ஜான்சன் அண்ட் ஜான்சன்(Johnson and Johnson) ஒரு அமெரிக்க நிறுவனம். 1886 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளுக்கான பொருட்களுடன்,பெண்கள் நலன் சார்ந்த தயாரிப்புகள்,சருமம் மற்றும் தலைமுடி பாதுகாப்பு, மருத்துவ கருவிகள் மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிக்கிறது. ஆனால் பவுடரால் புற்றுநோய் என்ற புகார்கள் வெகு காலமாகவே இருக்கின்றன. ஏனெனில் இந்தப் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் துகள் கலந்திருப்பதாகவும் அதனால் நுரையீரல் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதாகவும் பலர் வழக்கு தொடந்துள்ளனர். ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மறுத்துக் கொண்டே வந்தது.

இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கல்நார் கலந்துள்ளது குறித்து ரியூட்டர்ஸ் (Reuters) பத்திரிக்கை அண்மையில் கட்டுரை ஒன்றை வெளிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) கலந்திருந்தது அந்த நிறுவனத்திற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சோதனைகளின் போது தெரிந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து உற்பத்தி செய்து விற்பனையும் செய்துள்ளது. இந்த செய்தி சென்ற வாரம் வெளியான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் நியூயார்க் பங்குசந்தையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பங்குகளின் மதிப்பு 4500 கோடி டாலர் சரிந்துள்ளது. அதன் இந்திய ரூபாயின் மதிப்பு 32,364 கோடி ஆகும். மேலும் அதன் பங்குகள் விலையும் 11% சரிந்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் துகள் இருப்பது தெரிந்தும் அதனை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது இப்போது தெரியவந்துள்ளது. பவுடரில் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.
வழக்குகள்
டெக்சாஸ் நகரைச் சேர்ந்த டார்லின் காக்கர் என்பவருக்கு 52 வயதான போது நுரையீரலில் புற்றுநோய் ஏற்பட்டது. இந்தப் புற்றுநோய்க்கான காரணத்தை ஆராய்ந்தபோது, ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் தான் காரணம் என தெரிய வந்தது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் தான் இதற்கு காரணம் என்று அறிந்து 1999 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமோ இதனை முற்றிலுமாக மறுத்தது. வழக்கில் தோல்வி அடைந்த டார்லின் 2009 ஆம் ஆண்டு நோயின் தீவிரத்தால் இறந்தும் விட்டார். ஆனால் அவர் நிரூபிக்கப் போராடிய ஆதாரங்கள் இப்போது கிடைத்துள்ளன. 1972 முதல் 1975 வரை இந்த பவுடர் மூன்று முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆஸ்பெஸ்டாஸ் பவுடர் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஷவர் டு ஷவர் பவுடர்களைப் பயன்படுத்தி புற்றுநோய் வந்ததாக இதுவரை 11,700 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனாலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் இவற்றைத் தொடந்து மறுத்து வந்தது.
பாதிக்கப்பட்ட 4700 பேருக்கு தலா 20 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த இவா எச்வெரியா (Eva Echeverria) என்பவர் தனக்கு ஏற்பட்ட கர்ப்பப்பை புற்றுநோய்க்கு அவர் 11 வயதில் இருந்து உபயோகப்படுத்திய
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் தான் காரணம் என்று அறிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இவாவிற்கு 417 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது போல பலருக்கு இந்த நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டு ப்ளூபர்க் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்விலும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தரமற்ற தயாரிப்புகள்
பவுடர் மட்டும் இல்லை. இந்த நிறுவனம் தயாரித்த செயற்கை இடுப்பு மூட்டினால் பல உடல் பிரச்சனைகள் வருவதாக இந்தியாவில் பல புகார்கள் எழுந்ததுள்ளது. இது குறித்து பின்பு நடந்த விசாரணையில் 2010 ஆம் ஆண்டே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்நிறுவனம் தயாரித்த செயற்கை இடுப்பு மூட்டுகளை திரும்ப பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனாலும் இந்தியாவில் தொடர்ந்து விற்பனை செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 4700 பேருக்கும் தலா 20 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. செயற்கை இடுப்பு மூட்டின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் என்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை மருத்துவ செலவுகளையும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அளிக்க வேண்டும் சென்று மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு உத்தரவிட்டது.

பாதிப்புகள்
டால்கம் பவுடரில் டால்க் (Talc) எனப்படும் கனிமம் உள்ளது. இந்த டால்க் கனிமத்தில் மக்னீசியம், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை உள்ளன. சில டால்க்களில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருக்கும். இந்த ஆஸ்பெஸ்டாஸ் தான் நுரையீரல், மூச்சுக்குழல், கர்ப்பப்பை, இடைத்தோல் புற்றுநோயை உருவாக்கும். ஆனாலும் ஆசியாவிலும் இந்தியாவிலும் பல தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் கல்நார் பயன்பாடு இப்போதும் உள்ளது. இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட கிண்டர் ஜாய், ஜெல்லி மிட்டாய்கள் போன்றவை இன்னும் இந்தியாவில் இன்னும் தடை செய்யப்படவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.