தொடர்ந்து நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தினால் உடல் பாதிக்கப்படும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை’ என்கின்றன பெரு நிறுவனங்கள். எப்போதும் கைபேசியின் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பது கண்டிப்பாக நம் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தான்.
’நான் பத்து வருடத்துக்கும் மேலாக செல்போன் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு எந்த பாதிப்பும் வரவில்லையே’ என்று பலர் எதிர்வாதமும் செய்யலாம். ஆனால், அதிகளவில் செல்போன் பயன்படுத்தும்போது, நமது உடலில் உண்டாகும் மாறுதல்களை நாமே கவனித்திருப்போம். இப்போதெல்லாம் எத்தனை மணிக்கு தூங்குகிறீர்கள்? இந்த ஒரு கேள்வி போதுமே. பாதிப்புகளுக்கு ஆதாரம் நாம் தான்!

செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்பட்டால் தான் பாதிப்பு என்பதில்லை. தலைவலி, எரிச்சல், சோர்வு, பதற்றம் போன்றவை தோன்றினாலும் பாதிப்பு தான். ’பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகளைத் தவிர வேறு யாருக்கும் பாதிப்பில்லை’ என்றுதான் அதை முதலில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், அவற்றால் நமது சூழலே மாறி விட்டதை அவர்களால் மறுக்க முடியுமா?
ஆய்வு முடிவுகள், நீல ஒளிக்கற்றைகள் நம் பார்வைத் திறனை இழக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகத் தெரிவிக்கின்றன.
அதிக வெளிச்சம் கொண்ட கைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளின் திரையை நாம் பார்க்க நேரிடும் போது அவற்றிலிருந்து வெளிவரும் நீல ஒளிக்கற்றைகள் நம்மைத் தாக்குகின்றன. நாம் நாள் முழுவதும் அத்தகைய ஒளியைப் பார்த்துக் கொண்டு இருப்பதில்லை. அதனால் அது எத்தகைய தீங்கை நமக்கு விளைவிக்கும் என்பது குறித்தும் தெளிவாக ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.
தற்போதைய ஆய்வு முடிவுகள், இத்தகைய நீல ஒளிக்கற்றைகள் நம் பார்வைத் திறனை இழக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகத் தெரிவிக்கின்றன. முந்தைய ஆய்வுகள், நீல ஒளி எவ்வளவு ஆபத்தானது என்பதை மட்டும் தான் தெரிவித்திருந்தன. ஆனால், டோலிடோ பல்கலைக்கழக (University of Toledo) ஆய்வாளர்கள், இந்த நீல ஒளி எவ்வாறு நம் மூலக்கூறுகளை நஞ்சாக மாற்றுகிறது என்பதற்கான விளக்கத்தை வெளியிட்டிருக்கின்றனர்.

நமது கண்களின் செல்கள் மீது படும் இந்த மின்னும் நீல ஒளிக்கற்றைகள், அவற்றின் முக்கிய மூலக்கூறுகளை நஞ்சாக மாற்றுகின்றனவாம். இது உலக அளவில் பார்வைத்திறன் இழப்பிற்கு முக்கியக் காரணியாக விளங்கும், தசைச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறதாம்.
“நாங்கள் தொடர்ந்து நீல நிற ஒளியை ஆய்வுக்குட்படுத்தினோம் , கண்ணின் கருவிழி மற்றும் லென்சினால் அதைத் தடுக்கவோ அல்லது பிரதிபலிக்கவோ முடியவில்லை.” என்று வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் துறைத் துணைப் பேராசிரியரும் மேற்கண்ட ஆய்வுக்குழுவின் உறுப்பினருமான அஜித் கருணாரத்ன (Ajith Karunarathne) கூறினார்.
விழித்திரையில் உள்ள ஒளிப்பதிவுச் செல்கள் (Photoreceptor cells) இறக்கும் போது தசைச் சீர்கேடு ஏற்படுகிறது. அத்தகைய செல்கள் இறந்துவிட்டால், இறந்தது தான். மீண்டும் அவை உருவாகாது என்கிறார் ஆராய்ச்சி மாணவர் ரத்னாயக் (Rathnayak).
இதில் ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், விழித்திரையில் இருக்கும் மூலக்கூறுகள், இந்த நீல ஒளிக்கற்றைகள் தாக்கி இறந்து விட்டால் அவை நஞ்சாக மாறி உடலின் மற்ற செல்களையும் பாதிக்கும். ஆனால், நீல ஒளிக்கற்றைகள் விழித்திரை மூலக்கூறுகளை மட்டுமே பாதிக்கின்றன. மற்ற செல்களுக்கு அவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

மேலும், பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஒளிகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கருணாரத்ன தெரிவித்தார். நீல நிற ஒளி மூலம் விழித்திரையில் உருவாகிய நஞ்சு மட்டுமே கொடியதாம். இந்த நீல ஒளி எந்தவொரு செல் வகையையும் கொல்லுமாம்.
பொதுவாக, நம் கண்களில் ஒரு மூலக்கூறு உள்ளது. இது ஆல்ஃபா டோகோபரோல் (alpha tocopherol) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு இயற்கையான நோயெதிர்ப்பு செல் தான். ஆனால், வயது முதுமையோ அல்லது குறைந்த நோய் எதிர்ப்புத் திறனோ இருந்து விட்டால், நீல ஒளியின் பாதிப்பிலிருந்து நம்மை யாராலும் காக்க முடியாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இருளில் கைபேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்திக் கொள்ளுங்களேன்.
சிறப்பு சன்கிளாஸ்களை உபயோகிப்பதன் மூலம் புற ஊதாக் கதிர்களிடம் இருந்தும், நீல ஒளியிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கலாம். ஆனால், இது முயற்சி தானே தவிர தீர்வல்ல என்கிறார் கருணாரத்ன.
இவ்வளவு எதற்கு, இருளில் கைபேசி மற்றும் மடிக்கணினி போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்திக் கொள்ளுங்களேன். எப்படியும் நிம்மதியான உறக்கத்திற்கு நாம் எதையேனும் செய்யத் தானே வேண்டும்.
Also Read: அதிகநேரம் செல்போன் உபயோகித்தால் “கொம்பு முளைக்கும்” – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை