நவீன உலகில் மக்கள் பற்பல மாற்றங்களையும், புதிய பல தேவைகளையும் எதிர்கொண்டு வாழப் பழகிவிட்டனர். பணம் ஒன்றே தலையாய தேவை என்று ஓடுவதால் வாழ்க்கையில் சோர்வுடன் கூடிய சலிப்புத்தன்மை வந்துவிட்டது. நண்பர்களுடன், பெற்றோருடன் உரையாட, உறவாட நேரமில்லை. மன அழுத்தம் தான் இன்று பல நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.
நம்மில் பலருக்கும் தெரியும் ஜப்பானியர்கள் எவ்வளவு சுறுசுறுப்பானவர்கள் என்று. பணி நிமித்தம் அவர்கள் பேணுகின்ற ஒழுக்கமும் தெரியும். வேலைப்பளுவுக்கு இடையில் நம்மைப் போல் அவர்களும் சோர்வடையவே செய்கிறார்கள். புத்துணர்ச்சியை பெற நாம் இன்னும் குளிர் பானங்களையே நம்பிக்கொண்டிருக்கையில் ஜப்பானியர்கள் பைசா செலவில்லாமல், அதாங்க… தண்ணீர் கூட இல்லாமல் பசுங் காடுகளில் குளிக்கப் பழகிவருகின்றனர்.
இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், நாமும் கூட நமக்கு அருகில் உள்ள பசுமையான காட்டில் ஜப்பானியர்களை போன்றே பைசா செலவில்லாமல் காட்டுக்குளியல் செய்து புத்துணர்ச்சியை பெறலாம். இதைப் பற்றி இங்கே விளக்கமாகக் காணலாம்.
காட்டுக் குளியல் என்றால் என்ன?
காட்டுக் குளியல்/வனக் குளியல் (Shinrin-yoku – ஜப்பானிய மொழியில், Forest Bathing – ஆங்கிலத்தில்) என்பது நாம் மரங்கள் சூழ்ந்த இடத்தில் இருப்பது, நடப்பது, சூழலை கவனிப்பது, நம்மை மறப்பது, மறந்து ஓய்வெடுப்பது ஆகியவை தான். மிகவும் எளிமையானது.

நமது அரசுகள் போல் அல்லாது, 1982-லேயே காட்டுக் குளியல், ஜப்பானில் தேசிய பொது சுகாதார திட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஜப்பானிய அரசின் வனத்துறை அமைச்சகம் இதை ஒரு சிகிச்சையாக அறிவித்து, மக்களிடம் எடுத்துச் சென்றது. இயல்பாகவே இயற்கையை நேசிக்கும் ஜப்பானியர்கள் விரைவிலேயே இதை விரும்பிச் செய்யத் தொடங்கினர்.
காட்டுக் குளியல் – மூலமாக இதயத் துடிப்பு சீராவதும், இரத்த அழுத்தம் குறைவதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
மேலும், மன-அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து, நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து, ஒட்டுமொத்த உடல் நலனை/உணர்வுகளை மேம்படுத்தி வருவதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
காட்டு மரங்களோடு இருந்து, செல்பேசி விடுத்து நம்மையும் மறந்து, பசுமை நிறை காற்றை சுவாசித்து, ரசித்து ஓய்வெடுத்து திரும்பி வந்தால் இதயத் துடிப்பு சீராவதும், இரத்த அழுத்தம் குறைவதும் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும், மன-அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன் உற்பத்தியைக் குறைத்து, நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து, ஒட்டுமொத்த உடல் நலனை/உணர்வுகளை மேம்படுத்தி வருவதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
காட்டுக்குளியல் நன்மைகள்
சுற்றுச்சூழல் சிகிச்சைக்கு (Eco-theraphy) ஆதாரமாக ஏற்கனவே பல்வேறு அறிவியல் சான்றுகள் உள்ளன. இப்போது காட்டுக் குளியலுக்கும் பல்வேறு சான்றுகள் ஆய்வு முடிவுகளையொட்டி வெளிவந்திருக்கின்றன.
2004-2012 வரை ஜப்பான் இதற்காக 4 மில்லியன் டாலர்களை செலவிட்டு ‘காட்டுக் குளியல்’ எவ்வாறு மனிதர்களின் உடலியலிலும், உளவியலிலும் நல்ல மாற்றங்களை தருகிறது என்பது பற்றி அறிய ஆய்வுகளை நடத்தியது.
இதற்கு காரணம் என்னவென்று கண்டுபிடித்த அறிஞர்கள், வன வளிமண்டலத்தில் புத்துணர்ச்சி தரக்கூடிய காற்றை நாம் சுவாசிக்கும்போது, அதிகளவு ஃபைடான்சைடு (Phytoncide) உள்ளே செல்கிறது. இவ்வாறு உள்ளே சென்ற ஃபைடான்சைடு நமது நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்று ஆய்வின் முடிவில் தெரிவித்திருந்தனர்.
ஃபைடான்சைடு என்பது பல்வேறு எண்ணெய்களால் ஆனது. இது பொதுவாக தாவரங்கள், சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். ஃபைடான்சைடை வெளியிட்டு மரங்கள் தங்களை பூச்சிகளிலிருந்தும் வண்டுகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்ளும்.
ஆய்வு மேலும் கூறுவது…
டோக்கியோவில் உள்ள நிகோன் மருத்துவப் பள்ளியில் பேராசிரியரான க்விங் லி, காடுகளுக்கு செல்லும் முன்பும், சென்ற பின்பும் மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருக்கும் மனித இயற்கை கொலையாளி (Natural Killer Cells) உயிரணுக்களின் செயல்பாட்டை அளந்தார்.
இந்த செல்கள் வைரஸ்-பாதிக்கப்பட்ட உயிரணுக்களை விரைவாக குணப்படுத்துவதுடன், கட்டிகள் உருவாகாமல் தடுப்பதாகவும் கண்டறிந்துள்ளார். இதனால் மேம்படும் நோய் எதிர்ப்புத் திறன் புற்றுநோய் தடுக்கவும் வல்லது என்கிறார் பேராசிரியர் க்விங் லி.
வனக்குளியலுக்கு பின்னர் வரும் வாரங்களில், மனிதர்கள் மனதிலும் நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதாகவும் ஆய்வுகளின் மூலம் அறிய முடிகிறது.
காட்டில் உங்களை மூழ்கடித்து, அதன் காட்சிகள், ஒலிகள் மற்றும் வாசனையை அனுபவித்து, பல உளவியல் மற்றும் உடலியல் நன்மைகளை நீங்கள் அறுவடை செய்யலாம்.
காட்டுக்குளியலின் மகத்துவம் அறிந்துகொண்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளில், காட்டு சிகிச்சை முறை என பெயரிட்டு ‘வன சிகிச்சை வழிகாட்டி’ பயிற்சிகள் அளித்து, சான்றிதழ்கள் வழங்குகின்றனர். இந்த பயிற்சிக்கான கட்டணம் சுமார் 3 லட்சம் இந்திய ரூபாய்கள்.
இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால், அது தரும் மர்மமான சக்தியை பெற்று, நாம் மகிழ்ச்சியாய் வாழலாம். அதனால், நாமும் இனிமேல் சில மாதங்களுக்கு ஒரு முறையாவது வனவாசம் செல்வோம்.
மதுவைத் தவிர்த்து, காட்டுக்கூச்சல் போடாமல் காட்டுக் குளியல் போடுவோம்.