறைகள் கழித்து…
இந்த ஆராய்ச்சியின் மூலம் பெண் கொசுவின் கருத்தரிக்கும் மரபணுவில் மாற்றம் ஏற்படுத்தப்படும். இதனால் கொசுவின் மரபணுவானது அடுத்த சந்ததிக்குத் தகவல்களைக் கடத்தும்போது கருத்தரித்தல் மற்றும் முட்டையிடுதல் போன்ற விடயங்களை கடத்தாது. இதன் மூலம் 8 – ஆம் தலைமுறையில் கொசு முட்டையிடுவது சுத்தமாக நிறுத்திவிடும். கொசுக்களின் உற்பத்திக்கு இந்த ஆராய்ச்சி முற்றுப்புள்ளி வைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எப்படியோ கொசு ஒழிந்தால் போதும் என்கிறீர்களா?
Don’t miss this